அம்மையே அமர்க! காரைக்கால் அம்மையாரை அழைத்த சிவபெருமான்! மாங்கனி திருவிழா கோலாகலம்
காரைக்கால்: காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனி திருவிழா கோலாகலமாக நிகழ்ந்தது. இந்த விழாவில் மாங்கனிகளை வீசி பக்தர்கள் வழிபாடு நடத்தினர். அது போல் குலசேகரன்பட்டினத்திலும் மாங்கனி திருவிழா கோலாகலமாக நடந்து முடிந்தது.
63 நாயன்மார்களில் சிவப்பெருமானால் அம்மையே என அழைக்கப்பட்டவர் காரைக்கால் அம்மையார். 63 பேரில் பெண் நாயன்மாரும் இவர் ஒருவரே. இவரது வாழ்க்கை வரலாற்றை நினைவுக் கூரும் வகையில் காரைக்கால் அம்மையார் கோயிலில் ஆண்டுதோறும் மாங்கனித் திருவிழா மிக விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

அதன்படி கடந்த 19ஆம் தேதி மாலை மாப்பிள்ளை அழைப்புடன் இந்த ஆண்டுக்கான மாங்கனி திருவிழா தொடங்கியது. விழாவின் 2ஆம் நாள் நிகழ்ச்சியாக நேற்று முன் தினம் காரைக்கால் அம்மையார் கோயில் மண்டபத்தில் புனிதவதியாருக்கும் பரமதத்த செட்டியாருக்கும் திருக்கல்யாணம் விமரிசையாக நடந்தது.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 3ஆம் நாளான நேற்று பிச்சாண்டவர் ஊர்வலம் மற்றும் மாங்கனி இறைப்பு நடந்தது. இதை முன்னிட்டு காரைக்கால அம்மையார் கோயிலில் அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை பிச்சாண்டவர் மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து பவளக்கால் சப்பரத்தில் காவி உடை, ருத்ராட்சம் அணிந்து பிச்சாண்டவர் மூர்த்தியாக சிவபெருமான் தேரில் எழுந்தருளினார். இதையடுத்து வேதபாராயணத்துடன் வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். பிச்சாண்டவர் செல்லும் வீதியெங்கும் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றும் விதமாக வீட்டு வாசல்கள், மாடிகளில் இருந்தபடியே மாங்கனிகளை இறைத்தனர்.
இந்த மாங்கனிகளை உண்டால் குழந்தை பாக்கியம் ஏற்படும். திருமண தடை நீங்கும் என்பது ஐதீகம். அதனால் விழாவில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் போட்டி போட்டுக் கொண்டு மாம்பழங்களை பிடித்தனர். வீதியுலா வந்த பிச்சாண்டவருக்கு மாங்கனி, பட்டு வஸ்திரங்களை படைத்தும் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து காரைக்கால் பெருமாள் வீதி, பாரதியார் வீதி, கென்னடியார் வீதி, மாதா கோவில் வீதி வழியாக சென்று மீண்டும் கோயிலை பவளக்கால் சப்பரம் வந்தடைந்தது.
அம்மையார் இறைவனோடு ஐக்கியமாகும் நிகழ்ச்சியின் போது கோயில் மற்றும் கோயிலில் உள்ள வீதிகளில் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டு, அம்மையார் ஜோதி வடிவமாக இறைவனோடு ஐக்கியமானதை விளக்கும் வகையில் காரைக்கால் அம்மையார், பேயுருவில் கைலாயம் சென்ற வைபவம் நடைபெறும். அப்போது சிவன், கோயிலுக்கு வெளியில் ஓரிடத்தில் இருந்தார். அப்போது இரட்டை மணிமாலை, திருவந்தாதி பாடப்படும். பின்னர் ஊரிலுள்ள அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டு, சிவனுக்கு அருகில் ஒரு தீப்பந்தமும், காரைக்காலம்மையார் கோயிலில் ஒரு தீப்பந்தமும் ஏற்றப்படும். அம்மையார் கோயில் தீப்பந்தத்தை, சிவனருகே உள்ள தீப்பந்தத்தில் கொண்டு சென்று சேர்ப்பர். அம்மையார், ஜோதி வடிவில் இறைவனை ஐக்கியமாவதாக இதனை சொல்கிறார்கள்.
பேய் பயம் கொண்டவர்கள் பங்குனி மாத சுவாதி நட்சத்திரத்தில் குருபூஜை காணும் பேய்வுறு கொண்ட காரைக்காலம்மையை திருவள்ளூர் அருகிலுள்ள திருவாலங்காட்டில் வணங்கி ஆடலரசனையும் வணங்கி அங்குள்ள மந்தனின் புதல்வன் மாந்தியையும் வணங்க பேய் பயமெல்லாம் நீங்கும் என்பது ஐதீகம். இதே போல காரைக்கால் அம்மையார் பேயுருவம் எடுத்த குலசேகரப்பட்டினத்திலும் மாங்கனி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.












Click it and Unblock the Notifications