"ரூ.15,288 கோடி பாண்ட்.." விவாகரத்து வழக்கில் பெரிய ட்விஸ்ட்.. ஸ்ரீதர் வேம்பு தரப்பு சொன்ன பாயிண்ட்
வாஷிங்டன்: விவாகரத்து வழக்கில் ஸ்ரீதர் வேம்பு ரூ.15,288 கோடி பாண்ட் செலுத்த வேண்டும் என்று கலிபோர்னியா நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், இது பேசுபொருளாக மாறியிருக்கிறது. ஸ்ரீதர் வேம்பால் அவ்வளவு பெரிய தொகையை பாண்ட்டாக செலுத்த முடியாது என்றும் இது நீதிக்குப் புறம்பான தீர்ப்பு என்றும் அவரது வழக்கறிஞர் கூறியிருக்கிறார்.
ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு- பிரமிளா சீனிவாசன் விவாகரத்து வழக்கு கலிபோர்னியா நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இது தொடர்பான வழக்கில் 1.7 பில்லியன் டாலர் (சுமார் ரூ.15,288 கோடி) ‛பாண்ட்' செலுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

முற்றிலும் பொய்
இருப்பினும், நீதிபதியின் அந்த உத்தரவு "செல்லாது" என்று ஸ்ரீதர் வேம்பு வழக்கறிஞர் கிறிஸ்டோபர் சி. மெல்சர் தெரிவித்துள்ளார். மேலும், வேம்பு மாஜி மனைவி முன்வைத்த குற்றச்சாட்டுகள் "முற்றிலும் பொய்யானவை" என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார்.
இது தொடர்பாக மெல்சர் தனது ட்விட்டரில், "கடந்த ஆறு மாதங்களாக பாண்ட் உத்தரவை அமல்படுத்த எதிர்த் தரப்பு வழக்கறிஞர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இது அந்த உத்தரவு செல்லாதது என்பதை அமைதியாக ஏற்றுக்கொண்டதற்குச் சமம். ஸ்ரீதரால் 1.7 பில்லியன் டாலர் பான்ட் தொகையைச் செலுத்த இயலாது. இது தீர்ப்பின் அபத்தத்தை எடுத்துக்காட்டுகிறது.
5% பங்குகள்
ஸ்ரீதர் வேம்பு ஏதேனும் தவறு செய்துள்ளாரா என்று கேள்வி எழுப்புபவர்களுக்கு அவரது வழக்கறிஞர் என்ற முறையில் உண்மையான பின்னணியை என்னால் வழங்க முடியும். அவரது மனைவியால் கூறப்படும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை, அவை உண்மைக்குப் புறம்பானது" என்று தெரிவித்துள்ளார். ஜோஹோ கார்ப்பரேஷனின் ஸ்ரீதர் 5% பங்குகளை மட்டுமே வைத்திருப்பதாகவும் அவர் தெளிவுபடுத்தினார்.
கலிபோர்னியா நீதிமன்ற உத்தரவு வெளியான பிறகு, வேம்புவின் விவாகரத்து பேசுபொருள் ஆனது. நீதிமன்றத் தீர்ப்புகள் அமலானால் உலகின் நான்காவது காஸ்ட்லி விவாகரத்து வழக்காக அமையும் எனச் சொல்லப்படுகிறது. இப்போது சுமார் 5.85 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன், அவர் இந்தியாவின் 40 பணக்காரர்களில் ஒருவராக உள்ளது குறிப்பிடத்தக்கது..
மனைவி தான் ஏற்கல
வழக்கறிஞர் மெல்சர் மேலும், "இப்போது ஸ்ரீதர் வேம்புவிடம் ஜோஹோ கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட்டின் 5 சதவீத பங்குகளை மட்டுமே இருக்கிறது. தன்வசம் இருக்கும் பங்குகளில் 50 சதவீத பங்குகளை மனைவி பெயரில் மாற்ற ஸ்ரீதர் வேம்பு முன்வந்தார். ஆனால் அவரது மனைவி அந்த முன்மொழிவை ஏற்கவில்லை.
ஸ்ரீதர் 88 சதவீதப் பங்குகளை வைத்திருக்கிறார் என்று அவர்கள் தரப்பினர் வாதிடுகிறார். அவரது குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது. 1.7 பாண்ட் செலுத்த வேண்டும் என்ற கலிபோர்னியா நீதிமன்றத்தின் உத்தரவு நீதி அமைப்பிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. மேலும் அந்த தீர்ப்புக்கு எந்தவொரு லாஜிக்கும் இருப்பது போல தெரியவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
பின்னணி
ஸ்ரீதர் வேம்பு- பிரமிளா இடையே 1993இல் திருமணம் நடந்தது. அவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். அமெரிக்காவில் சுமார் 25 ஆண்டுகள் வாழ்ந்த பிறகு, ஸ்ரீதர் வேம்பு 2020இல் தமிழகத்திற்குத் திரும்பினார். இங்கிருந்தபடி தனது நிறுவனத்தைக் கவனித்து வருகிறார். இந்தியா திரும்பிய ஆண்டே பிரமிளா விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார். ஸ்ரீதர் வேம்பு தன்னையும், மகனையும் கைவிட்டதாகக் குற்றஞ்சாட்டினார். மேலும், தனக்குத் தெரியாமல் சொத்து மற்றும் பங்குகள் உட்பட ஜோஹோவின் முக்கிய சொத்துக்களை ரகசியமாக உறவினர்கள் பெயருக்கு மாற்றியுள்ளார் என்றும் பிரமிளா குற்றம் சாட்டினார்.
முக்கியமான பாயிண்ட்
இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டுகளை வழக்கறிஞர் மெல்சர் திட்டவட்டமாக நிராகரித்தார். இது தொடர்பாக அவர், "ஸ்ரீதர் தனது பங்குகளை ரகசியமாக உறவினர்களுக்கு மாற்றி, விவாகரத்தில் ஏமாற்ற முயன்றார் என்ற மனைவியின் வாதம் அபத்தமானது. ஸ்ரீதர் ஒரு நேர்மையானவர்.. அவர் யாரையும் ஏமாற்றவில்லை" என்றார். மேலும், 2011ம் ஆண்டில் இருந்தே அவர் இதே அளவு பங்குகளைத் தான் வைத்துள்ளார் என்றும் அப்போது விவாகரத்து குறித்து யோசனை ஸ்ரீதருக்கு இல்லை என்ற தெரிவித்தார். 2011ல் விவாகரத்துக்குத் திட்டமிட்டிருந்தால் 10 ஏன் காத்திருக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பினார்.
அவர் மேலும், "நீதிமன்றம் எந்தவொரு அறிவிப்பும் இன்றி, விசாரணைக்கு ஆஜாராகத ஒருவருக்கு எதிராக உத்தரவைப் பிறப்பித்தது. ஒரு சிவில் வழக்கில் நோட்டீஸ் மற்றும் தங்கள் தரப்பை விளக்கும் வாய்ப்பு இல்லாமல் உத்தரவு பிறப்பிக்கக்கூடாது என்பது நீதியின் அடிப்படைக் கொள்கை. இது தொடர்பாக நாங்கள் மேல்முறையீடு செய்துள்ளோம்" என்றார்.












Click it and Unblock the Notifications