தோற்றது ஈரான் இல்லை! டிரம்ப் தான்.. ரூ.28 லட்சம் கோடியை தாரை வார்க்கும் அமெரிக்கா.. பின்னணி
வாஷிங்டன்: அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே ஒரு தற்காலிக பாதுகாப்பு உடன்படிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளது. இது தனக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று ட்ரம்ஸ் சொன்னாலும் கூட, இதில் இருக்கும் பெரும்பாலான பாயிண்டுகள் ஈரானுக்கு சாதகமாகவே இருப்பதாகக் கூறப்படுகிறது. ஈரானின் பிடிவாதத்திற்கு முன்னால் டிரம் சரணடைந்து விட்டதாகவே பலரும் விமர்சிக்கிறார்கள்.
அமெரிக்கா ஈரான் இடையே கடந்த பிப்ரவரி மாதம் ஆரம்பித்த போர் பல மாதங்களாக தொடர்ந்து வந்தது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர பல கட்ட முயற்சிகள் நடந்த போதிலும் அது வெற்றி அடையவில்லை.

இந்தச் சூழலில் தான், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுடனான ஒப்பந்தம் முடிந்துவிட்டதாக அறிவித்தார். மேலும், இது அமெரிக்காவிற்கு கிடைத்த மிக பெரிய வெற்றி என்றும் அறிவித்துள்ளார். இந்த ஒப்பந்தத்தை ஒரு வெற்றி என்று டிரம்ப் சொன்னாலும் யாரும் இதை நம்ப ரெடியாக இல்லை. இனி தாங்க முடியாத ஒரு போரிலிருந்து அமெரிக்கா தப்பிப்பதற்கான ஒரு வழியாகவே பார்க்கின்றனர்.
1. போரின் செலவுகள்
இந்த மோதல் பிப்ரவரி 28 அன்று தொடங்கியது. ஈரானின் அணுசக்தி திறன்களை முடக்குவதற்காக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களே இதற்கு ஆரம்பப்புள்ளி. முதலில் இந்த தாக்குதல் சீக்கிரம் முடிந்து விடும் என்று பலரும் எதிர்பார்த்தனர். டிரம்ப் கூட இந்த போர் நான்கு முதல் ஆறு வாரங்களில் முடிந்து விடும் என்று முதலில் கூறியிருந்தார். ஆனால் பல்வேறு காரணங்களால் இந்தப் போர் முடியாமல் தொடர்ந்து கொண்டே இருந்தது. 100 நாட்களைக் கடந்த இந்த மோதலால் அமெரிக்காவிற்கு சுமார் 25 முதல் 29 பில்லியன் டாலர்கள் வரை நேரடி ராணுவச் செலவு ஏற்பட்டுள்ளது.
இது நேரடி செலவு மட்டுமே. இது தவிர அமெரிக்காவுக்கு மறைமுகமாகவும் பல பில்லியன் டாலர் செலவாகி இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. மேலும், ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.
2. ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்
டிரம்ப் இதை வெற்றி என்று கூறினாலும், ஒப்பந்தத்தின் பாயிண்டுகள் பெரும்பாலும் ஈரானுக்கு சாதகமாகவே உள்ளன. உதாரணமாக, ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி மீதான தடைகள் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளன. மேலும் ஈரானுக்கு சுமார் 300 பில்லியன் டாலர் மதிப்பிலான புனரமைப்பு மற்றும் முதலீட்டுத் திட்டம் குறித்து விவாதிக்கப்படுகிறது. இதை ஈரான் 'போர் இழப்பீடு' என்று அழைக்கிறது, ஆனால் அமெரிக்கா இதை 'சர்வதேச முதலீடு' என்று கூறுகிறது. எப்படி அழைத்தாலும் ஈரானுக்கு அமெரிக்கா சுமார் 300 பில்லியன் டாலர் கொடுக்க உள்ளது என்பதை நிதர்சனம்!
இவ்வளவு செய்தாலும் முக்கியமான அணுசக்தி சிக்கல்கள் இன்னும் தீர்க்கப்படவில்லை.. அவை 60 நாட்கள் காலக்கெடு கொண்ட பேச்சுவார்த்தைக்கு தள்ளப்பட்டுள்ளன. அதாவது முக்கியமான அணுசக்தி விவகாரங்கள் குறித்த பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்பே கூட அமெரிக்கா பல விஷயங்களை விட்டு கொடுத்து விட்டது என்பதை விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.
3. பலவீனம்
அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத், அமெரிக்கத் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதில் அவர், "ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்கா முழுமையாகக் கட்டுப்படுத்தியது" என்று கூறினார். ஆனால், பத்திரிகையாளர் மார்கரெட் பிரென்னன், "அமெரிக்காவிடம் முழு கட்டுப்பாடு இருந்தால், பேச்சுவார்த்தையில் அந்தப் பாதையைத் திறக்க ஏன் இவ்வளவு போராடினீர்கள்?" என்று கேள்வி எழுப்பினார். இதற்கு ஹெக்செத் அளித்த தெளிவற்ற பதில், அமெரிக்காவின் பலவீனத்தையே காட்டுவதாக சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்படுகிறது.
4. உள்நாட்டு அரசியல் நெருக்கடி
அமெரிக்காவில் நவம்பர் மாதம் மிட் டேர்ம் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நேரத்தில் சர்வதேச சூழல்களால் அமெரிக்காவிலும் எரிபொருள் விலை உயர்ந்துள்ளது. இது டிரம்பிற்கு பெரும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஜூலை 4ம் தேதி அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்த சூழலில், ஒரு முடிவில்லாத போரைத் தொடர்வது டிரம்பிற்கு பின்னடைவாக அமையும் என்பதால், அவர் இந்த ஒப்பந்தத்திற்கு அவசரம் காட்டியதாகக் கூறப்படுகிறது.
5. விமர்சகர்களின் கருத்து
இந்த அமைதி பள்ளம் அவசர கதியில் போடப்பட்டதாகப் பலரும் விமர்சிக்கிறார்கள். இதை ஒரு பேரழிவு தரும் தோல்வி என்று சிகாகோ பல்கலைக்கழக பேராசிரியர் ராபர்ட் ஏ பேப் குறிப்பிடுகிறார். அமெரிக்க மட்டுமின்றி இஸ்ரேலிலும் இந்த அமைதி ஒப்பந்தத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இது இஸ்ரேலுக்கும் பிரதமர் நெதன்யாகுவிற்கும் கிடைத்த தோல்வி என்று இஸ்ரேல் பத்திரிகையாளர் கிதியோன் லெவி குறிப்பிட்டுள்ளார்.
டிரம்ப் நிர்வாகம் இது தங்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று சொன்னாலும், உலக நாடுகள் இதை வேறு விதமாகவே பார்க்கின்றன. ஒரு வல்லரசு நாடு, ஈரானின் பிடிவாதத்திற்கு முன்னால் பணிந்து போய், பேச்சுவார்த்தை மூலம் வெளியேறியதாகவே பலரும் கருதுகின்றனர்.












Click it and Unblock the Notifications