பழனி தண்டாயுதபாணிக்கு 15 டன் பஞ்சாமிர்தம்..எடப்பாடி பக்தர்களின் பாரம்பரியம்..சுவாரஸ்ய பின்னணி
பழனி: பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றதைத் தொடர்ந்து தைப்பூச பெருவிழா கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. தேரோட்டமும் தெப்பத்திருவிழாவும் முடிந்த களைப்பில் முருகன் இருக்க எடப்பாடியில் வசிக்கும் பருவதராஜ குல மக்கள் ஆயிரக்கணக்கான காவடிகளுடன் ஆடிப்பாடி வந்து 15 டன் பஞ்சாமிர்தம் செய்து குளிர குளிர அபிஷேகம் செய்து மருமகனை குளிர்வித்துள்ளனர்.

தமிழ் கடவுள் முருகப்பெருமான் எப்படி மருமகன் அக முடியும் என்று கேட்கிறீர்களா? திருச்செந்தூர் முருகன் மீனவப்பெருமக்களுக்கு மாப்பிள்ளை சாமி, அதே போலத்தான் எடப்பாடி மக்களுக்கு முருகப்பெருமான் மருமகன் சாமி.
பழனி முருகன் கோயிலுக்கு சேலம் மாவட்டம் எடப்பாடியில் இருந்து பருவதராஜகுல சமூகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் சாமி தரிசனம் செய்ய வந்துள்ளனர். மேலும், எடப்பாடியில் இருந்து பாதயாத்திரையாக பழனிக்கு காவடி எடுத்து வந்த அவர்கள், மலை மீது ஒரு நாள் தங்கியிருந்து முருகனை வழிபாடு செய்தனர்.
பழனி மலை முருகனை தரிசிக்க செல்பவர்கள் மாலையில் கீழிறங்கி விட வேண்டும். ஆனால் எடப்பாடி பருவதராஜ குல மக்கள் மட்டும்தான் விடிய விடிய தங்கியிருந்து பல ஆயிரம் கிலோ பஞ்சாமிர்தம் தயாரித்து வழிபட அனுமதி அளிக்கப்படுகிறது.

பழனி தைப்பூச திருவிழாவிற்கு வருகை தரும் பிரசித்தி பெற்ற காவடி குழுக்களில் சேலம் மாவட்டம், எடப்பாடி பருவத ராஜகுல தைப்பூச காவடிகள் சிறப்பானது. எடப்பாடி நகரத்தில் பக்தர்கள் காவடி எடுத்துச் செல்லும்போது அந்தந்த பகுதிகளில் உள்ள பெண்கள் காய்கறிகள், பழங்கள், பல்வேறு வகை மாலைகள், கடலை, சர்க்கரை, மாவு உள்ளிட்ட வகைகளை படைத்து பக்தர்களுக்கு வழங்குவார்கள். கணபதி கவுண்டர் என்பவரிடம், முதியவர் வேடத்தில் முருகன் வந்து ஆதி காவடியை கொடுத்து பழனி மலைக்கு வழிகாட்டி சென்றதாகவும் இக்காவடிதான் எடப்பாடியில் இருந்து பழனி மலைக்கு எடுத்துச் சென்ற முதல் காவடி என்று கூறப்படுகிறது.

சேலம் மாவட்டம் வலசைபழைய பேட்டை, புதுப்பேட்டை, கவுண்டம்பட்டி, சின்னமணலி, எடப்பாடி, க.புதூர் உள்ளிட்ட ஊர்களை சேர்ந்த காவடி குழுவினர் 250 கிலோமீட்டர் தூரம் பாதையாத்திரையாக வந்தனர். எடப்பாடி மக்களின் பாதயாத்திரையின்போது அவர்களுடன் முருகனும் சேர்ந்து பயணிப்பதாகவும் நம்பிக்கை.சண்முகநதியில் குளித்து முடித்த பின் சிவப்பு, மஞ்சள், நீல நிற குடைகளை ஏந்தி மயில் காவடி, இளநீர் காவடிகளுடன் காவிநிற ஆடை அணிந்து உற்சாகமாக வந்தனர். மலைக்கோயிலில் தங்கி சாயரட்சை பூஜை, ராக்கால பூஜை உள்ளிட்டவைகளில் பங்கேற்றனர். இந்த ஆண்டு சுமார் 30 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் வந்ததால் பழனி நகரம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

தண்டாயுதபாணி அருள்பாலிக்கும் மலையை மலர்களால் அலங்கரித்து ஆட்டம் பாட்டம் என பழனியை அமர்களப்படுத்தினர். கடந்த 350 ஆண்டுகளுக்கு மேலாக பருவத ராஜகுல காவடி குழுவினர் கோயிலுக்கு வந்து கொண்டிருக்கின்றனர். பழனி முருகன் கோயில் மலை மீது தங்கிய எடப்பாடியை சேர்ந்த பக்தர்கள், படி பூஜை, மலர் வழிபாடு செய்து முருகனை வழிபட்டனர்.
பழனி மலையை மலர்களால் அலங்கரித்த எடப்பாடி மக்கள் 10 டன் மலை வாழைப்பழம், 10 டன் சர்க்கரை, 900 கிலோ பேரீட்சை, 75 கிலோ கற்கண்டு, 20 டின்களில் நெய், தேன், ஏலக்காய் ஆகியவற்றை கொண்டு 15 டன் பஞ்சாமிர்தம் தயாரித்தனர். நேற்று இரவு மலைக் கோயிலில் தங்கியிருந்து பஞ்சாமிர்தத்தை முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். இந்த வழக்கம் நூற்றாண்டுகளாக பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications