திருப்பாவை, திருவெம்பாவை பாடல் 6: கண்ணனை கொல்ல வந்த அரக்கி! மோட்சம் கொடுத்த கிருஷ்ணன்!
சென்னை: மார்கழி மாதம் 6-ஆம் நாள் இன்று! பொதுவாக சொன்ன சொல்லை காப்பாற்ற வேண்டும். வார்த்தைகளை விட செயல்களே சிறந்தது என்பது குறித்து பாடல் உள்ளது. மேலும் தன்னை கொல்ல வந்த அரக்கிக்கு கண்ணன் மோட்சம் கொடுத்தது எப்படி தெரியுமா?

திருப்பாவை பாடல் 6
புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய்! பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்
பாடல் விளக்கம்: தோழியே சீக்கிரம் எழுந்திரு! பறவைகள் எல்லாம் அதிகாலையிலேயே எழுந்து கீச்சிடும் ஒலி உன் காதில் விழவில்லையா? கருட வாகனத்தை கொண்ட பெருமாளின் கோயிலில் வெள்ளை நிற சங்குகள் எழுப்பும் சப்தம் உன் காதில் விழவில்லையா? பேய் வடிவம் எடுத்து தன்னை கொல்ல வந்த அரக்கி பூதகியிடம் பால் குடிப்பது போன்று நடித்து அவளது உயிரை பறித்தவனும் சக்கர வடிவில் வந்த சகடன் என்ற அரக்கனின் உயிரை குடித்தவனுமான கண்ணனை முனிவர்கள், ஹரிஓம் என அழைப்பது உன் காதில் கேட்கவில்லையா, உடனே எழுந்து குளித்துவிட்டு வா என்பதுதான் இந்த பாசுரத்தின் அர்த்தம்.
திருவெம்பாவை பாடல் 6
மானே நீ நென்னலை நாளை வந்து உங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசை பகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானே வந்து எம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்கு உன் வாய் திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்கும் தம் கோனைப் பாடேலோர் எம்பாவாய்
பாடல் விளக்கம்: மான் போன்று நடப்பவளே! நேர்று நீ எங்களிடம் பேசும் போது அதிகாலையில் எங்களை வந்து எழுப்பேன் ென சொல்லிவிட்டு நீ தூங்கிக் கொண்டிருக்கிறாய், நாங்கள் உன்னை வந்து எழுப்புகிறோமே! நீ சொன்ன சொல் எந்த திசைக்கு சென்றுவிட்டது தோழியே? சொன்ன வாக்கை காப்பாற்ற முடியாததற்கு வெட்கப்படு. உனக்கு இன்னுமா பொழுது விடியவில்லை. விண்ணுலகினரும் மண்ணுலகினரும் சிவனை புகழ்ந்து பாடி வரும் நிலையில் உனக்கு தூக்கம் அவசியமா? சீக்கிரம் எழுந்து ஈசனின் புகழை பாடு என தோழியை எழுப்புகிறார்கள்.












Click it and Unblock the Notifications