கொடியேற்றுத்துடன் கோலாகலமாக தொடங்கியது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா!
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் அண்ணாமலையார் சன்னதி அருகே அமைந்துள்ள 64 அடி உயரம் கொண்ட தங்க கொடிமரத்தில் கொடியேற்றுத்துடன் கோலாகலமாக தொடங்கியது கார்த்திகை தீபத் திருவிழா. டிசம்பர் 13 ஆம் தேதி திருக்கார்த்திகை அன்று மகா தீபம் ஏற்றப்படும்.
கார்த்திகை மாதம் என்றாலே அனைவருக்கும் திருவண்ணாமலை தான் நினைவுக்கு வரும். இந்த வருடம் கார்த்திகை மாதம் 28ஆம் தேதி டிசம்பர் 13 2024 அன்று வெள்ளிக்கிழமை திருக்கார்த்திகை கொண்டாடப்படுகிறது. குறிப்பாக திருவண்ணாமலையில் அமைந்துள்ள அண்ணாமலையார் கோவிலில் வெகு விமரிசையாக திருக்கார்த்திகை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.

அந்தவகையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் டிசம்பர் 1ஆம் தேதி கார்த்திகை 16 ஆம் நாள் துர்க்கை அம்மன் உற்சவம் நடைபெற்றது. டிசம்பர் 4ஆம் தேதியான இன்று, அதிகாலை அருணாச்சலேஸ்வரர் சன்னதியில் உள்ள தங்க கொடிமரத்தில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனைத் தொடர்ந்து பத்து நாட்களுக்கு காலை மற்றும் இரவு பஞ்ச மூர்த்திகள் மாட வீதி விழா நடைபெறும்.
வரும் டிசம்பர் 8 ஆம் தேதி வெள்ளி ரிஷப வாகனமும், டிசம்பர் 9 ஆம் தேதி வெள்ளித்தேர் பவனி வைபவமும், டிசம்பர் 10 ஆம் தேதி மரத்தேரும் நடைபெற உள்ளது. 11 ஆம் தேதி இரவு பஞ்ச மூர்த்திகள் குதிரை வாகனத்தில் வலம் வருவார்கள். டிசம்பர் 12 ஆம் தேதி இரவு பஞ்ச மூர்த்திகள் - கைலாச வாகனம் காமதேனு வாகனத்தில் பவனி வருவார்கள்.
டிசம்பர் 13 ஆம் தேதி காலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோவிலின் கருவறை முன்பு பரணி தீபம் ஏற்றப்படும். அன்றைய தினம் மாலை ஆறு மணிக்கு திருவண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.












Click it and Unblock the Notifications