Thai Pusam: தைப்பூச திருவிழா எப்போது கொண்டாடப்படுகிறது? முருகனுக்கு விரதம் இருக்க உகந்த நேரம் எது?
சென்னை: முருகனுக்கு உகந்த, தைப்பூச திருவிழா எப்போது கொண்டாடப்படுகிறது, எந்த நேரத்தில் முருகனை வழிப்படலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம். தைப்பூசத்தன்று விரதம் அனுசரிப்பதால் என்னென்ன பலன்கள் என்பதையும் பார்க்கலாம்.
இதுகுறித்து ஆத்ம ஞான மையம் யூடியூப் சேனலில் ஆன்மீக சொற்பொழிவாளர் தேச மங்கையர்கரசி என்பவர் கூறியிருப்பதாவது: முருகனின் அருளைப் பரிபூரணமாகப் பெற்ற பாம்பன் சுவாமிகளின் வாழ்க்கையில் நடந்த இந்த சுவாரஸ்யமான நிகழ்வு, சத்தியத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. பாம்பன் சுவாமிகள் முருகப்பெருமானை நேருக்கு நேராக தரிசிக்க வேண்டும் என்ற வைராக்கியத்துடன் மயானத்தில் குழிதோண்டி தவம் இருந்தவர்.

எனது குருநாதரான வள்ளல் வாரியார் சுவாமிகள் அவரை இரண்டாவது அருணகிரிநாதர் என்று போற்றினார். திண்டுக்கல்லில் அவர் தங்கியிருந்தபோது, பழனிக்குச் செல்வது குறித்து அவர் சொன்ன பொய்யே அவரை முருகனிடம் இருந்து தடுத்தது. தைப்பூசம் முருகனுக்கு உகந்த நாள். இந்த நாளில் முருக பக்தர்கள் காவடி எடுத்தும், பால்குடம் ஏந்தியும், விரதம் இருந்தும் வழிபடுகிறார்கள்.
பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். முருகனின் தரிசனம் பெற நாம் புண்ணியம் செய்திருக்க வேண்டும். தைப்பூசத்தன்று முருகனை வழிபடும்போது சத்தியம், உண்மை என்ற விஷயத்தை கடைபிடிக்க வேண்டும்.
முருகப்பெருமான் நெருப்புக்கு சமமானவர். அவர் சத்தியமான தெய்வம். கேட்டதை தரும் வள்ளல். சத்தியம் உள்ளவர்களுக்கு அவர் அருள் பாலிக்கிறார் என்பதை பாம்பன் சுவாமிகளின் வரலாறு உணர்த்துகிறது.
தைப்பூச திருநாளில் எளிமையான முறையில் முருகனை வழிபடலாம். குழந்தை வரம் வேண்டுபவர்கள், நோயிலிருந்து குணமாக விரும்புபவர்கள் விரதம் இருக்கலாம். முடியாதவர்கள் பால், பழம் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். முருகனுக்கு சர்க்கரை பொங்கல், பாயசம் நெய்வேத்தியமாக படைக்கலாம்.
தைப்பூசத்தன்று வள்ளலாரையும் வழிபட வேண்டும். வடலூரில் ஜோதி ஸ்வரூபமாக அருள்பாலித்த வள்ளல் பெருமானார் ஜோதியில் கலந்த தினமும் இதுவே. மதியம் தயிர் சாதம், அப்பம் படைக்கலாம். அருட்பெருஞ்ஜோதி மந்திரத்தை ஜெபித்தால் உடல் நோய்கள், மன நோய்கள் நீங்கும். தைப்பூசத்தன்று திருப்புகழ் பாராயணம் செய்யலாம்.
அலங்காரம், அனுபூதி, வேல்மாறல், வேல் வகுப்பு போன்றவற்றை பாராயணம் செய்யலாம். மாலை 6 மணிக்கு விளக்கேற்றி முருகனை வழிபட்டு விரதத்தை பூர்த்தி செய்யலாம்.யாரேனும் ஒருவருக்கு அன்னதானம் செய்வது நல்லது.
2026ஆம் ஆண்டு தைப்பூசம் பிப்ரவரி 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. அன்றைய தினம் அதிகாலை 4:41 மணி முதல் பிப்ரவரி 2-ஆம் தேதி அதிகாலை 4:43 மணி வரை பௌர்ணமி உள்ளது.
பூச நட்சத்திரம் பிப்ரவரி 1-ஆம் தேதி அதிகாலை 1:54 மணி முதல் பிப்ரவரி 2ஆம் தேதி அதிகாலை 1:01 மணி வரை இருக்கிறது. வழிபாட்டிற்குரிய நேரத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இவ்வாறு அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications