அமாவாசை நாளில் காக்கைக்கு வைக்கும் உணவை அது உண்டால்தான் முன்னோர்களின் ஆசி கிடைக்குமா?
சென்னை: மகாளய அமாவாசை என்றில்லை, எந்த அமாவாசையாக இருந்தாலும் நாம் வைக்கும் உணவை காகம் எடுக்கிறதா என்பதை கண்காணிக்க வேண்டியது அவசியமா என்பதை தெரிந்து கொள்ளலாம்.
தனது தாய், தந்தையர், மனைவி, தாத்தா, பாட்டி உள்ளிட்டோரின் திதி தேதி தெரியாமலும் திதி கொடுப்பதன் பலன் தெரியாமலும் திதியே கொடுக்காமல் இருப்பர். இதனால் அவர்களுக்கு பித்ரு தோஷம் ஏற்பட்டு அவர்கள் வீட்டில் எந்த நல்ல காரியமும் நடக்காமல் கஷ்டத்திற்கு மேல் கஷ்டம் ஏற்படும்.

இதனால் அவர்கள் எல்லாம் மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம், திதி கொடுத்தால் முன்னோர்களின் ஆசியும் அருளும் கிடைக்கும். அதிலும் 7 ஜென்மத்து முன்னோர்களும் ஒரு சேர அந்த குடும்பத்தினரை வாழ்த்துவார்களாம்.
இந்த புரட்டாசி மாதம் மகாளய பட்சம் என 15 நாட்கள் இருக்கும். இந்த நாளில் பலர் வெங்காயம், பூண்டு உள்ளிட்டவைகளை சேர்க்காமல் சமைத்து சாப்பிடுவார்கள். இந்த 15 நாட்களிலும் நம் முன்னோர்களின் திதி வரும். அந்த நாளிலும் தர்ப்பணம் செய்துவிட்டு மகாளய அமாவாசையிலும் தர்ப்பணம் கொடுக்கலாம்.
மகாளய அமாவாசையின் போது ஆண்கள் ஆற்றங்கரைக்கு சென்று தர்ப்பணம் கொடுப்பார்கள். அவர்கள் போய்விட்டு வருவதற்குள் பெண்கள் வீட்டில் உணவை சமைத்து வைத்திருப்பார்கள். பின்னர் பூஜை அறையில் அவரவர் குடும்ப வழக்கப்படி 5 வாழை இலைகளில் பாயாசம், வடை, வாழைக்காய், உருளைக் கிழங்கு, முருங்கைகீரை, முருங்கைக்காய் சாம்பார், அப்பளம் ஆகியவற்றை வைத்து தீபாராதனை செய்து வைத்து வழிபட வேண்டும்.
பின்னர் ஒரு இலையில் காகத்திற்கு சாதம் வைத்து, ஒரு டம்ளரில் தண்ணீர் கொண்டு போய் , நாம் வழக்கமாக காகத்திற்கு சாதம் வைக்கும் இடத்தை அந்த நீரை கொண்டு லேசாக சுத்தம் செய்துவிட்டு இலையுடன் சாதத்தை வைக்க வேண்டும்.
அவ்வாறு வைத்துவிட்டு சிலர் காகம் எடுக்கிறதா, எந்த திசையில் எடுக்கிறது, எந்த உணவை முதலில் எடுக்கிறது என்றெல்லாம் மறைந்திருந்து பார்ப்பார்கள். அதெல்லாம் செய்யத் தேவையில்லை. பொதுவாக காகங்களுக்கு தினமும் குறிப்பிட்ட நேரத்திற்கு உணவு வைத்து பழக்கி வைத்திருக்க வேண்டும்.
அப்போதுதான் அந்த காகம் அமாவாசை அன்று அதே நேரத்தில் உணவு வைத்தால் எடுக்கும். இல்லாவிட்டால் கா கா என காக்கா போல் கத்தினாலும் வராது. இதனால் பலருக்கு மன வருத்தம் ஏற்பாடு. "நம் முன்னோர்களுக்கு நம் மீது என்ன கோபமோ தெரியவில்லை, நாம் வைத்த உணவை எடுக்கவில்லை" என வருந்துவார்கள்.
அதெல்லாம் தேவையே இல்லை. காகங்களுக்கு உணவு வைத்துவிட்டால் போதும் அது எடுத்தாலும் எடுக்காவிட்டாலும் அந்த உணவை முன்னோர்களுக்கு வைத்ததாகவே கருதப்படுகிறது. சில நேரங்களில் வெயில் அதிகமாக இருக்கும். அதனால் கூட காக்கைகள் வராது. எனவே யாரும் மனக் கவலைப்படாதீர்கள். பெங்களூரில் இதற்காகவே காக்கையை ஒரு நபர் வாடகைக்கு விடுவாராம். சரியாக அமாவாசை நாளில் அவருக்கு பணம் செலுத்திவிட்டு காக்கைக்கு உணவை வைக்கலாம் என்றெல்லாம் 5 ஆண்டுகளுக்கு முன்னர் வந்த செய்தி!












Click it and Unblock the Notifications