தகிக்கும் வெப்பம்..சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு நீர் மோர்..பானகம்..அறநிலையத்துறை அதிரடி
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கோடை வெப்பத்தை தணிக்க பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டு வருகிறது.
சென்னை: கோடை காலம் தொடங்கி விட்டதால் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் அனைத்து பக்தர்களுக்கும் சுகாதாரமான குடிநீர், நீர்மோர், எலுமிச்சை பானம் வழங்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. தேவையான இடங்களில் நிழற்பந்தல் அமைத்து மின்விசிறிகள் பொருத்த வேண்டும் என்று
இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
கோடை காலங்களில் அரசியல் கட்சியினர் போட்டி போட்டுக்கொண்டு தண்ணீர் பந்தல் அமைத்து நீர் மோர், பானகம் கொடுப்பார்கள். தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கிவிட்டது. இப்போதே அனல் தகிக்க ஆரம்பித்து விட்டது. கோவில்களில் கோடை காலத்தில்தான் திருவிழாக்களும் அதிகமாக நடைபெறும்.

பள்ளி விடுமுறை நாட்களில் பக்தர்கள் கோவில்களில் சாமி தரிசனம் செய்ய வருவார்கள். கோடை காலத்தில் பக்தர்கள் எந்தவித சிரமம் இல்லாமல் தரிசனம் செய்வதற்கு இந்து சமய அறநிலையத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்து சமய அறிநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களுக்கு கோடை காலத்தில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த அறிவிப்புகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, சுவாமி தரிசனம் செய்ய வரும் அனைத்து பக்தர்களுக்கும் சுகாதாரமான குடிநீர், நீர்மோர், எலுமிச்சை பானம் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், திருக்கோயில்களில் நடைபாதைகளில் சூரிய வெப்பத்தை தவிர்க்க குளிர்ச்சி தரும் வகையில் வெண்மை நிற வண்ணம் பூசப்பட வேண்டும் எனவும் தேங்காய் நார்களினால் ஆன தரைவிரிப்புகள் பக்தர்கள் நடக்கும் நடைபாதையில் அமைக்க வேண்டும் எனவும் இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் தேவையான இடங்களில் நிழற்பந்தல் அமைத்து மின்விசிறிகள் பொருத்த வேண்டும் என்று அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications