டிரம்ப் கட்டவிழ்த்த பேரழிவின் ராட்சசன்.. "பங்கர் பஸ்டர்" ஏன் ஆபத்தானது! உலக போரே தொடங்கிடும்?
வாஷிங்டன்: மத்திய கிழக்கில் இருந்த மோதல் இப்போது அடுத்த கட்டத்திற்குச் சென்றுள்ளது. ஈரானின் மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது நேரடியாக 'பங்கர் பஸ்டர்' பாமை வைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. அதென்ன 'பங்கர் பஸ்டர்' பாம்.. இது எந்தளவுக்கு அழிவை ஏற்படுத்தும் திறன் கொண்டது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
இஸ்ரேல் ஈரான் இடையேயான மோதல் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாகத் தொடர்கிறது. இத்தனை நாட்கள் ஈரானும் இஸ்ரேலும் தான் மாறி மாறி தாக்குதல் நடத்தி வந்தன. இந்தச் சூழலில் தான் திடீரென அமெரிக்கா இதில் உள்ளே வந்து தாக்குதலை நடத்தியுள்ளது. ஈரானின் 3 அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலில் அமெரிக்கா பங்கர் பஸ்டர் பாமை பயன்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது. அதென்ன பங்கர் பஸ்டர் பாம்.. இது எந்தளவுக்கு அழிவை ஏற்படுத்தும்.. இது ஏன் ஆபத்தானது என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
'பங்கர் பஸ்டர்' என்றால் என்ன?
'பங்கர் பஸ்டர்' என்பது பொதுவாக நிலத்திற்கு அடியில் ஆழமாக ஊடுருவிச் சென்று வெடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட குண்டுகளைக் குறிக்கிறது. குறிப்பாக இது GBU-57A/B மாஸிவ் ஆர்டனன்ஸ் பெனட்ரேட்டர் (Massive Ordnance Penetrator) வகையைச் சேர்ந்தது. இது 30,000 பவுண்டுகள் (13,600 கிலோ) எடை கொண்டது. பூமிக்கு அடியில் பல அடி தூரத்தில் ஆழமாக உள்ள சுரங்கங்களை அழிக்கும் திறனைக் கொண்டதாக இது இருக்கிறது.
6.6 மீட்டர் நீளம் கொண்ட இந்த குண்டு, ஸ்டீல் கவரை கொண்டதாக இருக்கிறது. மேலும், நிலத்திற்கு அடியில் ஊடுருவும் வரை காத்திருந்து, அதன் பிறகு தானாக வெடிக்கும் வகையில் சிறப்பு அமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த GBU-57 குண்டு வெடிப்பதற்கு முன்பு சுமார் 200 அடி (61 மீட்டர்) வரை பாறை அல்லது கான்கிரீட்டை கூட ஊடுருவிச் செல்லும் திறன் கொண்டது. இது மற்ற குண்டுகளை விட அதிக ஆழத்தில் ஊடுருவும் திறனைக் கொண்டது.
துல்லியமாகத் தாக்கும்
இந்த வெடிகுண்டு குறித்து ஏவுகணை ஆய்வாளர் மசாவோ டல்கிரென் கூறுகையில், "அதிகப்படியான அதிர்ச்சி மற்றும் அழுத்தம் ஏற்பட்டாலும் கூட இந்த வெடிகுண்டு வெடிக்காது. பாறைகள் கடினமான கற்கள் என எதுவாக இருந்தாலும் அதைத் துளைத்துச் செல்லும் வகையில் இந்த வெடிகுண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது" என்றார்.
நிலத்திற்கு அடியில் ஆழத்தில் இருக்கும் இலக்குகளை அழிக்கும் திறன் கொண்ட ஒரு வெடிகுண்டு வேண்டும் என்பதை உணர்ந்த அமெரிக்கா 2000களின் தொடக்கத்தில் இந்த வெடிகுண்டு குறித்த ஆய்வில் இறங்கியது. இந்த வெடிகுண்டை டிசைன் செய்யும் பணிகளே பல ஆண்டுகள் வரை நீடித்தது. பல்வேறு சோதனைகளுக்குப் பிறகு இந்த வெடிகுண்டை உற்பத்தி செய்யும் ஆர்டரை போயிங் நிறுவனத்திற்கு 2009ல் அமெரிக்க அரசு வழங்கியது. முதற்கட்டமாக 20 குண்டுகளை உற்பத்தி செய்ய ஆர்டர் வழங்கப்பட்டது.
அதன் பிறகும் கூட வெடிகுண்டு குறித்துத் தொடர்ந்து சோதனைகள் நடத்தப்பட்டே வந்தது. கடந்த 2019ஆம் ஆண்டில் 21 மில்லியன் டாலர் மதிப்பில் ஒரு மேம்பாட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதன் மூலம் பங்கர் பஸ்டர் பாம்மின் ஊடுருவும் திறன் மற்றும் வெடிக்கும் திறன்கள் அதிகரிக்கப்பட்டன.
வெடிகுண்டு எப்படிப் பயன்படுத்தப்படும்?
இந்த உலகிலேயே இந்த GBU-57 பங்கர் பஸ்டர் பாமை வீசும் திறன் பெற்ற ஒரே விமானம் அமெரிக்காவின் B-2 ஸ்பிரிட் ஸ்டெல்த் விமானம் மட்டுமே. இதை நார்த்ரோப் க்ருமேன் (Northrop Grumman) என்ற நிறுவனம் தயாரித்ததுள்ளது இந்த B-2 விமானம் மட்டுமே பங்கரஸ் பஸ்டர் பாமை எடுத்துச் செல்லும் வகையில் கட்டமைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது.
இந்த B-2 விமானத்தில் ஒரு முறை எரிபொருள் நிரப்பினாலே 11,000 கி.மீ தூரம் வரை பறக்கும் திறன் கொண்டது. மேலும், வானில் எரிபொருள் நிரப்பினால் மொத்தம் 18,500 கி.மீ வரை செல்ல முடியும். இதன் மூலம் உலகின் எந்த இலக்கையும் இந்த பி2 விமானத்தால் தாக்க முடியும். B-2 விமானத்தால் அதிகபட்சம் இரண்டு GBU-57 குண்டுகளைச் சுமந்து செல்ல முடியும்.
பங்கர் பஸ்டர் ஏன் தேவை
இஸ்ரேல் கடந்த ஒரு வாரமாகவே ஈரான் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதில் ஈரானின் நடன்ஸ், இஸ்பஹான் அணுசக்தி மையங்கள் தாக்கி அழிக்கப்பட்டுள்ளன. அதேநேரம் ஃபோர்டோவில் உள்ள அணு ஆயுத மையத்தை இஸ்ரேலால் தொடக்கக் கூட முடியாது. ஏனென்றால் அது சுமார் 80 முதல் 300 அடி பாறைக்கு அடியில் கட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே அதைத் தாக்க அமெரிக்காவின் பங்கர் பஸ்டர் வெடிகுண்டு தேவைப்பட்டது.












Click it and Unblock the Notifications