15 நாட்களில் 25 மெகா பேரணி! குஜராத்தில் காங். போடும் மெகா பிளான்.. அவரே வருகிறாராம்! பாஜகவுக்கு ஷாக்
காந்திநகர்: குஜராத்தில் இன்னும் சில வாரங்களில் வாக்குப்பதிவு நடக்கும் நிலையில், காங்கிரஸ் மெகா பிளான் ஒன்றைப் போட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தில் இப்போது பூபேந்திர படேல் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. 182 இடங்களைக் கொண்ட குஜராத் சட்டசபைக்கு இரு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது.
டிசம்பர் 1 மற்றும் 5ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக அங்குத் தேர்தல் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து டிச. 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

குஜராத்
இமாச்சல பிரதேச சட்டசபைத் தேர்தல் இப்போது தான் முடிந்துள்ள நிலையில், அடுத்து குஜராத் தேர்தலில் அரசியல் கட்சிகள் கவனம் செலுத்தத் தொடங்கி உள்ளன. பிரதமர் மோடியின் சொந்த மாநிலம் என்பதால் எப்படியாவது ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் பாஜக தீவிரமாக உள்ளது. இதற்காகப் பல முக்கிய தலைவர்களும் குஜராத்தில் முகாமிட்டுள்ளனர். அதேநேரம் காங்கிரஸும் குஜராத்தை விட்டுவிடுவதாக இல்லை.

மெகா பிளான்
அடுத்த 15 நாட்களுக்குக் குஜராத்தில் காங்கிரஸ் மிகத் தீவிரமான பிரசாரத்தை முன்னெடுக்கக் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. அங்குள்ள 125 தொகுதிகளில் மொத்தம் 25 மெகா கூட்டங்களை நடத்தக் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதற்காக மிஷன் குஜராத் என்ற பெயரில் காங்கிரஸ் தனியாகவே ஒரு திட்டத்தைத் தயார் செய்துள்ளது. மேலும், டெல்லி தலைவர்களையும் இந்தத் தேர்தல் பிரசாரத்தில் களமிறக்கக் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

நேரடியாக வரும் ராகுல் காந்தி
குறிப்பாகக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தலைமையிலும் பொதுக்கூட்டத்தை நடத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர். ராகுல் காந்தி இப்போது மகாராஷ்டிராவில் ஒற்றுமை பாத யாத்திரையில் கலந்து கொண்டுள்ள நிலையில், அவர் குஜராத் தேர்தலுக்குப் பிரசாரம் செய்வார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, மல்லிகார்ஜுன் கார்கே, அசோக் கெலாட், பூபேஷ் பாகேல், பிரியங்கா காந்தி தலைமையில் அங்குப் பேரணிகள் நடைபெறுவது உறுதியாகிவிட்டது.

வியூகம் ரெடி
இது குறித்து மூத்த குஜராத் காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறுகையில், "பிரசாரத்திற்காக விரிவான திட்டம் ஒன்றைத் தயார் செய்து வைத்துள்ளோம். இந்த முறை தேர்தலுக்கு புதிய வியூகத்தை வைத்துள்ளோம். காங்கிரஸ் அடுத்த கட்டத்திற்குச் சென்று இந்தத் தேர்தலில் பிரசாரம் செய்ய உள்ளது. குறிப்பாகக் கடைசி நிமிடங்களில் மிகத் தீவிரமான பிரசாரத்தை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளோம்" என்றார்.

2017 குஜராத் தேர்தல்
கடந்த 2017இல் ராகுல் காந்தி குஜராத்தில் மிகத் தீவிரமாகப் பிரசாரம் செய்தார். இது தேர்தலில் நல்ல பலனைக் கொடுத்தது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் காங்கிரஸ் கட்சியால் அதிகபட்சமாக 77 இடங்களில் வெல்ல முடிந்தது. பாஜக ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்ட போதிலும், அக்கட்சியால் 99 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. இந்த முறை குஜராத் தேர்தலுக்கு பாஜக தனது வியூகத்தை மாற்றி உள்ளது.

புதிய திட்டம்
அதிகப்படியான பூத் ஏஜெண்டுகளை நியமித்து உள்ளது. ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதமே ராகுல் காந்தி தேர்தலுக்கான பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்தார். அதன் பின்னர் வீடு வீடாகச் சென்று பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் காங்கிரஸ் தெரிவித்து உள்ளது. மேலும், கட்சியில் அனைத்து இடங்களிலும் பூத் ஏஜெண்ட்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் மூலமும் பிரசாரம் செய்து வருவதாகக் காங்கிரஸ் தெரிவித்து உள்ளது.

ஆட்சியைப் பிடிப்போம்
இந்த முறை யாருமே எதிர்பார்க்காத வகையில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் நிச்சயம் ஆட்சியைப் பிடிக்கும் என்று குஜராத் காங்கிரஸ் இன் சார்ஜ் ரகு ஷர்மா தெரிவித்தார். குஜராத்தில் மொத்தம் 182 தொகுதிகள் உள்ள நிலையில் அதில் காங்கிரஸ் நிச்சயம் 125க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்லும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications