Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாசிஅமாவாசை: மேல்மலையனூர் அங்காளஅம்மன் கோவிலில் மயானக்கொள்ளை..லட்சக்கணக்கானோர் பங்கேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் மகா சிவராத்திரி உற்சவத்தின் முக்கிய அம்சமாக மயானக்கொள்ளை நாளை நடைபெறுகிறது.

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: மாசி அமாவாசை நாளில் அங்காளம்மன் கோவிலில் நடக்கும் மயானக் கொள்ளை நிகழ்ச்சி மிகவும் புகழ்பெற்றது. இதனைக் காண தமிழகத்தின் முக்கிய ஊர்களைச் சேர்ந்த பக்தர்கள் மேல்மலையனூரில் குவிந்துள்ளனர். பிரம்மாவின் சாபத்தால் பிரம்மஹத்தி தோஷம் பெற்ற சிவபெருமான் மேல்மலையனூருக்கு வந்து சாபவிமோசனம் பெற்றதை நினைவுகூறும் வகையில் இந்த மயானக்கொள்ளை திருவிழா நடத்தப்படுகிறது.

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் வீற்றிருக்கும் அம்மன், புற்று மண்ணால் சுயம்புவாக உருவானவள் என்கிறது தல வரலாறு. நான்கு திருக்கரங்களுடன் இடதுகாலை மடித்து, வலதுகாலைத் தொங்கவிட்டபடி பிரம்ம கபாலத்தை மிதித்தவாறு வடக்கு திசை நோக்கி அருட்காட்சி புரிகிறார் அம்மன். புற்று வடிவில் தோன்றிய இந்த அம்மனுக்கு புற்று தேவி என்றும் பெயருண்டு.

Mahashivarathri 2023: Masi Amavasai Mayanakkollai festival at angalamman temple Melmalayanoor

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் மாசி பெருவிழாகொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதை முன்னிட்டு நேற்று காலையில் மூலவர் அங்காள அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் சிறப்பு தீபாராதனையும் நடந்தது. மாலை 6 மணிக்கு சிறப்பு பூஜைகள் சிறப்பு தீபாராதனை நடந்தது. 9 மணிக்கு கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து கொடியேற்றம் நடைபெற்றது.

விழா இன்று காலை 11 மணிக்கு மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது. இதை முன்னிட்டு காலை மூலவர் அங்காள அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் சிறப்பு ஆராதனையும் நடந்தது. தொடர்ந்து மூலவர் அம்மனுக்கு தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. இதை அடுத்து உற்சவர் அங்காளம்மனுக்கு பலவித மலர்களைக் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. காலை 11.00 மணிக்கு அங்காளம்மன் மயானத்தை வந்தடைந்தார். மயானத்தில் பக்தர்கள் கொழுக்கட்டை சுண்டல் உள்பட பலவித தானிய வகைகளைக் கொண்டு வந்து படையலிட்டனர்.

மயானக் கொள்ளை தினத்தன்று அங்காளி கோப வடிவினளாக அலங்கரிக்கப்பட்டு கையில் முறம் ஒன்றில் அவல், பொரி, கடலையுடன், ஆட்டு நுரையீரல் ஒன்றும் அங்காளம்மன் வாயில் வைத்தபடி ஊர்வலமாக அழைத்து வரப்படுவார். இந்த அங்காளம்மனைச் சூழ்ந்து பூத கணங்களாக கருப்பு சேலை அணிந்த பூதங்கள் போல வேடம் தரித்து கூத்தாடியபடி ஊர்வலத்தில் கலந்து வருவர். அப்போது அங்காளம்மனுக்கும், அவரது பேய் பூத கணங்களுக்கும் பக்தர்கள் காணிக்கை செலுத்தி விழுந்து வணங்குவார்கள்.

மயானக்கொள்ளை நாளில் அங்காள அம்மனை நினைத்து வேண்டிக்கொள்ளும் பக்தர்கள் தங்களின் பிரார்த்தனைகள் நிறைவேறினால் பழங்கள், காய்கள், மஞ்சள், கொழுக்கட்டை, கீரை, பிஸ்கட், சாக்லெட், வளையல் எனப் பல பொருள்களைக் கொண்டு வரும் பக்தர்கள், அதை மக்கள் கூட்டத்துக்கு நடுவே வீசி இறைப்பார்கள். இப்படி இறைக்கப்படும் பொருட்களை பக்தர்களும், விவசாயிகளும் போட்டி போட்டுக் கொண்டு எடுப்பார்கள். இந்தப் பயிரை எடுக்கும் விவசாயிகள் தங்கள் நிலத்தில் பயிர் செய்யும்போது இந்தப் பயிரையும் சேர்த்து விதைப்பார்கள். அப்போது வழக்கத்தை விட அதிக அளவில் மகசூல் கிடைக்கிறதாம்.

மேல்மலையனூரில் மட்டுமல்லாது அங்காளம்மன் குடிகொண்டுள்ள அனைத்து ஆலயங்களிலும் மயானக்கொள்ளை நடைபெறுகிறது. தட்சனின் யாகத்தில் விழுந்த தாட்சாயினி ஆக்ரோஷ ரூபம் கொண்டு எழுந்த வடிவமே அங்காளம்மன் என்றும், அவளை அடக்கி ஆண்டுக்கொருமுறை மட்டும் விடுவித்து மயானத்தை சூறையாட சிவன் அனுமதித்தார் என்றும் ஒரு கதை சொல்லப்படுகிறது.

ஐந்து தலைகளுடன் விளங்கிய பிரம்மன், திலோத்தமை என்ற தேவ மங்கையின் அழகில் மயங்கி அவளைத் துரத்தினான். திலோத்தமை கயிலாயத்தில் அடைக்கலம் புகுந்தாள். பார்வதியின் வேண்டுகோளுக்கிணங்க, பிரம்மனின் ஆணவத்தை அழிக்க, விஷ்ணுவின் ஆலோசனைப்படி, பிரம்மனது ஒரு தலையை சிவபெருமான் வெட்டி எறிந்தார். ஆனால், அது மீண்டும் மீண்டும் முளைக்கவே, அதனைத் தன் கையிலேயே தாங்கிக் கொண்டார். இதனால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. சிவனின் உருவமே பொலிவிழந்தது.

பிரம்மனின் மனைவியான சரஸ்வதி சாபமிடவே, சிவபெருமான் பிச்சை எடுக்கும் கோலத்தையும், அன்னை பார்வதி அலங்கோல வடிவத்தையும் பெற்றனர். இதையடுத்து விஷ்ணு, தன் தங்கை பார்வதியிடம், 'கலங்காதே! நீ மலையரசன் பட்டினத்தில் பூங்காவனத்துப் புற்றில் பாம்பு வடிவில் இருக்கும்பொழுது உனக்கு சாப விமோசனம் கிடைக்கும்' என வழிகாட்டினார். அங்காளபரமேஸ்வரியாக அகோர உருவம் கொண்ட அன்னை பார்வதி நாடெல்லாம் அலைந்து திரிந்து திருவண்ணாமலை வந்து சேர்ந்தாள்.

Mahashivarathri 2023: Masi Amavasai Mayanakkollai festival at angalamman temple Melmalayanoor

அன்னை புற்று வடிவமெடுத்து, மேல்மலையனூர் அரண்மனையில் உள்ள பூங்காவனத்தில் ஐந்து தலை நாகமாக வாழ்ந்து வந்தாள். பூங்காவனத்தில் பெரிய புற்று இருப்பதைக் கண்டு, மலையரசன் அதனை இடிக்க ஆள் அனுப்பினான். அந்த ஆட்கள் அனைவரையும் அன்னை புற்றுக்குள் மறைந்தாள். மீண்டும் ஆள் அனுப்ப, அவர்களும் புற்றுக்குள் மறைந்தனர். இதைக் கண்டு அஞ்சிய மலையரசன், தன் தவறை உணர்ந்து புற்றை வணங்கி, நின்றபோது அன்னை காட்சி கொடுத்தாள்.

அச்சமயம் மலையனூர் வந்த சிவனின் குரல் கேட்ட பார்வதி, விஷ்ணுவை மனதில் நினைத்து தியானம் செய்தாள். விஷ்ணுவின் ஆலோசனைப்படி, விநாயகப்பெருமானைக் காவல் நிற்கச் செய்து, அன்னபூரணி மூலம் சுவையான உணவைச் சமைத்து, அதை மூன்று கவளமாக்கினாள். இரண்டு கவளங்களைச் சிவனின் கையில் இருந்த கபாலத்திற்கு ஊட்ட, அதன் சுவையில் மயங்கிய கபாலம் ஆசை தீர உண்டது. மூன்றாவது கவளத்தை வேண்டுமென்றே கீழே தவற விட, சுவையில் மயங்கிய கபாலம் தரையிறங்கியது.

இதற்காகவே காத்துக் கொண்டிருந்த அன்னை அங்காள பரமேஸ்வரி, கபாலத்தைத் தன் காலால் நசுக்கித் தரையில் அழுத்தினாள். உடனே சிவபெருமானின் பிரம்மஹத்தி தோஷம் நீங்கி சுயநிலையை அடைந்தார். இந்த ஐதீகத்தை நினைவுபடுத்தும் வகையிலேயே மாசி மாதம் சிவராத்திரிக்கு மறுநாள் அனைத்து ஊர் மயானங்களிலும் மயானக்கொள்ளை உற்சவம் நடத்தப்படுகிறது.

ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி பிரம்மனின் தலையை தன் காலால் மதித்து சிவனை பிரம்மஹத்தி தோஷத்திலிருந்து விடுவிக்கின்றாள். இதனால் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி உக்கரம் அடைகிறாள். எனவே அம்மனை சாந்தி படுத்தவே அமாவாசை நள்ளிரவில் அம்மனை ஊஞ்சலில் அமரவைத்து தாலட்டு பாடல்கள் பாடி அம்மனை சாந்தி படுத்துகின்றனர். அன்றைக்கு அம்மனைக் காண வரும் பக்தர்களுக்கு அம்மன் அருள் பூர்ணமாக கிடைப்பதாக நம்பப்படுகிறது.

காசி அன்னபூரணி அங்காளியம்மனின் அம்சமே. மேல்மலையனூரில் உற்சவ தேவியும் அன்னபூரணியே. அங்கத்தில் கோர ரூபமாக இருப்பதால் அங்காள பரமேஸ்வரி எனப்பட்டாள் அன்னை. சிவனின் கரத்திலிருந்த கபாலத்தை அடித்து நொறுக்கி ஆவேச நடனமிட்ட இடம் மேல்மலையனூர் எனப்படுகிறது. தமிழகம் முழுவதும் மயானக்கொள்ளை விழா சிறப்பாக நடந்தாலும், மேல்மலையனூரில் மிகவும் சிறப்பான முறையில் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. கேரளாவிலும்கூட மயானக்கொள்ளை விழா கொண்டாடப்படுகிறது.

கோபத்திலிருந்த அங்காளம்மனை சாந்தப்படுத்தும் நிகழ்வாகவே தேர்திருவிழாவும், அமாவாசை தினங்களில் ஊஞ்சல் நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறதாம். அதன்படி, மாசிமாதம் அமாவாசை அன்று மேல்மலையனூர் மயானத்தில் நடைபெறும் மயானக்கொள்ளை திருவிழா பிரசித்தி பெற்றதாகப் பார்க்கப்படுகிறது. அங்காளபரமேஸ்வரி அம்மனின் மீதுள்ள பக்தியாலும், பிரசித்திபெற்ற இந்தத் திருவிழாவைக் கண்டுகளிப்பதற்காகவும், தங்களின் நேர்த்திக் கடனைச் செலுத்துவதற்காகவும் தமிழகம் மட்டுமன்றி பிற மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து அங்காளம்மனை வழிபட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+