சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் திருவோடு, திருப்புகழ் புத்தகம் வைத்து பூஜை! என்ன நடக்குமோ?
காங்கேயம்: திருப்பூர் மாவட்டம் சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் விபூதி நிறைந்த திருவோடு, ஒரு ருத்ராட்சம் மற்றும் திருப்புகழ் புத்தகம் வைத்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம்- சிவன்மலை ஸ்ரீ சுப்பிரமணியர் திருக்கோவில் உள்ளது. இங்கு ஆண்டவர் உத்தரவு பெட்டி வழிபாடு செய்யப்படுகிறது. முருகப்பெருமான் பக்தர்களின் கனவில் வந்து சில பொருட்களை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் வைத்து பூஜை செய்ய உத்தரவிடுவார்.

அந்த பக்தர், நேராக கோயிலுக்கு வந்த தனக்கு கனவில் வந்ததை கோயில் நிர்வாகத்திடம் சொல்ல வேண்டும். இவர்கள் சொல்வது உண்மையா பொய்யா என்பதை அறிய பூசாரி பூ போட்டு உத்தரவு கேட்பார், அதாவது வெள்ளை பூ வந்துவிட்டால் ஏற்கெனவே வைத்து பூஜை செய்யும் பொருட்களை எடுத்துவிட்டு இவர் சொல்வதை வைக்கலாம்.
சிகப்பு பூ வந்தால் அந்த பக்தர் சொல்லும் பொருளை மாற்றி வைக்கக் கூடாது என்று உத்தரவு கொடுத்ததாக எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் வைக்கப்படும் பொருளானது, நாட்டில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தும். அந்த வகையில் நவம்பர் 12-ஆம் தேதி சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் அகல் விளக்கு வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.
கடந்த 9ஆம் தேதி சிறிய கலசத்துடன் கங்கை தீர்த்தம் வைத்து பூஜை நடந்திருந்தது. இந்த நிலையில் உசிலம்பட்டியை சேர்ந்த பக்தர் குடும்பத்தினர் சார்பில் புதிய பொருட்கள் வைக்கப்பட்டது.
கங்கை தீர்த்தம் வைக்கப்பட்ட 9ஆவது நாளில் பொருள் மாற்றப்பட்டுள்ளது. தற்போது திருவோடு நிறைய விபூதியும் ருத்ராட்சமும் வைக்கப்பட்டுள்ளது. மேலும் நோய் தீர்க்கும் திருப்புகழ் மருந்து புத்தகமும் வைக்கப்பட்டுள்ளது. விபூதியும் ருத்ராட்சமும் நோய் தீர்க்கும் மருந்து என்பதைத்தான் முருகன் உணர்த்தியிருக்கிறார்.
செவ்வாய்க்கிழமைகளில் திருப்புகழ் பாடினால் தீராத வினை தீரும் என்பார்கள். செவ்வாய்க்கிழமை உத்தரவு பெட்டியின் பொருள் (டிச. 17) மாறியுள்ளது. இது நாட்டில் எந்தமாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்வி எழுந்துள்ளது. திருவோடு வைக்கப்பட்டுள்ளதால் நாட்டின் பொருளாதாரத்தில் ஏதேனும் சரிவு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் மக்களுக்கு எழுந்துள்ளது.
இதுகுறித்து ஆன்மீகவாதிகள் சிலர் கூறுகையில் உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டுள்ள விபூதி, திருவோடு, ருத்ராட்சம், திருப்புகழ் ஆகிய 4 பொருட்களும் தெய்வீக தன்மை கொண்ட பொருட்களாகும். திருப்புகழ் படித்தால் தீராத வினையெல்லாம் தீரும். திருப்புகழ் பாராயணம் செய்யப்பட வேண்டும். ருத்ராட்ச வழிபாடும் சிறப்பு என தெரிவித்துள்ளனர்.
திருவண்ணாமலையில் நிலச்சரிவு ஏற்பட்டதை உணர்த்தும் விதமாக நவம்பர் 12 ஆம் தேதி அகல் விளக்கு வைத்து வழிபடச் சொன்னதாக நம்பப்படுகிறது. இந்த நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்துவிட்டனர். கார்கில் போர், சுனாமி, சசிகலா சிறை சென்ற விவகாரம் என நிறைய விஷயங்களை சிவன்மலை ஆண்டவர் முன்கூட்டியே மக்களுக்கு உணர்த்தியிருக்கிறார் என்பதால் இங்கு வைக்கப்படும் பொருட்களுக்கு மக்கள் மத்தியில் அத்தனை எதிர்பார்ப்பு நிலவுகிறது.
அது போல் பருத்தி, இளநீர், மஞ்சள் உள்ளிட்டவை வைத்து பூஜை செய்ய சொன்ன போது படுபாதாளத்தில் இருந்த அவற்றின் விலையில் உயர்வு ஏற்பட்டு விவசாயிகளின் வயிற்றில் பால் வார்க்கப்பட்டது. அது போல் கொரோனா காலகட்டத்தில் மஞ்சளை வைத்து பூஜை செய்ய சொன்ன போது நாம் கொரோனா தொற்றிலிருந்து தப்பிக்க மஞ்சள் தூளை நிறைய பயன்படுத்தினோம். மஞ்சள் ஒரு கிருமிநாசினி. இப்படியாக பல்வேறு விஷயங்களை இந்த உத்தரவு பெட்டி உணர்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications