எதிர்பாராத இடத்திலிருந்து வந்த எச்சரிக்கை மணி.. டிரம்ப் 90 நாட்கள் வரியை நிறுத்த இதுதான் காரணமாம்!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த வாரம் உலக நாடுகள் மீது ரெசிப்ரோக்கல் வரியை அறிவித்திருந்தார். இது சர்வதேச அளவில் வணிக பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், திடீரென இன்று வரிகளை நிறுத்தி வைப்பதாக டிரம்ப் அறிவித்தார். இப்படி திடீரென யூடர்ன் போட என்ன காரணம். இதன் பின்னணி என்ன என்பது குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த வாரம் ரெசிப்ரோக்கல் வரி குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அவர் கடந்த சில வாரங்களாகவே இந்த ரெசிப்ரோக்கல் வரி குறித்துப் பேசி வந்தார். இந்தச் சூழலில் தான் அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென வரி அறிவிப்பை வெளியிட்டார். உலகின் பல்வேறு நாடுகள் மீதும் டிரம்ப் வரியை அறிவித்திருந்தார்.

டிரம்பின் ரெசிப்ரோக்கல் வரி
அனைத்து நாடுகள் மீதும் 10 சதவிகித அடிப்படை வரியை டிரம்ப் அறிவித்திருந்தார். இதுபோக கூடுதலாக ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு வரியை டிரம்ப் அறிவித்திருந்தார். அதிகபட்சமாக கம்போடியா மீது 49%, வியட்நாம் மீது 46%, இலங்கை மீது 44% வரி அறிவித்திருந்தார். இந்தியா மீது 26% வரியை டிரம்ப் அறிவித்திருந்தார். இது சர்வதேச அளவில் ஒரு வணிக பதற்றத்தை உருவாக்கியது.
கடந்த பல நாட்களாகவே எலான் மஸ்க் உள்ளிட்ட டிரம்பிற்கு நெருக்கமானவர்களும் சரி, சக குடியரசுக் கட்சியினரும் சரி வரிகளை நிறுத்தி வைக்குமாறு தொடர்ந்து டிரம்பிற்கு வலியுறுத்தி வந்தனர். ரெசிப்ரோக்கல் வரியால் வர்த்தகப் போர் ஏற்படும், உலகளாவிய சந்தை சரிவைச் சந்திக்கும், பொருளாதார மந்தநிலை ஏற்படும் என்று பலரும் எச்சரித்தனர். இருப்பினும், தனது நிலைப்பாட்டை மாற்றப் போவதில்லை என்றே டிரம்ப் தொடர்ந்து கூறி வந்தார்.
திடீர் மனமாற்றம் ஏன்
எலான் மஸ்க் கூட தனிப்பட்ட முறையில் டிரம்பிடம் வரிகளை நிறுத்த வைக்கக் கேட்டதாகச் சொல்லப்படுகிறது. இருப்பினும், எந்தவொரு முயற்சியும் டிரம்ப் மனதை மாற்றவில்லை. ஆனால், அமெரிக்க டிரஷரி துறையில் இருந்து வந்த புதிய எச்சரிக்கையே டிரம்பை யோசிக்க வைத்துள்ளது. அமெரிக்காவின் கடன் பத்திர சந்தை (bond market) குறித்து டிரஷரி துறை கொடுத்த எச்சரிக்கை காரணமாக மட்டுமே டிரம்ப் தனது ரெசிப்ரோக்கல் வரியை நிறுத்தி வைத்துள்ளதாக சிஎன்என் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்க டிரஷரி மார்கெட்டில் கடன் பத்திரங்கள் விற்கப்படுவது வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்தது. இது குறித்து வெள்ளை மாளிகை அதிகாரிகள் டிரம்பிற்கு எச்சரிக்கை கொடுத்துள்ளனர். இதன் காரணமாகவே டிரம்ப் ரெசிப்ரோக்கல் வரியை அடுத்த 90 நாட்கள் நிறுத்தி வைப்பதாக அறிவித்தார்.
டிரம்ப் சொல்வது என்ன
ரெசிப்ரோக்கல் வரியை நிறுத்தி வைப்பதாக அறிவிக்கும்போது செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "ஃபாண்ட் மார்கெட் கொஞ்சம் தந்திரமானது. அதை நான் கவனித்து வருகிறேன். இப்போது அது நல்ல நிலையிலேயே இருக்கிறது. ஆனால் நேற்று இரவு மக்கள் கொஞ்சம் பதட்டமாக இருப்பதைக் கண்டேன். மக்கள் கொஞ்சம் எல்லை மீறுகிறார்கள் என்று நான் நினைத்தேன்... அவர்கள் கோபப்படுகிறார்கள். ஆனால், இவ்வளவு பயம் தேவையில்லை" என்றார்.
ரெசிப்ரோக்கல் வரியை நிறுத்தி வைப்பதாக டிரம்ப் அறிவித்த பிறகு அமெரிக்கப் பங்குச்சந்தைகள் மீண்டும் உயரத் தொடங்கின. டிரம்ப் அறிவிப்பைத் தொடர்ந்து அமெரிக்கப் பங்குச்சந்தையின் டவ் குறியீடு எண் சுமார் 2,500 புள்ளிகள் உயர்ந்து வரை உயர்ந்தது. அதேபோல நாஸ்டாக் பங்குச்சந்தை குறியீட்டு எண் 12.2 சதவீதமும் S&P 500 6.0 சதவீதமும் உயர்ந்துள்ளது. அதேபோல அமெரிக்கக் கச்சா எண்ணெய் விலை 4 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்த நிலையில், டாலரும் வலுப்பெற்றது.

இந்தியாவின் நிலைப்பாடு
இந்த ரெசிப்ரோக்கல் வரி அறிவிப்பில் இந்தியாவுக்கு டிரம்ப் 26% வரி விதித்தார். இது நமது போட்டி நாடுகளை விட ஒப்பீட்டளவில் குறைவு தான் என்றாலும் இது இந்திய ஏற்றுமதியாளர்களுக்குப் பாதிப்பைத் தருவதாகவே கருதப்பட்டது. இதனால் இந்தியப் பங்குச்சந்தைகள் கடந்த சில நாட்களாகவே சரிந்தது. இப்போது டிரம்ப் 90 நாட்கள் வரை வரியை நிறுத்தி வைத்துள்ளதால் பங்குச்சந்தைகள் இன்று காலை முதலே பாசிட்டிவாக வர்த்தகமாகி வருகிறது.
டிரம்பின் வரிகளை நிறுத்திவைப்பதாக ஒரு பக்கம் அறிவித்தாலும் கூட இந்தியா ஒரு வர்த்தக டீலை போட அமெரிக்கா உடன் பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. இந்தியா அமெரிக்க குழுக்களிடையே நடக்கும் பேச்சுவார்த்தை சிறப்பாக நடந்து வருவதாகவும் அது இரு தரப்பிற்கும் நன்மையையே தரும் என்று இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.
சீக்கிரம் வர்த்தக டீல்
ரந்தீர் ஜெய்ஸ்வால் மேலும் கூறுகையில், "வர்த்தக உறவுகள், பொருளாதார உறவுகள், முதலீட்டு உறவுகள், வணிக உறவுகள் ஆகியவற்றில் இந்தியாவும் அமெரிக்காவும் மிகவும் வலுவான கூட்டாளிகளாக உள்ளன. இந்த உறவுகள் தொடர்ந்து வளரும் என நாங்கள் நம்புகிறோம். வரி விவகாரத்தைப் பொறுத்தவரை இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். சீக்கிரமே அனைத்து பிரச்சினைகளை நிவர்த்தி செய்து, ஒப்பந்தத்தைச் சீக்கிரம் இறுதி செய்வோம்" என்றார்.

அமெரிக்கா சீனா வர்த்தக போர்
டிரம்ப் 90 நாட்களுக்கு வரியை நிறுத்தி வைத்திருந்தாலும் இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் சீனா மீதான வரிகளை மட்டும் டிரம்ப் நிறுத்தி வைக்கவில்லை. தான் 75 நாடுகள் மீது வரி விதித்த நிலையில், எந்த நாடும் பதிலடியாக வரிகளை அறிவிக்கவில்லை என்றும் ஆனால் சீனா மட்டும் வரிகளை அறிவித்துள்ளதாக டிரம்ப் குறிப்பிட்டார். மேலும், சீன இறக்குமதிகள் மீதான வரி 104%ஆக இருந்த நிலையில், அதை 125%ஆகவும் உயர்த்தி டிரம்ப் உத்தரவிட்டார்.
இது தொடர்பாக அவர் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தள பக்கத்தில், "உலக சந்தைகளுக்குச் சீனா மரியாதை காட்டவில்லை. இதற்காகச் சீனாவுக்கு விதிக்கப்படும் வரியை உடனடியாக 125% ஆக உயர்த்துகிறேன். விரைவில் அமெரிக்கா மற்றும் பிற நாடுகளை ஏமாற்றும் வசூலித்த நாட்கள் மீண்டும் வராது என்பதைச் சீனா உணரும் என்று நம்புகிறேன்.
சீனா ஒரு ஒப்பந்தம் போட விரும்புகிறது. ஆனால், அதை எப்படிச் செய்வது என்று அவர்களுக்குத் தெரியவில்லை... அதிபர் ஜி ஜின்பிங் ஒரு நல்ல மனிதர். வரி விவகாரத்தில் சீக்கிரம் ஒரு நல்ல முடிவை எடுப்பார் என்று நம்புகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications