Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெண்கள் நெற்றியில் பொட்டு வைக்காவிட்டால் தீய சக்தி உடம்புக்குள் புகுந்து விடுமா? உண்மை என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நெற்றியில் பொட்டு வைக்காவிட்டால் தீய சக்தி உடம்புக்குள் புகுந்து விடும் என்று ஒருவர் சொன்னதை கேட்டு அதெல்லாம் கப்ஸா என்று ஒருவர் தனது எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பொட்டு ஏன் வைக்க வேண்டும் என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளனர்?இன்றைய தலைமுறையினர் பொட்டு வைப்பதை ஏன் விரும்புவதில்லை என்று பார்க்கலாம்.

பொட்டு வைத்த முகமோ.. என்றும் குங்குமப்பொட்டின் மங்கலம் என்றும் பல பாடல்கள் பொட்டு வைப்பதன் அவசியத்தை கூறி எழுதப்பட்டுள்ளன. 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை நெற்றியில் பெரிய பொட்டும் வகிட்டில் குங்குமமும் நமது பாட்டிகள் வைத்திருப்பார்கள். அம்மாவும் அதையே பின்பற்ற, நமது காலத்தில் குங்குமப்பொட்டு வைப்பது மறைந்து ஸ்டிக்கர் பொட்டு கலாச்சாரமாகி விட்டது. 2000 ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த குழந்தைகள் பொட்டு வைக்க மறந்து வருகிறார்கள். ஒரு குழந்தை பொட்டு வைக்காமல் கடைக்கு வந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் விவாதப்பொருளாகியுள்ளது. அவரது பதிவை நாம் அப்படியே கொடுத்துள்ளோம்.

If women dont put a Pottu on their forehead, will the evil energy enter the body? What is the truth?

கடந்த ஞாயிறுக் கிழமை எப்போதும் செல்லும் சலூன் கடையில் அமர்ந்திருந்தேன். என்னருகே இன்னொருவரும் முடிவெட்ட அமர்ந்திருந்தார். அவரை பார்த்த மாத்திரத்துலயே கண்டுகொண்டேன் "சங்கி" என்று. சற்று நேரத்தில் சலூன் கடைக்காரரின் மகள், 12,13 வயது இருக்கும், உள்ளே நுழைந்தவுடன், என்னருகே அமர்ந்திருந்த அவர், அந்த பெண்ணைப் பார்த்து, "ஏன்டீ பொட்டு வைக்காம வந்திருக்க .. இதெல்லாம் தப்பு" என்றார்.

உடனே அந்த பெண் கேஷுவலாக, "சும்மா அங்கிள்" என்றவுடன், அந்த அவர், "பொட்டு வைக்கலனா தீய சக்தி உடம்புக்குள்ள போயிடும்.. பொட்டு வைக்காம இருக்க கூடாது", என்று பயமுறுத்தினார். எனக்கு அந்த பெண்ணை "டீ" என்ற உடனே கோவம் வந்தது.. ஆனால் அந்த கடைக்காரரும் வந்த அவரும் ஒருவேளை நல்ல நட்பாய் இருப்பார்கள் என்று அமைதியாய் இருந்தேன்.. அனால் தீய சக்தி என்றவுடன் கடும் கோவம் வந்தது.

அவரை பார்த்து,"இந்த உலகத்தில் பொட்டு வைப்பவர்கள் அதிகமா இல்லை பொட்டு வைக்காதவர்கள் அதிகமா?" என்று பொறுமையுடன் கேட்டேன். அவர், "பொட்டு வைத்தவர்கள் தான்" என்று வாய் கூசாமல் பொய் சொன்னார்..

நான், "சார், நான் இந்தியாவில் மட்டுமில்லை.. இந்த உலகத்தில் என்று கேட்டேன்.. அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, இன்னும் இருக்கும் கிருத்துவர் அதிகம் இருக்கும் நாடுகளிலும் இஸ்லாமியர்கள் இருக்கும் நாடுகளிலும் பெண்கள் பொட்டு வைத்துக் கொள்வதில்லை.. ஏறக்குறைய உலகத்தில் 70 - 80 சதவீத பெண்கள் பொட்டு வைத்துக் கொள்வதில்லை.. அவர்களை எல்லாம் நெருங்காத தீய சக்தி, இந்தியாவில் மட்டும் பொட்டு வைக்காமல் போனால் நெருங்குமா?? தீயசக்தி நெருங்கும் என்றால் உங்க நம்பிக்கைப்படி ஏறத்தாழ 80 சதவீத பெண்களுக்கு பேய் பிடித்திருக்கும். இதெல்லாம் கப்ஸா" என்றேன்

உடனே அவர்,"இதெல்லாம் கலாச்சாரம் என்றார்".. நான் உடனே, "அழகுக்கு என்று சொன்னால் கூட OK, ஆனால் கலாச்சாரம் கலாச்சாரம் என்று சொல்கிறீர்களே அது எங்கு எழுதி வைக்கப்பட்டிருக்கிறது?" என்று அவரை நோண்டினேன். உடனே அவர்,"உங்களுக்கு மனுதர்மம் தெரியுமா? அதிலே தான் எழுதி வைத்திருக்கிறது" என்றார்.

."அதில் இது எழுதி வைக்கப்பட்டிருக்கிறதா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் மனு தர்மத்தை எழுதியவர்கள் யாரென்று தெரியும். 'பார்ப்பான், சூத்திரன்' என்று சாதிய பாகுபாடு எழுதியவர்களிடம் என்ன நேர்மை இருக்கும்?" என்றேன். உடனே அவர், "அதை யாரும் மனிதர்கள் எழுதவில்லை, கடவுளே எழுதி இருக்கிறார்" என்றார்.

நான் சிரித்துக் கொண்டே, "அவர் எழுதினார் என்பதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கா?" என்றேன். உடனே அவர் முகம் டென்ஷனாகி, "நீங்க உங்க அப்பா அம்மாவிற்கு தான் பிறந்தீர்கள் என்பதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கா?" என்று என்னை மடக்குவதாய் நினைத்து கேள்வி கேட்டார்.

எனக்கு கோவம் சுர்ரென்று வந்து அவரிடம், "இவர் தான் என் அப்பா அம்மா என்று ஆதாரம் காட்டமுடியும். DNA Test என்று கேள்வி பட்டு இருக்கீங்களா?.. அதை செய்தால் யார் அப்பா அம்மா என்று சொல்லிவிடும்.. பல காலம் முன்பே செத்த ஒருவரின் எழும்பு துண்டை வைத்தே, அவர் யாரின் அப்பா அம்மா என்றும் சொல்ல முடியும். அறிவியல் பூர்வமாக கருத்தியலா பேசினா, பெர்சனலாக பேசும் உன்னை போன்ற இழி பிறவிகள் தான் இந்த நாட்டை கெடுக்கிறார்கள்" என்று கடுமையாக சொன்னேன்.

மேலும், "அந்த பெண் சிறிய பெண். என்றாவது ஒருநாள் அவள் பொட்டு வைக்காத போது அருகில் எதேச்சையாக ஏதாவது ஒரு ஒலி வந்தால் கூட அந்த பெண், பேய் என்று பயம் கொள்ளும்.. அனைத்திற்கும் பயப்படும். இது தேவையில்லாத வேலை. முடிஞ்சா அந்த பெண்ணை நல்லா படிக்க சொல்லி அட்வைஸ் சொல்லுங்க.. இப்படி பிக்காளி தனமா சொல்லி பயமுறுத்தாதீங்க" என்றேன்

அதற்கு மேல் அந்த ஆளால் அங்கு இருக்க முடியவில்லை. "உங்களிடம் எல்லாம் பேச முடியாது" என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். நடந்த இந்த உரையாடல்களை அந்த பெண் கேட்டுக் கொண்டிருந்தார். அவ்வப்போது என்னைப் பார்த்து புண் முறுவல். அவர்க்கு நான் பேசுவது புரிகிறது என்று உணர்ந்தேன்.

கடைசியாக அந்த குழந்தையை பார்த்து, "கண்ணம்மா, அவர் சொல்வதெல்லாம் சும்மா லுல்லுலாயி.. அதெல்லாம் பயப்படாத.. உனக்கு பிடிச்சா பொட்டு வை.. பிடிக்கலைன்னா விட்டுடு.. தீயசக்தி என்று எல்லாம் ஒண்ணுமில்லை" என்றேன்

அதற்கு அவர், "அங்கிள், நீங்க பேசினதை கேட்டேன்.. பயம் போயிடிச்சு. இனி எனக்கு பிடிக்கும் போது பொட்டு வைப்பேன்.. பிடிக்காத போது வைக்க மாட்டேன்" என்றார் மிகுந்த சிரிப்புடன் , நம்பிக்கையுடன்! அச்சம் உடைப்போம்! என்று பதிவிட்டுள்ளார். இது சமூக வலைத்தளங்களில் விவாத பொருளாகியுள்ளது.

நெற்றியில் குங்குமம் அணிவதால் முகம், உடல் மற்றும் மனம் ஆகியவைகளுக்கு அதிக நன்மைகள் உண்டாகும். பெண்கள் எப்பொழுதும் மூன்று இடங்களில் குங்குமம் வைத்துக் கொள்ள வேண்டும். மாங்கல்யம், நெற்றி, முன் வகிடு மத்தி. இது பெண்களுக்கு தெய்வீகப் பண்புகளைப் பெற்றுத் தரும்.

இன்றைய காலத்தில் இளம் பெண்கள் பொட்டு வைக்காவிட்டாலும் திருமணமான பெண்கள் நெற்றி நடுவிலும் வகிட்டின் தொடக்கத்திலும் குங்குமம் அணிவது சிறப்பு.பெண்கள் தங்களது முன் வகிட்டில் குங்குமம் வைப்பதன் மூலம் முகத்தின் அழகு கூடுவதோடு சுபிட்சம் ஏற்படுவதாகவும், அவர்களது கர்ப்பப்பை சம்பந்தமான இயக்கங்கள் சரியாக அமைவதாகவும் முன்னோர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

நெற்றியின் மையப் பகுதியில் நமக்கு காந்தசக்தி அதிகமாக உள்ளது. குங்குமம் வைப்பதன் மூலமாக மற்றவர்கள் நம்மை வசியப்படுத்துவதிலிருந்து தப்பிக்க முடியும். கட்டைவிரலால் குங்குமம் இட்டுக் கொள்வது மிகுந்த துணிவைக் கொடுக்கும். நெற்றியில் குங்குமத் திலகம் வைப்பதன் மூலமாக நமது அறிவாற்றலை அதிகப்படுத்த முடியும். எனவேதான் பண்டைய காலத்தில் போருக்கு புறப்படும் மன்னர்களுக்கு நெற்றியில் பொட்டு வைத்தவர்கள் கட்டை விரலால் பொட்டு வைத்து அனுப்பினர்.

குருவிரல் எனப்படும் ஆள்காட்டி விரல் குங்குமம் அணிவது முன்னணித்தன்மை, நிர்வாகம், ஆளுமை போன்றவற்றை ஊக்குவிக்கும். எனவேதான், வீட்டில் இருக்கும் மூத்த மருமகள் அல்லது மூத்தமகள் இதுபோன்று குங்குமத்தை நெற்றியில் வைப்பார்கள். சனிவிரல் எனப்படும் நடுவிரலில் குங்குமம் தொட்டு வைத்துக் கொள்வது தீர்காயுளைக் கொடுக்கும். குங்குமம் அணிவது தெய்வீக தன்மை, உடல் குளிர்ச்சி மற்றும் சுயக் கட்டுபாட்டிற்கு நல்லது.

மோதிர விரலின் அடி முதல் நுனி வரை இந்த பிரபஞ்சமே அடங்கியுள்ளது. பிரபஞ்சத்தின் அடையாளமாக திகழக்கூடிய மோதிர விரலால் நெற்றியில் குங்குமத்தை இடுவது மற்ற விரல்களை காட்டிலும் சிறந்தது. கோவிலில் குங்குமத்தைப் பெறுகையில் வலதுக்கையில் வாங்கி இடதுகைக்கு மாற்றக்கூடாது. வலது உள்ளங்கையில் குங்குமத்தைப் பெற்று அந்நிலையிலேயே வலது மோதிர விரலை வளைத்து, குங்குமத்தைத் தொட்டு நெற்றிக்கு வைத்துக்கொள்வது நல்லது.

குங்குமப் பொட்டு வைத்தாலே உடலுக்கு நல்லது. தாலியை நூலாகிய சரடில் கோர்த்து அணிவது தான் சிறப்பு. அத்துடன் தேவையான சங்கிலி முதலியவற்றை அணியலாம். நூலாகிய தாலி சரட்டில் பஞ்சபூத சக்திகள் அதிகம். எனவேதால் தாலி சரடில் குளிக்கும் போது மஞ்சள் பூசி குளிப்பதோடு மாங்கல்யத்தில் பொட்டு வைப்பதும் நன்மையைக் கொடுக்கும். எல்லாமே நம்பிக்கையின் அடிப்படையில் சொல்லப்படுவதுதான். நம்பிக்கை உள்ளவர்கள் பொட்டு வைக்கலாம். நம்பிக்கை இல்லாதவர்கள் பொட்டு வைக்காமல் தவிர்த்து விடலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+