4 முறை போன் போட்ட டிரம்ப்.. எடுத்து பேசாத பிரதமர் மோடி.. இந்தியாவின் பிளான் என்ன? பின்னணியில் 5 மேட்டர்
டெல்லி: நம் நாட்டுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 50 சதவீத வரிகளை விதித்துள்ளார். இது நம் நாட்டுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே தான் கடந்த ஒரு வாரத்தில் டிரம்ப், பிரதமர் மோடிக்கு 4 முறை போன் போட்டுள்ளார். ஆனால் பிரதமர் மோடி ஒருமுறை கூட எடுத்து பேசாத நிலையில் அதன் பின்னணியில் 5 முக்கிய மேட்டர் உள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
நம் நாட்டுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நல்ல உறவு இருந்து வந்தது. தற்போது அந்த உறவு பிரச்சனையாகி உள்ளது. இதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்பு தான் காரணம். டிரம்ப் கண்மூடித்தனமாக அனைத்து நாடுகளுக்கும் வரி விதித்து வருகிறார். அவர் நம் நாட்டையும் விடவில்லை.

அமெரிக்கா உடனான வர்த்தக பற்றாக்குறை மற்றும் ரஷ்யாவுடன் கச்சா எண்ணெய் வாங்குவதை சுட்டிக்காட்டி நம் நாட்டுக்கு 50 சதவீத வரிகளை விதித்தார். முதற்கட்டமாக கடந்த 7 ம்தேதி 25 சதவீத வரி அமலுக்கு வந்தது. அடுத்தக்கட்டமாக இன்று முதல் 25 சதவீத வரி அமலுக்கு வந்துள்ளது. இதன்மூலம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டின் மீது விதித்த 50 சதவீத வரி முழுவதுமாக அமலாகி உள்ளது.
டிரம்ப் போனை எடுக்காத மோடி
இதனால் நம் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கான ஏற்றுமதி பெருமளவில் சரிவை சந்திக்க உள்ளது. இது நம் நாட்டில் தொழில் துறையை பாதிப்பதோடு, வேலையிழப்பையும் ஏற்படுத்தும். இதனால் டிரம்ப் - பிரதமர் மோடி இடையேயான நட்பில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே தான் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் டிரம்ப், பிரதமர் மோடிக்கு 4 முறை போன் செய்துள்ளதாகவும், அதனை பிரதமர் மோடி எடுக்கவில்லை என்றும் ஜெர்மன் நாளிதழான Frankfurter Allgemeine Zeitung செய்தி வெளியிட்டுள்ளது. இந்த நாளிதழை சுருக்கமாக FAZ என்பார்கள்.
5 முக்கிய மேட்டர்
இந்தியா மீதான வரி விதிப்பால் கோபமான பிரதமர் மோடி, டிரம்பின் தொலைபேசி அழைப்பை நிராகரித்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பிரதமர் மோடி, டிரம்பின் போன் காலை எடுத்து பேசாததன் பின்னணியில் மொத்தம் 5 முக்கிய விஷயங்கள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக அந்த நாளிதழில் கூறப்பட்டுள்ளதாவது:
முதல் மேட்டர்
இந்தியாவை எடுத்து கொண்டால் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களில் 5ல் ஒன்று அமெரிக்காவுக்கு செல்கிறது. இப்படி இருக்கும்போது அமெரிக்காவின் 50 சதவீத வரி இந்தியாவுக்கு பெரும் பிரச்சனையை ஏற்படுத்தும். குறிப்பாக, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அமெரிக்காவின் வரி விதிப்பால் பொருளாதார வளர்ச்சி 5.5 சதவீதமாக சரிய உள்ளது. இதனால் பிரதமர் மோடி டென்ஷனாகி உள்ளார்.
2வது மேட்டர்
அதேபோல் அமெரிக்காவை பிரதமர் மோடி நம்பியிருந்தார். ஆனால் டிரம்ப் வரியை போட்டு தீட்டினார். இதனால் இனியும் அமெரிக்காவை நம்பி பயனில்லை என்று பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். அதோடு, டிரம்ப், அமெரிக்காவை நம்பி மீண்டும் பிரச்சனையில் சிக்க வேண்டாம் என்று பிரமதர் மோடி நினைத்து தொலைபேசி அழைப்பை நிராகரித்துள்ளார்.
மேலும் பிரதமர் மோடி டிரம்பின் தொலைபேசி வலையில் சிக்க விரும்பவில்லை. அமெரிக்காவுக்கும் வியட்நாமுக்கும் இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தில் டிரம்ப், வியட்நாம் தலைவருடன் தொலைபேசியில் பேசினார். ஒப்பந்தம் நிறைவடைவதற்கு முன்பே அவர் சமூக வலைதளத்தில் பேசினார். இதுபோல் எதுவும் நடந்து விடக்கூடாது மற்றும் டிரம்பின் அழுத்தத்தில் சிக்கி விடக்கூடாது என்பதில் மோடி உறுதியாக இருந்தார்.
3வது மேட்டர்
டிரம்ப் தலைக்கணத்துடன் செயல்பட்டு வருகிறார். எல்லா நாடுகளையும் வரி, வர்த்தகம் என்ற பெயரில் மிரட்டி வருகிறார். பல நாடுகளை ஒரு போன் காலில் தன்னிடம் பணிய வைத்தார். ஆனால் இந்தியாவை டிரம்பால் பணிய வைக்க முடியவில்லை. எத்தனை முறை டிரம்ப் கூறினாலும் மோடி கேட்கவில்லை.
ரஷ்யாவிடம் தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கி வருகிறார். இதனால் கோபமான டிரம்ப் நம் நாட்டின் பொருளாதாரத்தை செத்துப்போன பொருளாதாரம் என்று விமர்சனம் செய்தார். இதனை மோடியால் சகித்து கொள்ள முடியவில்லை.
4வது மேட்டர்
அமெரிக்காவின் வரியால் நம் நாட்டில் இருந்து அங்கு செல்லும் பொருட்களின் ஏற்றுமதி பெருமளவு சரிய உள்ளது. இதற்கு நிகரான மார்க்கெட் என்றால் அது சீனா தான். இதனால் சீனாவுடன் இந்தியா நெருக்கமாக தொடங்கி உள்ளது. இன்னும் சொல்லப்போனால் சீனாவை விட இந்தியாவுக்கு தான் முக்கியம்.
இதனை உணர்ந்து தான் பிரதமர் மோடி சீனாவுடன் நெருக்கம் காட்டி வருகிறார். ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1ம் தேதியில் சீனாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இது டிரம்ப்புக்கு எதிரானதாக பார்க்கப்படுகிறது. இதனை முன்வைத்து தான் பிரதமர் மோடி, டிரம்பை மறுத்துள்ளார்.
5வது மேட்டர்
இதுதொடர்பாக நியூயார்க்கின் நியூ ஸ்கூலில் செயல்பட்டு வரும் India - China institute துணை இயக்குநரும், அனலிஸ்ட்டுமான மார்க் பிரேசர் கூறுகையில், ‛‛இந்தோ - பசிபிக் பிராந்திய விவகாரங்களில் இந்தியா மிகவும் முக்கிய பங்காற்றி வருகிறது. அமெரிக்கா, இந்தியாவும் நட்பாக இருந்த நிலையில் சீனாவின் ஆதிக்கத்தை அமெரிக்காவால் தடுக்க முடியும். இந்தோ-பசிபிக் சீரமைப்பு என்ற அமெரிக்காவின் வியூகம் சீனாவைக் கட்டுப்படுத்துவதில்தான் உள்ளது.
அதற்கு இந்தியாவின் தயவு அமெரிக்காவிற்கு தேவை. ஆனால் இப்போது இருநாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியா சீனாவுக்கு எதிராக அமெரிக்காவுடன் கைகோர்க்க விரும்பவில்லை. மாறாக இந்தியா - சீீனாவுடன் கைகோர்த்துள்ளது. இது அமெரிக்காவுக்கு சிக்கலாக பார்க்கப்படுகிறது’’ என்றார்.












Click it and Unblock the Notifications