திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டுக்கு 308வது பிறந்தநாள்.. நெய் மணக்கும் இனிப்பான பிரசாதம் வந்த கதை
திருப்பதி: ஏழுமலையான் கோவிலின் பிரசித்தி பெற்ற பிரசாதமான லட்டுவிற்கு ஆகஸ்ட் 2ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. திருமலை ஏழுமலையான் கோயிலில் வழங்கப்படும் புகழ் பெற்ற லட்டு பிரசாதம் முதன்முதலாக வழங்கப்பட்டதிலிருந்து தற்போது வரை 308ஆண்டுகள் முடிந்துள்ளது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம் வீசும் அந்த லட்டு ஏழுமலையானுக்கு எப்படி நைவேத்தியமாக படைக்கப்பட்டது என்ற வரலாற்றை நாம் விலாவாரியாக பார்க்கலாம்.
லட்டு வரலாறு: திருப்பதி என்றாலே நம் நினைவுக்கு வருவது ஒன்று திருப்பதி பாலாஜி, மற்றொன்று திருப்பதி லட்டு பிரசாதம். வேறெங்கும் இல்லாத அளவிற்கு அவ்வளவு தரமானதாகவும், சுவையானதாகவும் வேறெங்கும் கிடைப்பதில்லை. திருமலை திருப்பதி திருக்கோயிலில் பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது. திருப்பதி லட்டுவிற்கு தனித்துவம் உண்டு. திருப்பதி லட்டு போல் வேறு எந்த இடத்திலும் தயாரிக்க முடியாது. அந்த அளவிற்கு அதன் சுவை தனித்துவமாக இருக்கும். அதற்காகவே இந்த லட்டுக்கு மவுசு அதிகம். சந்திரபாபு நாயுடு லட்டுவிற்கு பதிலாக ஜாங்கிரியை பிரசாதமாக கொடுக்க சொல்லியிருக்கிறார் என்று விவேக்கிடம் ஒரு படத்தில் மயில்சாமி ரீல் சுற்றுவார். அதையும் நம்புவார் விவேக். அது காமெடிக்காகதான் என்றாலும் பலவகை பிரசாதங்கள் ஏழுமலையானுக்கு படைக்கப்பட்டுள்ளன.

ஏழுமலையான் நைவேத்தியம்: ஏழுமலையானுக்கு பல வகை நைவேத்தியங்கள் படைக்கப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக இரண்டாம் தேவராயர் காலத்தில் நைவேத்தியங்களின் எண்ணிக்கை அதிகமானது. சேகர மல்லாண்ணன் என்ற அமைச்சர் பல வகையான உணவுகளை தானமாக வழங்கினார். அப்போது தான் ஸ்ரீவாரி நைவேத்திய சமயம் என்ற முறை ஏற்படுத்தப்பட்டது.
மண் சட்டி தயிர் சாதம் : திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் பொங்கல், தயிர்சாதம், புளிச்சாதம், சித்ரான்னம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், மெளகாரம், லட்டு, பாயசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி போன்ற பிரசாதங்கள் தினமும் பெரிய அளவில் தயார் செய்யப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகின்றன. விதவிதமான பிரசாதங்கள் செய்யப்பட்டாலும் குலசேகரன்படியைத் தாண்டி மண் சட்டியில் தயிர்சாதம் மட்டுமே நைவேத்தியமாக படைக்கப்பட்டு வருகிறது. அந்த நைவேத்தியம் பிரசாதமாக கிடைக்கப்பெற்றால் அவர்கள் பாக்கியசாலிகள்.
திருப்பதி லட்டு சுவை: எத்தனையோ பிரசாதங்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விநியோகம் செய்யப்பட்டாலும் லட்டு பிரசாதத்திற்கு நிகர் வேறு எதுவுமில்லை. நாத்திகம் பேசுபவர்கள் கூட லட்டு பிரசாதத்தை ஆசையாக வாங்கி சாப்பிடுவார்கள். உலகத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ள இந்த லட்டு என்பதால், திருப்பதி லட்டுக்கு காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது. வேறு எங்கும் அதுபோல தயாரித்து விற்பனை செய்ய முடியாது. அதுமட்டுமல்லாமல் உற்பத்தி மற்றும் அளவு, நறுமண மனத்துடன் வேறு எங்கும் தயாரிக்கப்படுவதில்லை.
நெய் வாசம் வீசும்: ஏழுமலையானை தரிசனம் செய்தவர்கள் அடுத்து செல்வது லட்டு பிரசாதம் வாங்கத்தான். லட்டு தயார் செய்யும் பக்கம் சென்றாலே நெய் வாசம் கமகமக்கும். கடலை மாவு, சர்க்கரை, நெய், ஏலக்காய், பச்சை கற்பூரம், பாதாம், முந்திரி,கல்கண்டு, உலர் திராட்சை, குங்குமப்பூ ஆகியவைகளை குறிப்பிட்ட அளவில் அதற்கென உள்ள முறைப்படி சேர்த்து திருப்பதி லட்டு தயாரிக்கப்படுகிறது. திருமலையில் தினசரி 2 லட்சம் முதல் 3 லட்சம் எண்ணிக்கையில் லட்டுகள் பிரசாதமாக தயாரிக்கப்படுகிறது. உற்சவ நாட்களில் 5 லட்சம் லட்டுகள் வரை தயார் செய்து பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.
308வது பிறந்தநாள்: ஏழுமலையானுக்கு லட்டு நைவேத்தியம் படைப்பது, கடந்த 1715ம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி துவக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே, இந்த லட்டு பிரசாதத்திற்கு தற்போது 308 வயதாகிறது. லட்டு பிரசாத விற்பனை மூலம், தேவஸ்தானத்திற்கு மாதம் 1 கோடி ரூபாய் வருமானம் கிடைத்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த 2009ல் திருப்பதி லட்டு பிரசாதத்திற்கு புவிசார் குறியீடும் வழங்கப்பட்டது. 'திருப்பதி லட்டு' என்ற பெயர் திருப்பதி தேவஸ்தானத்துக்கு மட்டுமே சொந்தம்.
பக்தர்களுக்கு பிரசாதம்: லட்டு படைப்பதற்கு முன்பு திருப்பதி ஏழுமலையானுக்கு வடை முக்கிய பிரசாதமாக படைக்கப்பட்டு வந்தது. தற்போதுள்ள போக்குவரத்து வசதியோ, உணவகங்கள் என எந்த வசதியும் இல்லாத காலத்தில், திருப்பதி வெங்கடாசலபதியை தரிசிக்க இரண்டு அல்லது மூன்று நாட்கள் தங்கி ஓய்வெடுத்து, தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பும் பழக்கம் இருந்தது. சுவாமி தரிசனம் செய்து ஊர் திரும்பும் வரை, பக்தர்களுக்கு தேவையான உணவு கோயில் பிரசாதகமாக வழங்கப்பட்டது. இதனால் அதற்கு 'திருப்பொங்கல்' என்ற பெயரில் பிரசாதம் வழங்கப்பட்டது. பக்தர்கள் வீடு சென்றடையும் வரை திருப்பொங்கல் எனும் பிரசாத உணவு தான் அவர்களின் பசியைப் போக்கக்கூடியதாக இருந்தது. அதுதவிர அங்கு பிரசாதமாக அதிரசம், அப்பம், வடை, சுய்யம், மனோகரப்பொடி பிரசாதங்கள் தயார் செய்ய பட்டன. இதில் வடை மட்டுமே விரைவில் கெட்டுப்போகாமல் வெகுநாட்கள் தாங்கும்.
கல்யாணம் ஐயங்கார்: ஏழுமலையானுக்கு பிரசாதங்களை தயாரித்து பூஜை செய்ய வழங்கி வந்தவர் கல்யாண ஐயங்கார் குடும்பத்தினர். இவர்கள் தான் பூந்தியை லட்டாக்கி பிரசாதமாக்கியவர்கள் என்று சொல்லப்படுகிறது. 'கல்யாணம் ஐயங்கார்' என்று அன்போடு அனைவராலும் அழைக்கப்பட்ட அவரின் இயற்பெயர் ஸ்ரீமான் பூதேரி பத்தங்கி ஸ்ரீனிவாசராகவன். பூதேரி கிராமத்திலிருந்து வந்து தன் உறவினர்களுடன் திருமலையில் தங்கி திருமலை வெங்கடேஷ பெருமாளுக்கு குடும்பத்துடன் கைங்கரியம் செய்யும் பணியில் ஈடுபடுத்திக் கொண்டவர்.
நேர்த்திக்கடன்: ஒரு நாள் பணக்கார வியாபாரி ஒருவர் தன் வேண்டுதலை நிறைவேற்றி வைத்தால் ஏழுமலையானுக்கு மலை போன்று பிரமாண்டமான லட்டு தயாரித்து பெருமாளின் திருக்கல்யாண உற்சவத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்கு அளிப்பதாக வேண்டி கொண்டாராம். அவருடைய வேண்டுதலை பெருமாள் நிறைவேற்றினார். அவர் சொன்னபடி பெரிய லட்டு செய்து இறைவனுக்கு வழங்கினாராம். லட்டு பணி செய்யும் ஊழியர்களுக்கு ஊதியமாக லட்டுகளே கொடுத்துள்ளனர். முன்னர் மிராசுதார்கள் லட்டு செய்யும் பணியை மேற்கொண்டனர். 1996ஆம் ஆண்டில் மிராசுதார்களின் உரிமையை நீக்கிவிட்டு தேவஸ்தானமே லட்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. கோவில் வளாகத்திலேயே லட்டு சிறப்பான முறையில் தயார் செய்யப்படுகிறது.
காத்திருக்கும் பக்தர்கள்: ஏழுமலையான் தரிசனம் முடிந்த உடனே பக்தர்கள் நேராக செல்வது லட்டு வாங்குவதற்குத்தான். 300 ரூபாய் தரிசன டிக்கெட் வாங்குபவர்களுக்கு 2 லட்டு பிரசாதம் கொடுக்கப்படும். கல்யாண பிரசாத லட்டு எனப்படும் பெரிய லட்டு 200 ரூபாய் ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. ஏழுமலையானுக்கு தினசரி, வாராந்தர, வருடாந்திர சேவைகள் நடைபெற்று வருகின்றன. இதில் தினசரி சேவைகளான சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், வசந்தோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவைகளுக்கு ஏழுமலையானின் தரிசனத்துடன் இலவசமாக 2 பெரிய லட்டு வழங்கப்பட்டது. திருக்கல்யாண சேவைக்கு 2 பெரிய லட்டுகள், 2 வடைகள், 5 சிறிய லட்டுகளும் வழங்கப்படுகின்றன. இதுவே வாராந்திரசேவைகளான விசேஷ பூஜைக்குஒரு பெரிய லட்டு, ஒரு வடை, அஷ்டதள பாத பத்மாராதனை சேவைக்கு 2 பெரிய லட்டு,2 வடைகள், சகஸ்ர கலசாபிஷேகத்துக்கு 2 பெரிய லட்டு, 2வடைகள், 2 அப்பம், திருப்பாவாடை சேவைக்கு 1 பெரிய லட்டு, 1 வடை, 1 ஜிலேபி, 1 முறுக்கு, அபிஷேகம் மற்றும் வஸ்திர சேவைக்கு 2 பெரிய லட்டு, 2 வடைகள், நிஜபாத சேவைக்கு 2 பெரிய லட்டும் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. இப்போது எல்லாமே காசு கொடுத்தால் பிரசாதம் என்றாகி விட்டது. அதே நேரத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்து விட்டு வரும் போதே புளியோதரை, பொங்கல், சர்க்கரை பொங்கல் போன்ற பிரசாதங்களும் இலவசமாக கொடுப்பது கூடுதல் சிறப்பு.
நாவில் நிற்கும் ருசி: ஏழுமலையான் தரிசனத்திற்காக பல கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து மணிக்கணக்கில் காத்திருந்து சில நிமிட நேரமே அந்த கோவிந்தனின் தரிசனம் கிடைத்தாலே பூர்வ ஜென்ம பாக்கியம் என்று நினைக்கும் பக்தர்கள் தங்களுக்கு மட்டுமல்லாது தங்களின் உறவினர்களுக்கும் சேர்த்துதான் லட்டு பிரசாதத்தை பெற்று செல்வார்கள். திருப்பதி போய் விட்டு வந்தேன் என்று உறவினர்களிடம் போய் சும்மா சொல்வதை விட லட்டுடன் போய் சொல்வதுதானே சிறப்பு. அந்த லட்டு பிரசாதத்தை கைகளில் வாங்கி கண்களில் ஒற்றிக்கொண்டு கொஞ்சம் வாயில் போட்டு ருசி பார்த்தாலே நேரில் போய் ஏழுமலையானை தரிசித்தது போல உணர்வார்கள். அத்தனை சிறப்பு வாய்ந்த லட்டு தனது 308வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளது என்றால் அது சாதாரண விசயமில்லை.
-
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்!












Click it and Unblock the Notifications