காலண்டரில் கிழக்கே சூலம், பரிகாரம் தயிர் என இருக்குமே! பார்த்திருக்கீங்களா? அப்படின்னா என்ன?
சென்னை: காலண்டரில் தேதி, கிழமை, நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம், நட்சத்திரம், விசேஷ நாட்கள் உள்ளிட்டவைகளை அன்றாடம் காலண்டரில் பார்த்துள்ளோம். அதில் வடக்கே சூலம் என்றும் பரிகாரம் பால் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கும்.
அப்படியென்றால் என்ன என்பது தெரியுமா? காலண்டரில் கரி நாள் என்றிருக்கும், அன்றைய நாளில் நல்ல செயல்களை தொடங்க மாட்டோம். அந்த வகையில் சூலம் என்றால் பிரயாணத்திற்கு பார்க்கப்படுவது ஆகும்.

அதாவது பயணம் செய்யும் போது பார்க்கப்படும் சகுனம் ஆகும். அந்த காலங்களில் வாகனங்கள் இல்லாதபோது மக்கள் நீண்ட தூரம் செல்ல கும்பல் கும்பலாக யாத்திரையாக செல்வார்கள். அந்த யாத்திரை இன்றும் கோயில்களுக்கு செல்வதில் கடைப்பிடிக்கப்படுகிறது.
நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ளும் போது சூலம் பார்ப்பதை முன்னோர்கள் நமக்கு சொல்லிக் கொடுத்துள்ளனர்.
இந்த சூலத்தை எப்படி பார்க்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். ஞாயிற்றுக்கிழமையில் மேற்கு, வடமேற்கு பக்கம் யாத்திரை செல்லும் போது 12 நாழிகை என்றால் சரியாக 5 மணி நேரம் ஆகும். அந்த 5 மணி நேரத்திற்கு அந்த திசை பக்கம் போகக் கூடாது. வேறு வழியே இல்லை அவசரமாக செல்லத்தான் வேண்டும் என்றால் பரிகாரமாக வெல்லத்தை வாயில் போட்டுக் கொண்டு செல்வது நன்மை ஏற்படுத்தும் என்கிறார்கள்.
அது போல் வியாழக்கிழமை என்றால் அன்று தெற்கு, தென்கிழக்கு திசையில் யாத்திரை மேற்கொள்வதாக இருந்தால் 20 நாழிகை, அதாவது சூரியன் உதயமாகி சரியாக 8 மணி நேரத்திற்கு அந்த திசை பக்கம் செல்லவே கூடாது. அப்படியே போக வேண்டும் என்ற அவசரம் இருந்தால் ஒரு தைலம் சாப்பிட்டுவிட்டு செல்லலாம்.
எதற்கெல்லாம் சூலம் பார்க்க தேவையில்லை: திருமணம், சுவாமி புறப்பாடு, கும்பாபிஷேகம் உள்ளிட்டவைகளுக்கு சூலம் பார்க்க வேண்டிய அவசியமில்லை. பிரயாணத்திற்குப் பார்த்தால் போதும் குறிப்பாக யாத்திரைக்குச் செல்பவர்களுக்கு சொல்லப்பட்ட விஷயமாகும். எனவே மக்கள் யாரும் குழம்பிவிடாதீர்கள்.

கர்ப்பிணிகள் பயணம் செய்யும் போது சூலம் பார்க்க வேண்டும். சூடு அதிகமாக இருக்கும் பகுதி நோக்கி பயணித்தால் வயிற்றில் உள்ள குழந்தைக்கும் தாய்க்கும் உடல்நலம் பாதிக்கும். அது போல் கிரகபிரவேசம் அன்றும் சூலம் பார்க்க வேண்டும். வீட்டின் தலைவாசல் எந்த திசையை நோக்கி இருக்கிறதோ அதை கணக்கில் வைத்துக் கொள்ள வேண்டும்.
எடுத்துக்காட்டாக, கிழக்கு பார்த்த வாசல் என்றால் ஞாயிறு, வெள்ளிக்கிழமைகளில் புதுமனை புகுவிழா நடத்தக் கூடாது.
சூலம் என்றால் என்ன: அதாவது சூடு அதிகமாக இருக்கும் திசை என்பதாகும். சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய உண்மைக் கோள்கள் ஏழையும் வார நாட்களாக ஞாயிறு, திங்களையும் பெயரிட்டு அழைக்கிறோம். ஒவ்வொரு கோளுக்கும் அந்த நாளுக்குரிய சூலம் காட்டும் திசை இருக்கும். அந்த வகையில் சூரியன், சுக்கிரனின் திசை கிழக்கு என்பதால் ஞாயிறு, வெள்ளியில் மேற்கில் சூலம் இருக்கும். சந்திரன், சனி ஆகியோரின் திசை மேற்கு என்பதால் திங்கள், சனிக்கிழமையில் கிழக்கே சூலம் இருக்கும் என காலண்டரிலும் பஞ்சாங்கத்திலும் சூலம் வகைப்படுத்தப்பட்டுள்ளது. முன்னோர்கள் வகுத்து வைத்த சூலத்தின் மீது நம்பிக்கை இருப்பவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications