சித்ரா பவுர்ணமி 2025: திருவண்ணாமலை கிரிவலம் செல்ல உகந்த நேரம் எது? கோயில் நிர்வாகம் அறிவிப்பு
திருவண்ணாமலை: சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலை கிரிவலம் வர உகந்த நேரத்தை அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அது போல் சித்ரா பவுர்ணமியன்று விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.

மாதந்தோறும் பவுர்ணமி வந்தாலும் சித்திரை மாதத்தில் வரும் சித்ரா பவுர்ணமி மிகவும் முக்கியமானது. இந்த நாளில் கிரிவலம் செல்வது சிறப்பு வாய்ந்தது.
அந்த வகையில் இந்த சித்ரா பவுர்ணமி மே 11 ஆம் தேதி வருகிறது. ஒவ்வொரு மாதமும் கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் நிர்வாகமே அறிவிக்கும். அந்த வகையில் இந்த முறையும் கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை அறிவித்துள்ளது.
மே 11 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 8.01 மணி முதல் மே 12 ஆம் தேதி இரவு 10.25 மணி வரை சித்ரா பவுர்ணமிக்கு கிரிவலம் செல்ல உகந்த நேரமாகும். வழக்கத்தை விட இந்த நாளில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதால் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.
கிரிவல பாதையில் அனுமதிக்கப்பட்ட இடத்தை தாண்டி கடையை விரித்துள்ள கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அது போல் 20 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுகிறது.
அண்ணாமலையார் கோவில், கிரிவலப் பாதை பகுதியில் பக்தர்களுக்குத் தேவையான இடங்களில் போதுமான கழிவறைகளும் குடிநீர் வசதிகளும் ஏற்பாடு செய்யப்படவிருக்கின்றன. அனுமதி பெற்ற இடங்களில் மட்டுமே அன்னதானம் வழங்கப்பட வேண்டும். அது போல் உணவு தரமாக இருத்தல் வேண்டும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில் சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் கற்பூரம் ஏற்ற தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications