திருவனந்தபுரம் ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழா..லட்சக்கணக்கானோர் குவிந்தனர்
ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கானோர் திருவனந்தபுரத்தில் குவிந்துள்ளனர்.
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்திபெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் பொங்கல் திருவிழா இன்று நடைபெறுகிறது. லட்சக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து பகவதி அம்மனை வழிபாடு செய்வதற்காக திருவனந்தபுரத்தில் குவிந்துள்ளனர். பொங்கல் வைத்து வழிபட்டால் பகவதி அம்மன் தங்களின் வேண்டுதலை நிறைவேற்றுவாள் என்பது நம்பிகை.
ஆற்றுக்கால் பகவதி அம்மனுக்கு என்ன அப்படி ஒரு சிறப்பு என்று பல புராண கதைகள் உள்ளன. சிலப்பதிகாரத்தின் நாயகியும், கற்புக்கரசியுமான கண்ணகி தான், ஆற்றுக்கால் பகவதி அம்மன் என்று கூறப்படுகிறது. தன் கணவன் கள்வன் அல்ல என்பதை, பாண்டிய மன்னனிடம் நிரூபணம் செய்து விட்டு, மதுரையை தீக்கு இரையாக்கினாள் கண்ணகி. பின்னர் அங்கிருந்து கன்னியாகுமரி வழியாக கேரள மாநிலத்தில் கொடுங்கல்லூர் என்ற இடத்திற்கு செல்லும் வழியில், ஆற்றுக்கால் என்ற இடத்தில் இளைப்பாறினாள். அதன் நினைவாகவே இங்கு ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் அமைக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள்.
ஆற்றுக்கால் பகவதி அம்மன் தோன்றியதற்கு மற்றொரு கதையும் சொல்லப்படுகிறது. பராசக்தியின் பக்தர் ஒருவர், கிள்ளி என்ற ஆற்றில் நீராடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு தெய்வீக அம்சம் பொருந்திய அழகுச் சிறுமி ஒருத்தி வந்தாள். அந்த சிறுமியைக் கண்ட பக்தர், அம்மனே சிறுமியின் உருவில் வந்திருப்பதாக எண்ணினார். அதே நேரம் பக்தரைப் பார்த்து அந்த சிறுமி, ஐயா என்னை இந்த ஆற்றின் மறுகரையில் கொண்டு போய் விட முடியுமா? என்று கேட்டாள்.

அன்னையின் உருவமாக அந்த சிறுமியைக் கண்ட பக்தருக்கு அவளை பிரிய மனம் வரவில்லை. எனவே அவளை தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்று உபசரிக்க நினைத்தார். அதை அந்த சிறுமியிடம் அவர் சொல்ல முற்பட்டபோது, சிறுமி மறைந்தாள்.
சிறுமி வடிவில் வந்தது அம்பாள் தான் என்பதை எண்ணி, பக்தர் மகிழ்ச்சியடைந்து வீடு திரும்பினார். அன்று இரவு உறங்கும் போது பக்தரின் கனவில் தோன்றிய அதே சிறுமி, "தென்னை மரங்கள் அடர்ந்த பகுதியில் மூன்று கோடுகள் தென்படும். அந்த இடத்தில் கோவில் அமைத்து என்னை குடியமர்த்துங்கள் என்றாள். மறுநாள் சிறுமி கனவில் சுட்டிக்காட்டிய இடத்திற்கு சென்ற பக்தர், அங்கு மூன்று கோடுகள் இருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தார். தொடர்ந்து அந்த இடத்தில் சிறிய கோவில் ஒன்றைக் கட்டி, அம்மனை வழிபட்டார். அதுவே நாளடைவில் ஆற்றுக்கால் பகவதி அம்மன் ஆலயமாக உருவானதாக கோவில் வரலாறு சொல்கிறது.
ஆற்றுக்கால் பகவதி அம்மன் ஆலயம் முழுவதும் செம்புத் தகடால் வேயப்பட்டது. கோவில் இருக்கும் ஸ்ரீசக்கரத்தை ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளார். கோவில் தூண்கள் மற்றும் சுவரில் மகிஷாசுரமர்த்தினி, காளி, ராஜராஜேஸ்வரி, சிவ பார்வதியின் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. கோபுரத்தின் ஒரு பகுதியில் கண்ணகியின் வரலாற்றைக் கூறும் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன.
ஆலய நுழைவு வாசலின் மேல் பகுதியில் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கத்தி, கேடயம், சூலம், அட்சயபாத்திரம் போன்றவற்றை தாங்கி, அரக்கியை அடக்கி அவள் மேல் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறாள். கருவறையில் இரண்டு அம்மன் சிலைகள் உள்ளன. மூல விக்ரகத்தில் ரத்தினங்கள் பதித்து, தங்க அங்கி சாத்தப்பட்டுள்ளது. அம்மனின் கருவறை ஸ்ரீகோவில் என்று அழைக்கப்படுகிறது. ஆலய வளாகத்தைச் சுற்றி கணபதி, சிவன், நாகர், தட்சிணாமூர்த்தி, ஆஞ்சநேயர் சன்னிதிகள் உள்ளன.
ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் நடைபெறும் பொங்கல் திருவிழா உலக புகழ்பெற்றது. இந்த கோவிலில் பெண்கள் மட்டுமே பங்கேற்று பொங்கல் வைத்து வழிபாடு நடத்தும் நிகழ்ச்சி ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும். இந்த பொங்கல் விழாவில் லட்சக்கணக்கான உள்நாட்டு, வெளிநாட்டு பெண் பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
ஒரே இடத்தில் அதிக பெண்கள் திரண்டு பொங்கல் வழிபாடு நடத்திய வகையில் இந்த பொங்காலை திருவிழா 2 முறை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்று உள்ளது.
மாசி மாதத்தில் 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் 9வது நாள் பொங்கல் வழிபாடு நடைபெறும். இந்த வருட பொங்கல் திருவிழா கடந்த 27ம் தேதி தொடங்கியது. அன்று முதல் பகவதி அம்மனுக்கு தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் பிரசித்தி பெற்ற பொங்கல் வழிபாடு இன்று நடைபெறுகிறது. இன்று காலை 10.30 மணிக்கு கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள பண்டார அடுப்பில் தீ மூட்டப்படும். இதன்பின் கோயிலின் 6 கிலோமீட்டருக்கு மேல் சுற்றளவில் குவிந்திருக்கும் லட்சக்கணக்கான பெண்கள் பொங்கலிடத் தொடங்குவார்கள்.
பிற்பகல் 2.30 மணிக்கு பொங்கல் பானைகளில் நைவேத்தியம் செய்யப்படும். இதன் பிறகு தங்களது வேண்டுதலை பகவதி அம்மன் நிறைவேற்றுவாள் என்ற நம்பிக்கையுடன் பெண்கள் அனைவரும் தங்களது ஊர்களுக்குத் திரும்புவார்கள்.

இந்த நிலையில் கேரளாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கானோர் திருவனந்தபுரத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் கடந்த சில தினங்களாக திருவனந்தபுரம் நகர் முழுதும் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பாதுகாப்புக்காக 4 எஸ்பிக்கள் தலைமையில் 3,500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2 நாட்களாக ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலில் வரலாறு காணாத அளவில் பக்தர்கள் தரிசனத்திற்காக குவிந்தனர்.
ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழாவில், சிறுவர்களின் குத்தியோட்டமும் சிறப்புமிக்கதாகும். அதாவது 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் இந்த வழிபாட்டை நடத்துகிறார்கள். அவர்கள் அனைவரும் மகிஷாசுரமர்த்தினியுடன் போரில் பங்கேற்று காயமடைந்த படைவீரர்களாக கருதப்படுகிறார்கள். திருவிழா தொடங்கிய மூன்றாம் நாள் சிறுவர்கள் தலைமை அர்ச்சகரிடம் பிரசாதம் பெற்று, கோவிலில் தனி இடத்தில் 7 நாட்கள் தங்கியிருந்து விரதம் கடைப்பிடிப்பார்கள். அந்த 7 நாட்களில் தினமும் நீராடி அம்மனுக்கு சன்னிதியில் ஈர உடையுடன் நின்றபடி 1008 நாமங்களை சொல்லி வழிபட வேண்டும். இந்த விரதத்தை மேற்கொள்வதால், சிறுவர்கள் எதிர்காலம் சிறப்பாக அமையும் என்பது ஐதீகம்.
பொங்கல் விழாவை முன்னிட்டு சிறுமிகள் பலர் தங்களை அலங்கரித்த நிலையில் அம்மன் சன்னிதானத்திற்கு, குடும்பத்துடன் வந்து அம்மனை வழிபட்டனர். மலர்கிரீடம் சூடி அழகாக அலங்கரித்துக்கொண்டு வந்து வழிபட்டனர். இதை தாலிப்பொலி என்று கூறுகிறார்கள். இந்த வழிபாட்டால், சிறுமிகளுக்கு நோய் நொடி வராது. எதிர்காலத்தில் நல்ல வரன்கள் அமையும், அவர்களது அழகும், செல்வமும் அதிகரிக்கும்.என்பது நம்பிக்கையாக உள்ளது.












Click it and Unblock the Notifications