மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழா.. ஏப்ரல் 3ல் தேரோட்டம்.. 4ல் அறுபத்தி மூவர் உலா
சென்னை: மயிலாப்பூரில் பங்குனி உத்திர நாளில் கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது. கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப்ரல் 3ம் தேதி நடைபெற உள்ளது. 4ஆம் தேதி 63 நாயன்மார்களும் வீதி உலா வரும் நிகழ்ச்சியை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மயிலாப்பூர் மாட வீதியில் திரண்டிருப்பார்கள். இந்த ஆண்டு திருவிழா கோலாகலமாக கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது.
கயிலையே மயிலை..மயிலையே கயிலை என்று பக்தர்களால் அழைக்கப்படுவது மயிலாப்பூர். அன்னை பார்வதி மயில் வடிவம் கொண்டு இறைவனை வழிபட்டது இங்குதான். திருஞான சம்பந்தர் எலும்பாய் இருந்த அங்கம்பூம்பாவையை மீண்டும் பெண்ணாக மாற்றியது இந்த தலத்தில்தான். வாயிலார் நாயனார் வழிபட்டு முக்தி பெற்றதும் இதே மயிலைத் திருத்தலத்தில்தான்.
இங்குள்ள 7 சிவாலயங்களில் மகா சிவராத்திரி நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். வெள்ளீஸ்வரர், கபாலீஸ்வரர், விருப்பாக்ஷீஸ்வரர், காரணீஸ்வரர், மல்லீஸ்வரர், வாலீஸ்வரர், தீர்த்தபாலீஸ்வரர் என சிவ ஆலயங்கள் நிறைந்துள்ள பகுதி மயிலாப்பூர். மயிலாப்பூரில் மாதந்தோறும் ஏதாவது திருவிழாக்கள் நடைபெற்று சாமி ஊர்வலம் வந்து கொண்டிருக்கும். மங்கல வாத்திய ஒலிகள் கேட்டுக்கொண்டே இருக்கும். பல்வேறு சிறப்புகள் பெற்ற மயிலாப்பூரில் அருள்மிகு கற்பகாம்பாள் உடனாய கபாலீஸ்வரருக்கு ஒவ்வொரு வருடமும் நடைபெறும் பங்குனிப் பெருவிழா தனிச்சிறப்பு வாய்ந்தது.

பங்குனி பெருவிழா
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதில், முக்கிய நிகழ்வான தேரோட்டத்தின்போதும் அறுபத்து மூவர் திருவிழாவின் போதும் கோயிலின் 4 மாட வீதிகளில் உலா வரும் தேரோட்டத்தை காண லட்சக்கணக்கான பொதுமக்கள் பல்வேறு ஊர்களில் இருந்து வருவார்கள். கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டுகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில், இந்த ஆண்டு பங்குனி பெருவிழா எந்த வித கட்டுப்பாடும் இன்றி கொண்டாடப்பட உள்ளது.

கோலகல கொடியேற்றம்
இந்த ஆண்டுக்கான பங்குனி பெருவிழா இன்று காலை 7.30 மணி முதல் 8.30 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்கியது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் வேத மந்திரங்கள் முழங்க, நாதஸ்வர, கெட்டிமேள இசை ஒலிக்க பலத்த ஆரவாரத்துடன் பெருவிழா திருக்கொடி ஏற்றப்பட்டது. கூடியிருந்த பக்தர்கள் கொடி மீது மலர்தூவி வணங்கினர். இதையடுத்து கொடியேற்றத்துக்கான மகா தீபாரதனை காட்டப்பட்டது. கூடியிருந்த பக்தர்கள் 'மயிலையே, கயிலை என்று பக்தி பரசவத்துடன் கோஷமிட்டனர்.

அறுபத்து மூவர் திருவிழா
விழாவின் 7ஆம் நாளில் ஏப்ரல் 3ஆம் தேதி காலையில் தேரோட்டம் நடைபெற உள்ளது. ஏப்ரல் 4ஆம் அறுபத்தி மூவர் வீதியுலா நடைபெறும். எட்டாம் நாள் விழாவாக நடைபெறும் அறுபத்து மூவர் விழா உலகப்புகழ் பெற்றது. அன்று நடைபெறும் பூம்பாவையை உயிர்ப்பித்த நிகழ்ச்சி விழாவும் மிகவும் புகழ்பெற்றது. அன்றைய தினம் மாலையில் வெள்ளி விமானத்தில் இறைவன் அறுபத்து மூன்று நாயன்மார்களோடு வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இரவு ஐந்திரு மேனிகள் விழாவும் நடைபெறுகிறது.

பங்குனி உத்திர திருக்கல்யாணம்
ஏப்ரல் 6ஆம் தேதி திருக்கல்யாண வைபவம் நடைபெறவுள்ளது. இன்று தொடங்கிஸ்தான நாதஸ்வர வித்வான்களின் மங்கள இசை நிகழ்ச்சியும் நடைபெறும். மேலும், பொதுமக்கள் 10 நாட்களுக்கு பகல் மற்றும் இரவு நேரங்களில் ஐந்திருமேனிகள் வீதி உலா, பக்தர்களுக்கு அன்னதானம், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேரோட்டம்,அறுபத்து மூவர் திருவிழா நாள் அன்று கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், திருட்டு போன்ற சம்பவங்கள் நிகழாமல் பாதுகாக்கவும் காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications