பங்குனி மாத பூஜை..சபரிமலை ஐயப்பன் கோவில் இன்று நடை திறப்பு..ஏப்.5ல் ஆராட்டு விழா
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. பக்தர்கள் நாளை முதல் பூஜை செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
திருவனந்தபுரம்: பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. நாளை காலை முதல் 19ஆம் தேதி இரவு வரைக்கும் ஆன்லைன் முன்பதிவு மூலம் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜை காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து ஐயப்பனை தரிசிப்பார்கள். இதுதவிர மாத பூஜை, திருவிழா காலங்களிலும் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவது வழக்கம்.
சபரிமலையில் மாதந்தோறும் பூஜைகளும், திருவிழாக்களும் நடைபெறுவது வாடிக்கை. அதிலும் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் படி பூஜை, மார்கழி மாதத்தில் நடைபெறும் மண்டல பூஜை, தை மாதத்தில் நடைபெறும் மகர விளக்கு மற்றும் மகர ஜோதி தரிசன நிகழ்ச்சி, பங்குனி மாதத்தில் நடைபெறும் ஐயப்பன் ஆராட்டு விழா. சித்திரை மாதத்தில் நடக்கும் விஷு கனி விழா ஆகியவை மிகப்புகழ்பெற்ற திருவிழாக்களாகும்

பங்குனி மாத பூஜை
பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார். மற்ற சிறப்பு பூஜைகள் எதுவும் இன்று கிடையாது. அதே சமயத்தில் கோவில் கருவறை மற்றும் சுற்றுப்புற பகுதிகள் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெறும்.

ஐயப்பனுக்கு நெய்யபிஷேகம்
புதன்கிழமை முதல் 19ஆம் தேதி வரை தினமும் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடை பெறுகிறது. மேலும் தந்திரி ராஜீவரு தலைமையில் படிபூஜை, உதயாஸ்தமன பூஜை, கலச பூஜை, களபாபிஷேகம் போன்ற சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.

ஐயப்பனுக்கு ஆராட்டு
19ஆம் தேதி இரவு அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு இரவு 10.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும். ஆன்லைன் முன்பதிவு மூலம் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். பின்னர் பங்குனி ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு சபரிமலை கோவில் நடை வருகிற 26ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். 27ஆம் தேதி காலை 9.45 மணிக்கு திருக்கொடியை ஏற்றி வைத்து 10 நாள் திருவிழாவை தந்திரி கண்டரரு ராஜீவரு தொடங்கி வைக்கிறார். ஏப்ரல் மாதம் 5ஆம் தேதி பம்பையில் ஐயப்பனுக்கு ஆராட்டு நடைபெறும்.

ஆராட்டு உற்சவம்
ஐயப்பன் ஆராட்டு திருநாளில், சபரிமலையில் இருந்து தர்மசாஸ்தா ஐயப்பனின் உற்சவர் சிலை பம்பை ஆற்றுக்கு கொண்டுவரப்பட்டு, ஆராட்டு உற்சவம் நடைபெறும். பின்னர் ஐயப்பனை அலங்கரித்து பம்பை ஆற்றங்கரையில் அமைந்துள்ள விநாயகர் கோவில் முன்பாக 3 மணி நேரம் வரையிலும் வைத்திருப்பார்கள். அப்போது, பாரபட்சமில்லாமல், அனைத்து வயதுடைய பெண்களும் கலந்து கொண்டு பிரம்மச்சாரிய கடவுளான தர்மசாஸ்தா ஐயப்பனை தரிசனம் செய்துகொள்ளலாம்.

பெண்களும் தரிசனம்
கோவில்களில் நடைபெறும் திருவிழாக்களின் போது, கோவில்களில் சிறப்பு அபிஷேம் நடைபெறும். அந்த சமயங்களில் சந்தர்ப் சூழ்நிலை காரணமாக, எத்தனையோ மக்களால் கோவிலுக்குள் நுழைய முடியாமல் போவதுண்டு. அதற்காகவே திருவிழா நடைபெறும் சமயத்தில் உற்சவர் ஊர்வலம் நடக்கும். அது போலவே ஐயப்பன் ஆராட்டு உற்சவமும் நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications