யார்ரா அந்த பையன்..நான்தான் அந்த பையன்! சர்ச்சையான சேலம் ராஜமுருகன் சிலை! இப்போ ஜம்முனு இருக்காராம்!
சேலம்: சேலத்தில் கடந்த ஆண்டு பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட்ட 56 அடி ராஜ முருகன் சிலை முக அமைப்பு குறித்து சமூக வலைதளங்களில் கடும் சர்ச்சை எழுந்தது. இதை அடுத்து அந்த சிலையை கோவில் நிர்வாகத்தினர் புனரமைத்து உள்ளனர். அனைத்து பணிகளும் நிறைவடைந்து இருக்கும் நிலையில் விரைவில் கும்பாபிஷேக தேதி அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.
குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்று சொல்வார்கள்.. தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் முருகப்பெருமான் அறுபடை வீடுகள் மட்டுமல்லாது எல்லா இடங்களிலும் குடி கொண்டிருக்கிறார்.

மற்ற கடவுள்களை விட தமிழ் கடவுளான முருகப்பெருமான் வழிபாடு தமிழகத்தில் ஆண்டாண்டு காலமாய் இருக்கிறது. குறிப்பாக சேலம் மாவட்டத்தில் முருகப்பெருமான் கோயில்கள் அதிகமாக இருக்கிறது. அப்படி ஆத்தூர் அருகே இருக்கும் வடசென்னிமலை முருகன் கோயில் மக்களிடையே பெரும் பிரசித்தி பெற்றது.
இந்த நிலையில் அதற்கு பிறகு சேலம் மாவட்டத்தில் கட்டப்பட்டிருக்கும் முருகன் கோயில் ஒன்று கடந்த ஆண்டு இணையத்தில் கேலி கிண்டலுக்கு ஆளானது. சேலம் தாரமங்கலம் அருகே, ராஜமுருகன் கோவிலில் 56 அடி உயரத்தில் முருகன் சிலை வடிவமைக்கப்பட்டு கடந்த ஆண்டு பிரதிஷ்டைக்காக சிலை மக்களின் பார்வைக்காக வைத்தது கோவில் நிர்வாகம்.
சிலர் அதனை புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டதால் முருகனின் முக அமைப்பு, உடல் அமைப்பு சரியில்லை என்று சமூக வலைதளங்களில் முருக பக்தர்கள் பல்வேறு எதிர்க்கருத்துகளைத் தெரிவித்தனர். குறிப்பாக அழகென்ற சொல்லுக்கு முருகன் தானே.. ஆனால் இங்கு என்ன முருகனின் முகம் ஒழுங்கின்றி சீரின்றி உள்ளது என கடுமையாக விமர்சித்தனர். கடந்த ஆண்டு மே மாதம் முழுவதும் இது தொடர்பான பதிவுகளை இணையத்தில் அதிகமாக பார்க்க முடிந்தது.
சேலம் முத்து முருகன் கோவில், மலேசியாவில் பத்து மலை முருகன் சிலை போல வடிவமைக்க திட்டமிட்ட நிலையில் முனீஸ்வரன் சிலையை வடிவமைத்த சிற்பி இப்படி மாற்றி கட்டி விட்டார் எனக் கூறிய கோவில் நிர்வாகம், 40 லட்சம் ரூபாய் வரை செலவான நிலையில் பக்தர்களின் கோரிக்கையை அடுத்து மறு சீரமைக்கப்படும் என அறிவித்தது கிட்டத்தட்ட ஓராண்டாக முருகன் சிலையை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது அந்த பணிகள் முடிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் அருகே நந்தி சிலை, மகாலட்சுமி சிலை அமைக்கப்பட்டு இருக்கும் வகையில் விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் எனவும் அதற்கு முன்னதாக சிலை மக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என கூறியிருக்கின்றனர் கோவில் நிர்வாகத்தினர். மேலும் சேலம் முத்து மலை முருகன் கோவில் சிலையை போலவே தற்போது முருகன் சிலை வடிவமைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது பழைய சிலையும் புதிய சிலையின் மாதிரி புகைப்படத்தையும் ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள். தற்போது உருவாக்கப்பட்டிருக்கும் முருகன் சிலை மாதிரி சிலை போல நன்றாக வருமா? அல்லது ஏற்கனவே இருந்தது போல இருக்குமா என பக்தர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். முருகன் சிலையை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்த பின்னர் தான் அதன் உண்மை நிலை தெரிய வரும் என்கின்றனர் பக்தர்கள்.












Click it and Unblock the Notifications