திருப்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடல் 23: கோயிலுக்குள் செல்லும் போது எதை செய்யக் கூடாது தெரியுமா?
திருப்பாவை - பாடல் 23
மாரி மலைமுழஞ்சில் மன்னிக்கிடத்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கப் புறப்பட்டு
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா! உன்
கோயில் நின்று இங்ஙனே போந்தருளி கோப்புடைய
சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.

பாடல் பொருள்: மழைக் காலத்தில் மலையில் உள்ள குகையில் உறங்கும் பெருமை மிக்க சிங்கம் விழிக்கிறது. அதன் கண்களில் நெருப்பு பொறி பறக்கிறது. நாற்புறமும் நடமாடி பிடரி மயிரை சிலிர்த்து பெருமையுடன் நிமிர்ந்து கர்ஜனையுடன் வெளியே கிளம்புகிறது. அது போல் காயாம்பூ நிறத்தையுடைய கண்ணனே! நீயும் வீர நடை போட்டு உன் கோயிலில் இருந்து வெளியேறி இங்கே வந்து அருள் செய். வேலைப்பாடுகளைக் கொண்ட மிகச் சிறந்த சிம்மாசனத்தில் அமர்ந்து நாங்கள் எதற்காக இங்கே வந்தோம் என்பதை அறிந்து அந்த கோரிக்கைகளைப் பரிசீலனை செய்து நிறைவேற்றி அருள வேண்டும்.
விளக்கம்: பொன்னை கொடு, பொருளை கொடு, நகையை கொடு என கோரிக்கைகளை ஆண்டவன் முன்னால் நாம் வைக்கவே கூடாது. அவை நமக்கு அமைய வேண்டுமென்ற விதியிருந்தால் நம் உழைப்பை பொறுத்து அவை இறைவனால் நமக்குத் தரப்படும்.
திருப்பள்ளியெழுச்சி பாடல் - 3
கூவின பூங்குயில் கூவின கோழி
குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்
ஓவின தாரகைகளி ஒளி உதயத்து
ஒருப்படுகின்றது விருப்பொடு நமக்குத்
தேவ நற்செறி கழல் தாளிணை காட்டாய்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே!
யாவரும் அறிவரியாய் எமக்கெளியாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.
பாடல் பொருள்: பொழுது புலர்வதை உணர்த்த குயில் கூவுகிறது. கோழிகளும் கூவின. மற்ற பறவை இனங்களும் ஒலித்துவிட்டன. வெண்சங்குகளும் முழங்கின. நட்சத்திரங்களின் ஒளி நீங்கும்படி சூரியன் ஒளிவீசத் தொடங்குகிறான். பெரு வெளிச்சம் பெருகிப் பரவுகிறது. தர்மத்தின் தலைவனைச் சந்திக்க வந்திருக்கிறார்கள் பக்தர்கள். சிவனது கணுக்காலைக் குழந்தை போல் கட்டிக் கிடக்கிறது வீரக்கழல்கள். அத்திருவடிகளைக் காணுகின்ற புண்ணியத்தை எமக்குத் தருவாயா? பெண்ணியப் பெருந்தலைவா? யாவரும் அறிந்துகொள்ள முடியாதவனும், எமக்கு எளியவனுமாகிய பெருமானே! திருப்பெருந்துறையில் குடிகொண்டுள்ள சிவனே! தேவர்க்கு நற்கதியை அளிக்கும் உனது திருவடிகளை எமக்குக் காட்டும்படி நீ உறக்கத்தைவிட்டு நீங்கி எழுந்தருள்வாய்.
விளக்கம்: பேசிக் கொண்டே இறைவனை வணங்குதல் கூடாது. கோயிலுக்குள் உலக விஷயங்களை அலசவே கூடாது. இறைவனின் திருநாமத்தை மட்டுமே சொல்ல வேண்டும்.












Click it and Unblock the Notifications