திருப்பாவை, திருவெம்பாவை பாடல் 3: யாரையும் குறைத்து மதிப்பிட கூடாது!
சென்னை: மார்கழி மாதம் மூன்றாவது நாள் இன்று! பரந்தாமன் வாமன அவதாரம் எடுத்தது குறித்தும் அவரது பாதம் பட்டாலே மோட்சம் கிடைக்கும் என்பது குறித்தும் ஆண்டாள் தனது பாசுரத்தில் தெரிவித்துள்ளார்.
பாவை விரதத்தால் உலகம் முழுவதும் மாதம் மும்மாரி மழை பெய்யும். வற்றாத செல்வத்தை தரும் என்பது ஐதீகம். இதனால்தான் கோயில்களில் பஜனை குழுவினர், இந்த பாசுரத்தை, பொது நலன் கருதி பாடுகிறார்கள்.

திருப்பாவை பாடல் 3
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.
பாடல் விளக்கம்: நாராயணன் வாமன அவதாரம் எடுத்து மகாபலி சக்கரவர்த்தியின் யாகத்திற்கு செல்கிறார். அங்கு அவர், "உங்களுக்கு என்ன வேண்டும்" என கேட்க, நம் பரந்தாமனோ, "எனக்கு 3 அடி நிலம் போதும்" என்கிறார்.
வாமன அவதாரத்தில் அவர் குள்ளமாக இருப்பார். இதனால் அவரை என்னாது 3 அடி நிலமா? என கிண்டல் செய்கிறார் மகாபலி சக்கரவர்த்தி! வாமனனின் பாதம் குழந்தையின் பாதம் போல் இருப்பதால் இப்படி கிண்டல் செய்தார்.
வாமனன் ஒரு அடியையும் வைத்த போது பூமியும் 2ஆவது அடியை வைத்த போது விண்ணையும் பெற்றுக் கொண்ட அவர், மூன்றாவது அடி எங்கே வைப்பது என வாமனன் கேட்க, அதற்கு மகாபலி, "என் தலையில் வையுங்கள்" என கூறியதன் பேரில் தலையில் கால் வைத்து ஆணவத்தை ஒடுக்கினார். எனவே திருமாலின் பாதம் பட்டாலே மோட்சம் கிடைக்கும்.
திருவெம்பாவை பாடல் 3
முத்தன்ன வெண்நகையாய் முன்வந்து எதிர் எழுந்தன்
அத்தன் ஆனந்தன் அமுதனென்ற உள்ளுறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடை திறவாய்
பத்துடையீர் ஈசன் பழஅடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மை தீர்த்தாட் கொண்டாற் பொல்லாதே
எத்தோ நின் அன்புடமை எல்லோம் அறியோமே
சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை
இத்தனையும் வேண்டும் நமக்கேலோர் எம்பாவாய்
பாடல் விளக்கம்: முத்து போன்ற பற்கள் தெரியும் அளவிற்கு சிரித்து சிரித்து மயக்குபவளே! முன்பெல்லாம் நாங்கள் வந்து எழுப்பும் முன்னர் நீயே தயாராகி எங்களுக்காக காத்திருப்பாய், சிவனே என் தலைவன் என்பாய், அவர் புகழை இனிக்க இனிக்க பேசுவாய். ஆனால் இப்போது இத்தனை மணி நேரமாக தூங்கிக் கொண்டிருக்கிறாய்! கதவைத் திற என தோழிகள் கூக்குரலிடுகிறார்கள். அதற்கு அந்த தோழி, "ஏதோ அசதியால் தூங்கிவிட்டேன், அதற்காக இப்படியா செய்வீர்கள்?" என கேட்டு முகத்தை வாட்டமாக வைத்துக் கொள்கிறாள். அதற்கு தோழிகள் அவளை சமாதானம் செய்கிறார்கள்.












Click it and Unblock the Notifications