காதை கிழித்த தோட்டா.. அப்படியே சரிந்த டிரம்ப்! துப்பாக்கி சூட்டிற்கு பின் சொன்ன முதல் விஷயம் இதுதான்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் அதிபர் டிரம்ப் ஈடுபட்டு இருந்த நிலையில், அவர் மீது திடீரென துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. தோட்டா அவரது வலது காதை கிழித்துச் சென்ற போதிலும் சீக்ரெட் சர்வீர்ஸ ஏஜெண்டுகள் விரைந்து செயல்பட்டதால் டிரம்ப் காப்பாற்றப்பட்டார். இதற்கிடையே இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக டிரம்ப் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்களே இருக்கும் நிலையில், அங்குப் பிரச்சாரம் மிகத் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த முறை ஜனநாயக கட்சியில் இருந்து போட்டியிடும் அதிபர் பைடனுக்கு எதிராக டிரம்ப் களமிறங்குகிறார்.

துப்பாக்கிச் சூடு: இதற்கிடையே முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், பென்சில்வேனியாவில் நடந்த பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது திடீரென அவர் மீது துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இதில் அவரது வலது காதில் காயம் ஏற்பட்ட போதிலும் அவரது உயிருக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை. இதற்கிடையே இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக டிரம்ப் சில முக்கிய தகவல்களைக் கூறியுள்ளார்.
தன் மீது துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும் வலது காதின் மேல் பகுதியில் துப்பாக்கிக் குண்டு தாக்கியதாகவும் டிரம்ப் தனது சமூக வலைத்தளமான ட்ரூத் சோஷியலில் பதிவிட்டுள்ளார். துப்பாக்கிச் சூடு நடந்தவுடன் டிரம்ப் தனது வலது கையால் காதைப் பிடித்துக் கொண்டு சரிந்தார்.
சீக்ரெட் சர்வீஸ்: அமெரிக்காவின் முன்னாள் அதிபர் என்பதால் டிரம்பிற்கு சீக்ரெட் சர்வீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருந்தது. இதனால் துப்பாக்கிச் சூடு நடந்த அடுத்த நொடி சீக்ரெட் சர்வீஸ் ஏஜெண்டுகளை அவரை சூழ்ந்தனர். ஒரே நிமிடத்தில் அவர் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இது தொடர்பாக அவர் மேலும் தனது சமூக வலைத்தள பக்கமான ட்ரூத் சோஷியலில் கூறுகையில், "ஏதோ தவறு நடந்துள்ளதை நான் உடனடியாக அறிந்தேன்.. முதலில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து எனது தோலைத் தோட்டா கிழிப்பதை உணர முடிந்தது. ரத்தம் அதிகம் கொட்டியது. அதன் பிறகே என்ன நடந்தது என்பதை என்னால் உணர முடிந்தது" என்று பதிவிட்டுள்ளார்,
நன்றி: அதேபோல தக்க நேரத்தில் தன்னை காப்பாற்றிய சீக்ரெட் சர்வீல் மற்றும் காவலர்களுக்கு அவர் நன்றியும் தெரிவித்தார். மேலும், இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு டிரம்ப் இரங்கல் தெரிவித்தார்.
அமெரிக்காவில் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளதை நம்ப முடியவில்லை என்ற அவர், துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் கொல்லப்பட்டதாகவும் அவர் யார் எனத் தெரியவில்லை என்றும் பதிவிட்டுள்ளார்.
சுட்டது யார்: டிரம்ப் பேரணி நடந்த இடத்திற்கு அருகே இருந்த கட்டிடம் ஒன்றின் மீது இருந்து துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. அந்த நபர் டிரம்பை நோக்கிப் பல முறை சுட்டதாகவே சீக்ரெட் சர்வீஸ் ஏஜெண்டுகள் தெரிவித்தனர். இதையடுத்து சீக்ரெட் சர்வீஸ் ஏஜெண்டுகள் சுட்டதில் அந்த நபர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. பிரச்சார பேரணி ஒன்றில் அதிபர் வேட்பாளர் மீது துப்பாக்கிச் சூடு நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக அங்குள்ள அனைத்து அரசியல் கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அமெரிக்காவில் இதுபோன்ற வன்முறைகளுக்கு இடமில்லை என்றும் இதை ஒட்டுமொத்த நாடும் கண்டிப்பதாகவும் அதிபர் பைடன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications