இந்தியா- பாகிஸ்தான் மோதலை.. முடிவுக்கு கொண்டு வந்த டிரம்பிற்கு நோபல் பரிசு தரணுமாம்! சொல்வது யார் பாருங்க
வாஷிங்டன்: அதிபர் ட்ரம்ப் உலகெங்கிலும் பல மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்ததாகவும், குறிப்பாக இந்தியா பாகிஸ்தான் இடையேயான பதற்றங்களைத் தணித்ததாகவும் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் கூறினார். இதனால் ட்ரம்ப் அமைதிக்கான நோபல் பரிசையும் கூடப் பெறத் தகுதியானவர் என்றும் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார்.
இந்தியா பாகிஸ்தான் இடையே கடந்த மே மாதம் மோதல் வெடித்தது. கடந்த ஏப்ரலில் பஹல்காம் தாக்குதல் நடந்த நிலையில், அதைத் தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூரை இந்தியா நடத்தியது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருக்கும் தீவிரவாத முகாம்களைக் குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியது. அதைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் அதிகரித்தது. இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்தது.

டிரம்ப்
அப்போது போர் நிறுத்தம் குறித்த அறிவிப்பை முதலில் டிரம்ப் தான் வெளியிட்டார். மே 10ம் தேதி இரவு இந்தியா பாகிஸ்தான் மோதல் முடிவுக்கு வருவதாக அவர் குறிப்பிட்டிருந்தார். மிக நீண்ட பேச்சுவார்த்தையின் பலனாகப் போர் முடிவுக்கு வந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். இருப்பினும், இந்தியா இதைத் திட்டவட்டமாக மறுத்து வருகிறது. பிரதமர் மோடி கூட இது தொடர்பாக லோக்சபாவில் விளக்கமளித்தார். உலகின் எந்தவொரு தலைவரும் ஆபரேஷன் சிந்தூரை நிறுத்தும்படி சொல்லவில்லை என மோடி கூறியிருந்தார்.
இருப்பினும், டிரம்ப் தொடர்ச்சியாக நான் தான் மோதலை நிறுத்தினேன் எனக் கூறி வருகிறார். இதுவரை இந்தியா பாகிஸ்தான் மோதலை முடிவுக்குக் கொண்டு வந்ததது நான்தான் என சுமார் 30 முறை டிரம்ப் கூறிவிட்டார். இதற்கிடையே வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் மீண்டும் அதே கருத்தைக் கூறியிருக்கிறார்.
மோதல்கள்
தாய்லாந்து- கம்போடியா, இஸ்ரேல்- ஈரான், ருவாண்டா- காங்கோ ஜனநாயகக் குடியரசு, இந்தியா- பாகிஸ்தான், செர்பியா- கொசோவோ மற்றும் எகிப்து- எத்தியோப்பியா எனப் பல நாடுகளின் மோதல்களை டிரம்ப் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளதாக லீவிட் தெரிவித்தார். டிரம்ப் அதிபராகப் பதவியேற்று 6 மாதங்கள் ஆகும் நிலையில், சராசரியாக மாதம் ஒன்று என்று ஒரு அமைதி ஒப்பந்தத்தை ட்ரம்ப் ஏற்பாடு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அமைதிக்கான நோபல் பரிசு
இதுபோல ஏகப்பட்ட அமைதி ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருவதால் டிரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசையே வழங்குவதற்கான நேரம் வந்துவிட்டதாகவும் கரோலின் லீவிட் கூறினார். டிரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், லீவிட் இந்த கருத்துகளைக் கூறியிருக்கிறார்.
உலக வரலாற்றில் இதுவரை 4 முறை மட்டுமே அமெரிக்க அதிபர்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. ரஷ்யா ஜப்பான் போரை நிறுத்தியதற்காக தியோடர் ரூஸ்வெல்ட்டிற்கு வழங்கப்பட்டது. இது தவிர உட்ரோ வில்சன், ஜிம்மி கார்ட்டர் மற்றும் பராக் ஒபாமா ஆகிய அமெரிக்க அதிபர்கள் அமைதிக்கான நோபல் பரிசை பெற்றுள்ளனர். அந்த லிஸ்டில் டிரம்பிற்கும் வழங்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
ஜெய்சங்கர்
முன்னதாக கடந்த புதன்கிழமை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் இது தொடர்பாக விளக்கமளித்திருந்தார். அதாவது ஆபரேஷன் சிந்துரின் போது பாகிஸ்தானுடன் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதில் எந்த மூன்றாம் தரப்பு தலையீடும் இல்லை என்றும் பாஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நடந்த ஏப்ரல் 22 முதல் ஜூன் 16 வரை பிரதமர் மோடி ட்ரம்ப் இடையே எந்த தொலைப்பேசி உரையாடலும் நடைபெறவில்லை என்று குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications