கொழுக்கட்டைன்னா விநாயகருக்கு ஏன் பிடிக்கும்? விநாயகர் சதுர்த்தியில் மோதகம் நைவேத்தியம் ஸ்பெஷல் என்ன?
சென்னை: விநாயகர் சதுர்த்தி பண்டிகை என்றாலே கொழுக்கட்டைதான் நினைவுக்கு வரும்.. கொழுக்கட்டை, லட்டு, அப்பம், அவல், பொரி, கடலை, சுண்டல் என விதவிதமான நைவேத்தியங்கள் வைக்கப்படும்.. எனினும் மோதகம் நைவேத்தியத்துக்குதான் முதலிடம் கிடைக்கும். நைவேத்தியங்களிலேயே பல விதம் படைக்கப்பட்டாலும், கட்டாயம் இடம்பெற வேண்டியது மோதகம்தான்.. இந்த மோதகம் எப்படி செய்ய வேண்டும்? இந்த மோகதம் நைவேத்தியத்தை பிள்ளையாருக்கு படைக்க வேண்டிய அவசியம் என்ன? இதுகுறித்து புராணங்களில் சொல்லப்பட்டுள்ள காரணம் என்ன? இவைகளை பற்றி சுருக்கமாக பார்ப்போம்.
வீட்டில் ஸ்தாபனம் செய்யப்படும் விநாயகர் சிலையிலும் கையில் மோதகம் இல்லாமல் இருக்க கூடாது என்பார்கள்.

மோதகம் என்பது தேங்காய், வெல்லப்பாகு, அரிசி மாவு ஆகியவற்றை சேர்த்து செய்யப்படும் பதார்த்தமாகும்.. இதனை நைவேத்தியமாக பிள்ளையாருக்கு படைப்பார்கள்..
எப்படி செய்ய வேண்டும்?
அரிசி மற்றும் பாசிப்பருப்பை கழுவி தனித்தனியாக உலர வைத்து கொள்ள வேண்டும். ஒரு வாணலில் பச்சரியையும், பாசிப்பருப்பையும் தனித்தனியாக லேசாக வறுத்து கொள்ள வேண்டும். பிறகு இரண்டையும் மிக்சியில் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
இப்போது அரிசி, பருப்பு எவ்வளவு உள்ளதோ அதற்கேற்றவாறு வெல்லம் எடுத்து, ஒரு பாத்திரத்தில் போட்டு, நீர் விட்டு கரைத்து வடிக்கட்டி வைத்து கொள்ள வேண்டும். பிறகு ஒரு அடி கனமுள்ள வாணலை வைத்து 4 கப் தண்ணீர் ஊற்றி, நெய், ஏலக்காய் தூளை சேர்த்து கலக்க வேண்டும். தண்ணீர் கொதி வருவதற்கு முன்பேயே அரைத்து வைத்துள்ள அரிசி, பாசிப்பருப்பு பவுடரை கொட்டி, கட்டிப்படாமல் கிளற வேண்டும்..
இனிப்பு மோதகம் ரெடி
பாதி வெந்ததுமே, துருவிய தேங்காய் மற்றும் வடிகட்டி வைத்துள்ள வெல்லப்பாகு சேர்க்க வேண்டும்.. இதனை இன்னொரு பாத்திரத்தில் மாற்றி சூடு குறைந்ததும், கையில் நெய் தடவி விட்டு உருண்டையாக பிடிக்க வேண்டும்.. இதனை ஒரு இட்லி தட்டில் 10 நிமிடங்களுக்கு வேகவைத்து எடுத்தால் மோதகம் ரெடியாகிவிடும்.
இந்த மோதகம் நைவேத்தியம் பிள்ளையாருக்கு பிடித்தமான ஒன்றாகும். இதற்கு ஒரு காரணமும் சொல்லப்படுகிறது.
மகிழ்ச்சியடைந்த பிள்ளையார்
மோதகம் என்றால் மோதக் + அகம் ஆகும். மோதக் என்றால் உற்சாகம், மகிழ்ச்சி என்று பொருள். அகம் என்ற சொல்லுக்கு 'வழங்கக் கூடியது' என்று பொருள். மகிழ்ச்சியையும், ஆனந்தத்தையும் வழங்கக் கூடிய பொருள் என்பதால் மோதகத்தை விநாயகருக்கு படைத்து வழிபடுவது சிறப்பானதாகும். இந்த நைவேத்யத்தின் சிறப்பு குறித்து புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒருமுறை அத்ரி ரிஷியின் மனைவியான அனுசுயா, சிவன், பார்வதி, விநாயகர் ஆகியோரை விருந்திற்காக அழைத்திருந்தார். எந்த உணவை கொடுத்தாலும் விநாயகரின் பசியை போக்க முடியாது என்பதை புரிந்து கொண்ட அனுசுயா, இனிப்பு கலந்த மோதகத்தை சாப்பிட தந்துள்ளார்.. 21 மோதகங்களை விநாயகருக்கு தந்ததுமே, அதை சாப்பிட்டதும் பிள்ளையாருக்கு பசி, மகிழ்ச்சியும் அடைந்தார்.
இதை பார்த்த பார்வதி தேவி, அனுசுயாவை போல், எவர் ஒருவர் விநாயகருக்கு மோதகம் படைத்து வழிபடுகிறார்களோ அவர்களின் விருப்பங்கள் அனைத்தையும் விநாயகப்பெருமான் நிறைவேற்றி வைப்பார் என்று வரம் அளித்தார்.
பார்வதி தேவி அளித்த வரத்தின்படி, பக்தர்கள் விநாயகரிடம் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறுவதற்காக மோதகத்தை நைவேத்தியமாக படைக்கிறார்கள்.
மோதகத்தின் தத்துவம்
அந்தவகையில், விநாயகருக்கு முதன்முதலில் மோதகம் படைத்து, அவரது அருளை பெற்றவர் அருந்ததி தேவி ஆவார்.. கற்புக்கு இலக்கணமாய் திகழும் வசிஷ்டரின் மனைவியான அருந்ததி அருந்ததி, வானில் விண்மீனாய் வலம் வருபவர்.
ஒருமுறை வசிஷ்டரின் ஆசிரமத்துக்கு வந்திருந்த விநாயகருக்கு புதிய நைவேத்தியம் செய்ய விரும்பினார் அருந்ததி. அப்போதுதான் மோதகத்தை தயார் செய்தார்.
அதாவது பர பிரம்மன் இந்த அண்டமெங்கும் வியாபித்திருப்பதால், அண்டத்தை உணர்த்தும் விதமாக வெள்ளை மாவினால் "செப்பு" என்ற மேல் பகுதியை செய்தார். அண்டத்தின் உள்ளே பூரணமாக நிறைந்திருக்கும் விநாயகரை உணர்த்தும் விதமாக, அமிர்தமயமான பூரணத்தை மாவில் வைத்து மோதகம் தயார் செய்து, வசிஷ்டரிடம் தந்து, விநாயகருக்கு படைக்க செய்தார்..
திருக்கரங்களில் மோதகம்
மோதகத்தின் தத்துவ சிறப்பை உணர்ந்த விநாயகரும், அதனை உலகுக்கு உணர்த்தும் விதமாக, மோதகத்தை எப்போதும் தன் திருக்கரங்களில் ஏந்திக்கொண்டிருக்கிறார்.
ஆன்மா என்ற இனிப்பான பூரணத்தைப் பொதித்து, இந்த உடலையே ஆண்டவருக்காக அர்ப்பணிக்கிறோம்' என்பதே கொழுக்கட்டையின் தத்துவம். வாழும் காலம் வரை, தன்னை அப்படியே ஒப்படைக்க முடியாது என்பதால், கொழுக்கட்டையின் வாயிலாக செய்கிறோம்












Click it and Unblock the Notifications