கடல்ல மூழ்கி மீண்டும் தோன்றுதாம்.. அற்புதமான அமானுஷ்ய சிவன் கோயில்.. 5 சுயம்புலிங்கம்! நம்ம ஊர்லதான்
சென்னை: ஆன்மீக பூமியாக கருதப்படும் நம்முடைய இந்தியாவில் எத்தனையோ வகையான கோயில்கள் உள்ளன.. ஒவ்வொரு கோயிலும், அதிசயமும், ஆச்சரியமும், பொதித்துள்ளன. அந்தவகையில், உலகின் அற்புதமான புகழ்பெற்ற ஒரு கோயிலை பற்றி சுருக்கமாக இங்கே பார்ப்போம்.
குஜராத்தின் பாவ்நகர் மாவட்டத்தில் கோலியாக் என்ற கிராமத்தில் நிஷ்கலங்க் மகாதேவ் என்ற கோயில் அமைந்துள்ளது. இது பாண்டவர்களால் கட்டப்பட்டது.. இந்த கோயிலில் 5 சுயம்பு லிங்கம் உள்ளன.. இந்த 5 சுயம்பு லிங்கத்துக்கும் ஒரு புராண கதை உள்ளது.

பாண்டவர்கள் கோயில்
பாண்டவர்கள் தங்கள் உறவினர்களை போரில் கொன்றதால், அவர்களுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டுவிட்டதாம். இதனால் கவலை கொண்ட பாண்டவர்கள் கிருஷ்ணரை சந்தித்து, தங்களது பாவங்களை போக்க என்ன வழி என்று கேட்டுள்ளனர். அதற்கு கிருஷ்ணர், ஒரு கருப்பு கொடியையும் ஒரு கறுப்பு பசுவையும் தந்து, பாண்டவர்களை பின்பற்றும்படியும், கொடியும் பசுவும் வெள்ளையாக மாறும்போது, உங்கள் பாவங்களும் நீங்கும், மன்னிப்பு கிடைத்ததும், சிவனை நினைத்து தவம் செயயுங்கள் என்று அறிவுறுத்தினாராம்.
அதன்படியே, பாண்டவர்கள் கொடியையும், பசுவையும் செல்லுமிடமெல்லாம் அழைத்து சென்றனர். கடைசிவரை கொடி, பசு இரண்டுமே நிறம் மாறவில்லை.. கடைசியாக, கோலியாக் கடற்கரைக்கு வந்ததும்தான், அவை இரண்டும் வெள்ளை நிறத்திற்கு மாறியிருக்கிறது.
5 சுயம்பு லிங்கங்கள்
அதன்பிறகு, பாண்டவர்கள் சிவனை நினைத்து தியானம் செய்துள்ளனர்.. இதனால் மனம் குளிர்ந்த சிவபெருமான், சகோதரர்கள் ஒவ்வொருவருக்கும் சிவலிங்கம் வடிவில் காட்சியளிக்க முடிவு செய்துள்ளார்.. அந்தவகையில், பாண்டவர்கள தியானம் செய்யும்போது, ஒவ்வொரு சகோதரன் முன்பும், ஒவ்வொரு லிங்கம் தோன்றியிருக்கிறது.. அப்படித்தான் இந்த 5 சுயம்புலிங்கம் தோன்றியதாம். இந்த கோயிலின் மூலவர் சிவனைதான் நிஷ்கலங்க் மகாதேவ் என்கிறார்கள். நிஷ்கலங்க் என்றால், பரிசுத்தமான என்று பொருள்.
இந்த 5 சிவலிங்கங்களும் ஒரு சதுர மேடையில் அமைந்துள்ளன.. ஒவ்வொரு லிங்கத்திற்கும் ஒரு நந்தி உள்ளது. இந்த கோயிலின் அற்புதம் என்னவென்றால் கடலுக்கு அடியில் அமைந்துள்ளது.. அதாவது, கடலிலேயே புதைந்துள்ளது. கட்டும்போதே இப்படி கடலுக்குள் கட்டினார்களா? அல்லது இயற்கை மாற்றத்தினால் இப்படி நடந்ததா? என தெரியவில்லை.
கொடி மரத்தின் உச்சி
இங்கு கோவிலுக்கு செல்லும் பாதை நள்ளிரவு முதல் மதியம் வரை தண்ணீரில் மூழ்கி இருக்குமாம்.. அப்போது கடல் நீர் மட்டம் கோயில் கொடிமரத்தின் உச்சி வரை இருக்கும்.. இந்த குறிப்பிட்ட நேரத்தில், கோயிலின் 20 அடி தூண் மட்டுமே தெரியும். மதிய நேரத்தில் கோயிலுக்கு செல்ல வழி கிடைக்கும் என்பதால், மதியம் 1:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை பக்தர்கள் நடந்தே கோயிலுக்கு செல்கிறார்கள். மறுபடியும் இரவு 10 மணிக்கு நீர்வரத்து அதிகரித்து, கோயில் கடல் நீரில் மூழ்கும். பிறகு மறுநாள் மதியம் தோன்றும்.
கடலின் அலைகள் எவ்வளவு அடித்தாலும் கோயில் கொடி பாதிக்கப்பட்டதில்லை.. அலைகளில் மூழ்கடிக்கப்பட்டதுமில்லை.. அடித்து செல்லப்பட்டுமில்லையாம்.. அலைகள் பெரிதாக அடித்தாலும், பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்வார்களாம்.
சக்தி வாய்ந்த கோயில்
அவ்வளவு ஏன், குஜராத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் வந்தபோதுகூட, இந்த கோயிலுக்கு ஒரு பாதிப்பும் ஏற்படவில்லையாம்.. எத்தனையோ புயல்களை குஜராத் சந்தித்துள்ள போதும், கல் கொடி மரம் எந்த சேதாரமும் அடைந்ததில்லையாம்..
முன்னோர்களின் சாம்பலை, இந்த நீரில் கரைத்தால், முக்தி அல்லது மோட்சத்தை அடைவார்கள் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும், கோயிலுக்கு செல்ல கடலில் வழி கிடைப்பது, இன்றுவரை உலக அதிசயமாக உள்ளது.












Click it and Unblock the Notifications