சொந்த பிள்ளைகளே டிரம்பை கைவிட்ட அவலம்.! "எமனாக" காத்திருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல்! பெரிய சிக்கல்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளது அவரது அரசியல் எதிர்காலத்திற்கு ஆபத்தைத் தரலாம்.
கடந்த 2020இல் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் அப்போது அதிபராக இருந்த டிரம்பை ஜோ பைடன் தோற்கடித்தார். அமெரிக்காவில் அதிபராக உள்ளவர் தேர்தலில் தோற்பது கடந்த 30 ஆண்டுகளில் இதுவே முதல்முறையாகும்.
இப்போது இரண்டு ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில், மீண்டும் 2024 அதிபர் தேர்தலில் களமிறங்க உள்ளதாக டிரம்ப் அறிவித்து உள்ளார். ஆனால், அவரது இந்த முடிவு அவருக்கு எதிராக மாற வாய்ப்புகள் அதிகம்.

அமெரிக்கா
அமெரிக்காவில் வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவர் மீண்டும் அதிபர் தேர்தலில் களமிறங்குவது பல ஆண்டுகளில் இதுவே முதல்முறை. அவர் தனது வேட்புமனுவை அறிவிப்பதற்கான ஆவணங்களை மத்திய தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்துள்ளார். இதன் மூலம் அவர் குடியரசுக் கட்சி வேட்பாளரா ஆகிவிட்டரா என நீங்கள் கேட்கலாம். இல்லை. அதற்கு இன்னும் பல ஸ்டேஜ்கள் இருக்கிறது. தற்போது அவரால் பிரசாரத்திற்கு நிதியைச் சேகரிக்க முடியும்.

குடியரசு கட்சி
இதன் பின்னர், குடியரசு கட்சிக்குள்ளேயே பல கட்ட தேர்தல் நடைபெறும். டிரம்பை போலவே வரும் காலத்தில் இன்னும் பலர் அதிபர் தேர்தலில் களமிறங்குவார்கள். அவர்களுக்கு இடையே உட்கட்சி தேர்தல் நடைபெறும். இதில் யாருக்கு அதிக வாக்குகள் கிடைக்கிறதோ, அவர்கள் குடியரசு கட்சியின் தேசிய மாநாட்டில் வேட்பாளராக அறிவிக்கப்படுவார்கள். குடியரசு மற்றும் ஜனநாயக கட்சி என இரண்டிலும் இதே முறை தான்.

பைடன்
அதேநேரம் அதிபர் பதவியில் இருக்கும் நபர் இயல்பாகவே இரண்டாம் முறை அதிபர் தேர்தலில் களமிறங்குவார். ஒருவர் அதிபர் பதவியில் இரண்டு முறை தான் இருக்க முடியும் என்பதால் இதற்கு அவருக்கு ஈஸியாகவே வாய்ப்பு கிடைக்கும். அப்படித்தான் அடுத்து வரும் தேர்தலில் பைடன் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிரம்ப் இதில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால், மீண்டும் 2020 தேர்தலைப் போன்ற சூழல் ஏற்படும்.

காமெடி அதிபர்
ஆனால், இந்த வாய்ப்பு டிரம்பிற்கு கிடைக்குமா என்பதை நாம் பொறுத்துத் தான் பார்க்க வேண்டும். டிரம்ப் அதிபர் காலம் முழுக்க சர்ச்சை நிறைந்ததாகவே இருந்தது. ட்விட்டர் மூலம் அரசை நடத்திய பொறுப்பில்லாத அதிபராகவே டிரம்பை பலரும் பார்த்தார்கள். 2020 அதிபர் தேர்தலில் தோற்ற பின்னரும் கூட அமைதியாக இருக்காமல், மிகப் பெரிய தேர்தல் முறைகேடு நடந்ததாகக் கூறி அமெரிக்க நாடாளுமன்ற வன்முறைக்கு வித்திட்டார்.

ஏகப்பட்ட புகார்கள்
அமெரிக்க வரலாற்றிலேயே டிரம்ப் மீது மட்டுமே இரண்டு முறை பதவி நீக்க மசோதா கொண்டு வரப்பட்டது. அதேபோல மக்களிடையே அதிக பிளவுபடுத்தும் கருத்துகளைப் பரப்பிய அதிபராகவே டிரம்ப் பார்க்கப்பட்டார். தியோடர் ரூஸ்வெல்ட்டுக்கு பின், முன்னாள் அதிபர் ஒருவர் தேர்தலில் களமிறங்குவது இதுவே முதல்முறையாகும். 2016 தேர்தலைப் போலவே மீண்டும் ஒரு முறை அவரால் அதிபர் பதவிக்கு வர முடியுமா என்ற கேள்வி பலருக்கும் உள்ளது.

டிரம்ப்
அமெரிக்க வரலாற்றில் அரசியல் அனுபவம் அல்லது ராணுவ பின்னணி இல்லாமல் நேரடியாக அதிபர் பதவியில் உட்கார்ந்த முதல் நபர் டிரம்ப் தான். உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான டிரம்ப் யாரும் எதிர்பார்க்காத வகையில் 2016இல் பெரிய வெற்றியைப் பெற்றார். ஆனால் இந்த முறை நிலைமை அவ்வளவு ஈஸியாக இருக்காது. அதிபர் காலத்து காமெடி மட்டுமில்லை.. தற்காலத்து நிகழ்வுகளும் கூட டிரம்பிற்கு சவாலையே தருகிறது.

மிட் டேர்ம் தேர்தல்
சமீபத்தில் நடந்த மிட் டேர்ம் தேர்தலில் குடியரசு கட்சிக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. அதிலும் குறிப்பாக செனட் சபையில் ஜனநாயக கட்சி மீண்டும் பெரும்பான்மையைப் பிடித்து உள்ளது. இந்தத் தேர்தலில் டிரம்ப் ஆதரித்த பல வேட்பாளர்கள் மோசமான தோல்வியைச் சந்தித்து உள்ளனர். இது டிரம்பிற்கு இருக்கும் மக்கள் செல்வாக்கு சரிந்துள்ளதையே காட்டுகிறது. இந்த தோல்வியும் டிரம்பின் அதிபர் கனவுக்குப் பெரிய தடையை உண்டாக்கி உள்ளது.

ரகசிய கோப்புகள்
அதேபோல அமெரிக்க அரசின் ரகசிய கோப்புகளை வெள்ளை மாளிகையில் இருந்து எடுத்துச் சென்ற புகாரிலும் அவர் மீது நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. இதெல்லாம் டிரம்பிற்கு வெளியில் இருந்து சிக்கலைத் தருகிறது. அதேபோல குடியரசு கட்சியில் இருந்தும் கூட டிரம்பிற்கு எதிராக ஒரு படையே கிளம்பியே உள்ளது. அதிலும் குறிப்பாக டிரம்ப் காலத்தில் துணை அதிபராக இருந்த மைக் பென்ஸ் கூட டிரம்பை ஆதரிக்கப் போவதில்லை என வெளிப்படையாகவே அறிவித்துவிட்டார்.

கைவிட்ட பிள்ளைகள்
டிரம்ப் அதிபர் காலத்தில் அவரது ஆலோசகர்களில் ஒருவராக இருந்த இவான்கா டிரம்பும் 2024 அதிபர் தேர்தலில் தலையிடப் போவதில்லை என அறிவித்துவிட்டார். டிரம்ப் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்த போது கூட இவான்கா டிரம்ப் மட்டுமின்றி, அவரது மகன் டொனால்ட் ஜூனியர் கூட அதில் கலந்து கொள்ளவில்லை. இந்த தேர்தலில் மட்டும் தோற்றால் அது டிரம்பின் அரசியல் எதிர்காலத்தையே முடித்துவிடும்.












Click it and Unblock the Notifications