இந்தியா - ரஷ்யாவை சீனாவிடம் இழந்துவிட்டோம்.. போட்டோ போட்டு புலம்பும் டிரம்ப்! பெரிய ட்விஸ்ட்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நமக்கு 50 சதவீத வரிகளை விதித்தார். அதுமட்டுமின்றி நம் நாட்டின் பொருளாதாரத்தை டிரம்ப் கடுமையாக விமர்சனம் செய்தார். இதனால் நம் நாடு சீனாவுடன் கைகோர்த்துள்ளது. இந்நிலையில் தான் இந்தியா மற்றும் ரஷ்யாவை சீனாவிடம் இழந்து விட்டோம் என்று புலம்பி டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருப்பது சர்வதேச அரசியலில் கவனத்தை ஏற்படுத்தி உள்ளது.
நம் நாடு அமெரிக்காவுடன் நெருக்கமாக உறவை பின்பற்றி வந்தது. குறிப்பாக கடந்த ஜனவரியில் அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்புடன், பிரதமர் மோடிக்கு நல்ல நட்பு இருந்து வந்தது. இதனால் இருநாடுகள் இடையேயான உறவு இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.

மாறாக அமெரிக்கா - இந்தியா இடையேயான உறவில் பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கு டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு விதித்த 50 சதவீத வரி தான் முக்கிய காரணம். நம் நாட்டுடன் இருக்கும் அமெரிக்காவின் வர்த்தக பற்றாக்குறை மற்றும் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை சுட்டிக்காட்டி இந்த வரியை டிரம்ப் விதித்தார்.
மோடி - புதின் - ஜி ஜின்பிங்
இதனால் நம் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு செல்லும் ஏற்றுமதி பெரும் சரிவை சந்தித்து வருகிறது. இந்த வரி விதிப்பை நம் நாடு கடுமையாக எதிர்த்தது. இருப்பினும் டிரம்ப் இறங்கி வராததால் நம் நாடு அடுத்தக்கட்ட நடவடிக்கையை தொடங்கியது. அதன்படி நம் நாடு சீனாவுடன் கைகோர்த்துள்ளது. இருநாடுகள் இடையேயான பகையை மறந்து சீனாவும், நம்முடன் சேர்ந்து செயல்பட முன்வந்துள்ளது.
அதன்படி பிரதமர் மோடி கடந்த 31 மற்றும் 1ம் தேதி சீனாவின் தியான்ஜின் நகரில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்றார். அப்போது சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோருடன் தனித்தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
டிரம்பின் தூக்கம் போச்சு
மேலும் அவர்கள் 3 பேரும் சேர்ந்து சிரித்தபடி பேசிக்கொள்ளும் போட்டோ வெளியானது. இது டிரம்பின் தூக்கத்தை கெடுத்தது. அமெரிக்காவுக்கு எதிராக சீனா, ரஷ்யா, இந்தியா கைகோர்த்து இருப்பதை டிரம்பால் ஏற்க முடியவில்லை.
இந்நிலையில் தான் தியான்ஜின் நகரில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் சேர்ந்து இருக்கும் போட்டோக்கள் இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த போட்டோவில் ஒன்றை இன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்தியா - ரஷ்யாவை இழந்துவிட்டோம்
மேலும் அந்த பதிவில் டொனால்ட் டிரம்ப், ‛‛நாம் இந்தியாவையும், ரஷ்யாவையும் இருண்ட சீனாவிடம் இழந்துவிட்டது போல் தெரிகிறது. அவர்கள் ஒன்றாக நீண்டகால மற்றும் வளமான எதிர்காலத்தை கொண்டிருக்கட்டும்'' என தெரிவித்துள்ளார். இதன்மூலம் சீனாவுடன், இந்தியா - ரஷ்யா நெருங்கி செயல்படுவதை டிரம்பால் ஏற்க முடியவில்லை. இதனால் அவர் சமூக வலைதளங்களில் புலம்ப தொடங்கி உள்ளார்.
டிரம்ப் இந்தியாவை சீண்டும்போதும் பல அமெரிக்க தலைவர்கள் வேண்டாம் வேண்டாம் என்றனர். ஏனென்றால் இந்தியாவை சீண்டினால் அவர்கள் சீனாவுடன் கைகோர்ப்பார்கள். இது ஆசியாவில் அமெரிக்காவுக்கு சவாலை ஏற்படுத்தும் என்று எச்சரித்தனர். ஆனால் டிரம்பை அதனை கண்டுக்கெள்ளாமல் கண்மூடித்தனமாக வரிகளை விதித்தார். இப்போது சீனாவுடன் கைகோர்த்த இந்தியா, ரஷ்யாவை இழந்துவிட்டோம் என்று புலம்ப தொடங்கி உள்ளார்.
கருத்து சொல்ல விரும்பாத இந்தியா
இதுபற்றி இன்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கேள்வி கேட்கப்பட்டது. அப்போது வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், ‛‛டொனால்ட் டிரம்பின் தற்போதைய பதிவு பற்றி எந்த கருத்து சொல்லவும் நாங்கள் விரும்பவில்லை'' என்றார். இருப்பினும் தொடர்ந்து ரஷ்யா மற்றும் இந்தியாவை எதிர்த்து வந்த டிரம்ப் தற்போது திடீரென்று இப்படி புலம்பி இருப்பது சர்வதேச அரசியலில் கவனம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications