ஸ்ரீராம நவமி..குடும்ப ஒற்றுமை அதிகரிக்க இப்படி விரதம் இருங்கள்..இந்த தவறுகளை செய்யாதீர்கள்!
சென்னை: சித்திரை மாதத்தில் வளர்பிறை நவமியன்று ராமர் அவதரித்தார். சில ஆண்டுகளில் இந்த விழா, பங்குனி மாதத்திலும் வரும். இந்த ஆண்டு பங்குனி மாதம் 16ஆம் தேதி மார்ச் 30ஆம் தேதி வியாழக்கிழமை நாளைய தினம் ஸ்ரீ ராம நவமி கொண்டாடப்படுகிறது. ராம நவமி நாளில் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது விரத முறையை எப்படி கடைபிடிக்கலாம் என்று பார்க்கலாம்.
அஷ்டமி, நவமி தினங்களில் எந்த காரியத்தையும் செய்ய மாட்டார்கள். அந்த இரு திதிகளையும் புறக்கணித்து விடுவார்கள். இதனால் கவலையுற்ற அஷ்டமி, நவமி ஆகிய இரு திதிகளும், மகா விஷ்ணுவிடம் சென்று தங்களுக்கு ஏற்பட்டுள்ள குறையை கூறினர். அப்போது விஷ்ணு பகவான், உங்களையும் மக்கள் அனைவரும் போற்றி துதிக்கும் நாள் வரும் என்று உறுதியளித்தார். அதன்படியே வாசுதேவர்-தேவகி ஆகியோருக்கு மகனாக, அஷ்டமி திதியில் கிருஷ்ணர் தோன்றினார். அன்றைய தினம் கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. நவமி திதியில் தசரதர்-கோசலை தம்பதியருக்கு மகனாக அவதரித்தார் ராமபிரான். அன்றைய தினம் ராம நவமி திருநாளாக கொண்டாடப்படுகிறது.
ஸ்ரீராம நவமி நாளில் காலையில் உணவு ஏதும் சாப்பிடாமல் ஸ்ரீராம நாமம் துதித்து விரதமிருந்து ஸ்ரீராமபிரானை வணங்கி வழிபடுபவர்களின் குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். பிரிந்தவர்கள் ஒன்று சேருவர், குடும்ப நலம் பெருகி, வறுமை நீங்கி செல்வம் பெருகும்.நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

ஸ்ரீராம நவமி விரதம்
ராமபிரான் அவதரித்த நாளே ராமநவமி என்று கொண்டாடப்படுகிறது. ராமர் பிறப்பதற்கு முன் ஒன்பது நாட்கள் ஒரு விரத முறையாகவும், ராமர், பிறந்ததில் இருந்து ஒன்பது நாட்கள் ஒரு விரத முறையாகவும் அனுஷ்டிக்கப்பட்டு, ராமநவமியை பக்தர்கள் கொண்டாடி வருகின்றனர். ராமநவமி விரதம் இரண்டு விதமாக அனுஷ்டிக்கப்படுகிறது. அதாவது, சித்திரை மாதம் சுக்லபட்ச பிரதமை திதியில் இருந்து நவமி திதி வரை உள்ள ஒன்பது நாள் விரதம் முதல் வகையாகும். இதற்கு 'கர்ப்போஸ்தவம்' என்று பெயர். சித்திரை மாத சுக்லபட்ச நவமி திதியில் இருந்து அடுத்து வரும் ஒன்பது நாட்கள் அனுஷ்டிப்பது இரண்டாவது வகை. இதற்கு 'ஜன்மோதீஸவம்' என்று பெயர்.

ஸ்ரீராம நவமி முகூர்த்தம்
இந்த ஆண்டு ஸ்ரீராம நவமி வியாழக்கிமை கொண்டாடப்படுகிறது. நவமி திதியானது இன்றைய தினம் இரவு 11.49 மணிக்கு துவங்கி, மார்ச் 31 ம் தேதி அதிகாலை 01.40 மணி வரை உள்ளது. அதற்கு பிறகே தசமி திதி வருகிறது. அதனால் மார்ச் 30 ம் தேதி நாள் முழுவதும் நவமி திதி காணப்படுகிறது.

குருபுஷ்ய யோகம்
ஜோதிட சாஸ்திரப்படி, இந்த ராமநவமியின் போது சிறப்பு யோகங்கள் உருவாகும் என்பது நம்பிக்கை. ஸ்ரீராம நவமி அன்று அமிர்த சித்தி யோகம், குரு புஷ்ய யோகம், சுப யோகம், சர்வார்த்த சித்தி யோகம், ரவி யோகம் உருவாகிறது. ஸ்ரீராமபிரானுக்கு சர்க்கரைப் பொங்கல் படையல் செய்து வழிபடலாம். ராம நவமி நாள் குடும்ப ஒற்றுமையை அதிகரிக்கும் நாள் மறந்தும் கூட இந்த நாளில் சண்டை போடாதீர்கள்.

குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும்
ராம நவமி நாளில் விரதமிருந்து மனமுருகி இறைவனை வேண்டிக் கொண்டால் குடும்பத்தை விட்டுப் பிரிந்தவர்கள் ஒன்று சேருவர், குடும்ப நலம் பெருகி, வறுமையும், நோய்கள் அகலும் காரிய வெற்றி உண்டாகும் என்ற ஐதீகம் உண்டு. நாளை ராம நவமியன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு, வீட்டை தூய்மைப்படுத்தி விரதத்தை கடைபிடிக்க வேண்டும். காலை நேரத்தில் வேக வைத்த உணவுகளை சாப்பிடாமல் விரதம் தொடங்க வேண்டும். பானகம் சாப்பிடலாம். வீட்டில் குப்பைகளை போட்டு வைக்க கூடாது. தானம் கேட்டு வருபவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் தானம் தர வேண்டும்.

ராமர் பட்டாபிஷேகம் படம்
பூஜை அறையில் ராமர் படத்தை நன்றாக சுத்தம் செய்து குங்குமம், சந்தனம் போன்றவற்றால் பொட்டு வைத்து, துளசிமாலை அணிவிக்க வேண்டும். பின் பழம், வெற்றிலை, பூ இவைகளை வைத்து ஸ்ரீராம நாமத்தை சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். சாதம், பாயாசம், பானகம், வடை, நீர்மோர், தேங்காய், பஞ்சாமிர்தம், வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு இவற்றை நைவேத்தியமாக படைக்கலாம். ராமரை பற்றிய நூல்களை படித்தும், பாராயணம் செய்வதுமாக இருக்க வேண்டும். அர்ச்சனை முடிந்தபின் நைவேத்தியமான சர்க்கரை பொங்கலை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications