திருப்பாவை, திருவெம்பாவை பாடல் 2: மார்கழி பாவை நோன்பில் இந்த 6 விஷயங்கள் செய்யவே கூடாது!
திருப்பாவை - பாடல் 2
வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத்துயின்ற பரமன் அடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.

பாடல் பொருள்: பாவை நோன்பு இருப்போருக்கு இரண்டாம் பாசுரத்தில் ஆண்டாள் சில கோட்பாடுகளை விதிக்கிறாள். நோன்பில் ஈடுபட்டவர்கள் செய்ய வேண்டிய 4 விஷயங்களையும் செய்யக் கூடாத 6 விஷயங்களையும் கூறியுள்ளாள்.
திருமால் கண்ணனாக பிறந்த ஆயர்பாடியில் வாழும் சிறுமிகளே! நாம் பரந்தாமனின் திருவடிகளை அடைய வேண்டும் என்றால் சில விரத வழிமுறைகளை கேளுங்கள். அதாவது நெய் உண்ணக் கூடாது, பால் குடிக்கவே கூடாது, அதிகாலையிலேயே குளித்து சுத்தமாக இருத்தல் வேண்டும். கண்களில் மையை வைக்கக் கூடாது.
அது போல் தலையில் பூக்களை சூடக் கூடாது (மார்கழி மாதம் பூக்கும் மலர்கள் எல்லாம் மாதவனுக்கே சொந்தம்). தீய செயல்களை மனதால் நினைத்துக் கூடாத பார்க்கக் கூடாது. தீய சொற்களை சொல்வது கூட பாவம் என்பதால் பிறர் குறித்து புறம் பேசுதல் கூடாது. இல்லாதவர்களுக்கு இயன்ற அளவுக்கு தர்மம் செய்ய வேண்டும்.
விளக்கம்: அதாவது எந்தவொரு செயலை செய்தாலும் அதற்கு கட்டுப்பாடும் ஒழுக்கமும் அவசியமாகும். வாயை கட்டினால் மனம் கட்டுப்படும்.
திருவெம்பாவை பாடல் - 2
பாசம் பரஞ்சோதிக்கென்பாய் இராப்பகல் நாம்
பேசும் போதெப்போது இப்போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி இவையுஞ் சிலவோ விளையாடி
ஏசும் இடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்
ஈசனார்க்கு அன்பர் யாம் ஆரேலோர் எம்பாவாய்.
பாடல் பொருள்: சிறந்த அணிகலன்களை அணிந்தவளே! ராத்திரி பகல் என பாராமல் எங்களுடன் அமர்ந்து பேசும் போது தீப வடிவிலான அண்ணாமலையார் மீது நான் கொண்ட அன்பு அளவிட முடியாதது என வீராவசனம் பேசினாய், ஆனால் இப்போது குளிப்பதற்கு அழைத்தால் வர மறுத்து அயர்ந்து உறங்குகிறாய் என தோழிகள் கலாட்டா செய்ய, அதற்கு தூங்கிக் கொண்டிருந்தவள் எழுந்து , ச்சீசி! இதென்ன பேச்சு , ஏதோ அசந்து விட்டேன், அதற்காக இப்படியாக கிண்டல் செய்வது? என கேட்கிறாள். அவருக்கு பதிலளித்த தோழியர்கள், அண்ணாமலையாரின் திருவடிகளை காண தேவர்கள் முயற்சிக்கிறார்கள். ஆனால் அவர்களாலேயே முடியவில்லை.
அப்படியிருக்கும் போது நமக்கோ நம் வீட்டு முன்பே சிவபெருமான் தரிசனம் தருகிறார். திருக்கயிலாய மலையிலிருந்து நம் வீடு தேடி வரும் ஈசன் மீது நாம் எத்தனை அன்பு வைக்க வேண்டும் என்பதை நீயே புரிந்து கொள் என தோழிகள் அறிவுரை வழங்கினர்.
விளக்கம்: தேவலோகத்தில் இருப்பவர்கள் சிவனை காண வேண்டுமானால் தவம் செய்து கடுமையாக போராட வேண்டியிருக்கிறது. ஆனால் நம் ஊரில் ஆண்டுதோறும் திருவிழா, தேர் பவனி என நடைபெறுகிறது. இத்தனை பக்கத்திலேயே இறைவன் இருந்தாலும் அவரை காண மறுப்பதா என்பதுதான் இந்த பாடலின் கருத்து ஆகும்.
இந்த நோன்பில் திருப்பாவை, திருவெம்பாவை பாடி மகிழுங்கள்.












Click it and Unblock the Notifications