மார்கழி திருவாதிரை.. சிதம்பரம் நடராஜர் கோவிலில் நாளை தேரோட்டம்.. வெள்ளிக்கிழமை ஆருத்ரா தரிசனம்
சிதம்பரம்: நடராஜர் ஆலயத்தில் நாளைய தினம் மார்கழி மாத திருவாதிரை தேரோட்டம் நடைபெற உள்ளது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தேரோட்டத்தை முன்னிட்டு பஞ்சமூர்த்திகள் தனி தனி தேர்களில் எழுந்தருளி அருள் புரிய உள்ளனர். வெள்ளிக்கிழமை காலை திருவாதிரை விழாவின் முக்கிய நிகழ்வாக கருதப்படும் ஆருத்ரா தரிசனம் மதியம் 2 மணியளவில் நடைபெற உள்ளது. அப்பொழுது நடராஜர் சிவகாமி சுந்தரி நடனம் ஆடிய படியே பக்தர்களுக்கு காட்சியளித்து அருள் புரிய உள்ளனர்.
சிதம்பரத்தில் நடராஜர் ஆனந்த நடனம் ஆடிய இடத்தை சிற்றம்பலம் என்பார்கள். இதை சிற்சபை, சித்சபை என்றும் அழைப்பதுண்டு. இத்தலத்து பெருமானுக்கு சபாநாயகர், கூத்த பெருமான், நடராஜர், விடங்கர், மேருவிடங்கர், தெட்சிணமேருவிடங்கர், பொன்னம்பலம், திருச் சிற்றம்பலம் என்றெல்லாம் சிறப்புப் பெயர்கள் உண்டு. சிதம்பர ரகசியம் என்று கூறப்படும் பகுதியில் தங்கத்தால் ஆன வில்வத்தள மாலை தொங்கும் காட்சியைப் தரிசனம் செய்தால் முக்தி கிடைக்கும். இதைத்தான் பார்க்க முக்தி தரும் தில்லை என்கிறார்கள்.

சிதம்பரம் நடராஜர் ஆலயத்திற்கு தில்லை வனம் என்றும் ஒரு பெயர் உண்டு. புலியூர், பூலோக கைலாசம், புண்டரீகபுரம், வியாக்கிரபுரம் முதலிய வேறு பெயர்களும் உண்டு. இத்தலம் தில்லை என்னும் மரங்கள் அடர்ந்த காடாக இருந்ததால் இப்பெயர் பெற்றது. சிதம்பரத்திற்கு கிழக்கில் உள்ள பிச்சாவரத்திற்கு அருகே அமைந்துள்ள உப்பங்கழியின் கரைகளில் தில்லை மரங்கள் தற்போது அதிகமாக காணப்படுகின்றன.
பஞ்சபூத தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலமாகக் அமைந்துள்ளது. சிதம்பரம் என்பதை பிரித்தால் சித்+அம்பரம் = சிதம்பரம். சித்-அறிவு. அம்பரம்- வெட்டவெளி. மனிதனே உன்னிடம் ஏதும் இல்லை என்பது தான் அந்த ரகசியத்தின் பொருள். நடராஜர் ஆலயத்திற்கு பொன்னம்பலம் என்ற பெயர் உள்ளது. பொன்+அம்பலம்= பொன்னம்பலம். அம்பலம் என்றால் சபை. பொன்னாலாகிய சபையில் நடராஜர் ஆனந்த தாண்டவம் ஆடுவதால் அவருக்கு பொன்னம்பலம் என்ற பெயர் ஏற்பட்டது.
பல்வேறு சிறப்புகளைக் கொண்ட சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஒவ்வொரு ஆனி மாதம் ஆனித் திருமஞ்சன தரிசன விழாவும். மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழாவும் கொண்டாடப்படுவது வழக்கம். ஆருத்ரா என்பது திருவாதிரை நட்சத்திரத்தை குறிக்கும் . ஆருத்ரா தரிசனம் என்பது சேந்தனார் வீட்டுக்கு சிவ பெருமான் களி உண்ண சென்ற தினம் மார்கழி மாதம். திருவாதிரை நட்சத்திரம் அன்று ஆகும். இந்த நாளையே ஆருத்ரா தரிசன விழாவாக கொண்டாடப்படுவதாக புராணங்களில் கூறப்படுகிறது. எனவே இந்த நாளன்று ஒவ்வொருவர் வீட்டிலும் களி செய்து சிவனுக்கு படைப்பது வழக்கம்.

மார்கழி மாத திருவாதிரை தினத்தன்று அனைத்து சிவன் கோயில்களிலும் இருக்கும் நடராஜர் திருமேனிக்கு அபிசேக ஆராதனைகள் நடைபெறும்..இந்த நாளில் முப்பத்து முக்கோடி தேவர்களும் சிவன் சன்னதியில் எழுந்தருளி நடராஜ பெருமானுக்கு ஆராதனைகள் செய்வதாக ஐதீகம். இந்த நாளில் சிவதரிசனமும் நடராஜர் அபிசேக தரிசனமும் காண்பது மிகவும் புண்ணியமான ஒன்றாக கருதப்படுகிறது. அபிஷேகத்தை கண்ணாரக்கண்டு தரிசிக்க வாழ்வில் அனைத்துப்பிணிகளும் தீரும். வறுமை நீங்கி செல்வம் சேரும் என்பது நம்பிக்கை.
இத்தகைய சிறப்புமிக்க ஆருத்ரா தரிசன திருவிழா சிதம்பரம் உள்ளிட்ட அனைத்து சிவ ஆலயங்களிலும் கடந்த வாரம் கொடியேற்றுத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் பஞ்சமுக மூர்த்திகள் வீதி உலா பல்வேறு வாகனங்களில் தினமும் நடைபெற்றது.
நாளைய தினம் 5ஆம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. தேரோட்டத்தை முன்னிட்டு பஞ்சமூர்த்திகள் தனி தனி தேர்களில் எழுந்தருளி அருள் புரிய உள்ளனர். தேரோட்டத்தைக் காண ஏராளமானோர் சிதம்பரத்திற்கு வந்து கொண்டுள்ளனர். தொடர்ந்து ஆறாம் தேதி அன்று விழாவின் முக்கிய நிகழ்வாக கருதப்படும் ஆருத்ரா தரிசனம் மதியம் 2 மணியளவில் நடைபெற உள்ளது. அப்பொழுது நடராஜர் சிவகாமி சுந்தரி நடனம் ஆடிய படியே பக்தர்களுக்கு காட்சியளித்து அருள் புரிய உள்ளனர்.
கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடு ஏதும் விதிக்கப்படாததால் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

7ஆம் தேதி பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும், 8ஆம் தேதி இரவு ஞானபிரகாச குளத்தில் தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை பொது தீட்சிதர்களின் செயலாளர் ஹேம சபேசன் தீட்சிதர், துணை செயலாளர் சேது அப்பா செல்ல தீட்சிதர் மற்றும் கோவில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.
சிவபெருமானின் பஞ்ச சபைகளில் ரத்தினசபையாக போற்றப்படும் திருவாலங்காட்டில் உள்ள நடராஜருக்கு நாளை இரவு 9 மணி தலவிருட்சமான ஆலமரத்தின் கீழ் உள்ள ஆருத்ரா மண்டபத்தில் ஆருத்ரா மகாஅபிஷேகம் நடைபெறும்.
6ஆம் தேதி காலை ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications