திருப்பதி ஏழுமலையானுக்கு காணிக்கையை கொட்டிக்கொடுத்த பக்தர்கள்.. 7 மாதத்தில் எத்தனை கோடி தெரியுமா?
திருப்பதி: ஏழுமலையான் கோயிலில் 7 மாதங்களில் ரூ. 827 கோடி உண்டியல் காணிக்கையாக வசூலாகியுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரை பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் காணிக்கை தொடர்பான விவரங்களை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
திருப்பம் தரும் திருப்பதி: ஏழுமலையானை தரிசனம் செய்து வந்தால் திருப்பம் ஏற்படும் என்ற நம்பிக்கையில் பல்லாயிக்கணக்கானோர் தினசரியும் திருப்பதி வந்து செல்கின்றனர். பல மணி நேரம் கால் கடுக்க காத்திருந்து சில நிமிட நேரம் தரிசனம் செய்தாலும் மன திருப்தியுடன் செல்கின்றனர் பக்தர்கள். ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் உண்டியலில் தங்களின் சக்திக்கு ஏற்ப காணிக்கை செலுத்துகின்றனர். அம்பானி போன்றவர்கள் தங்கம் வைரம் என உண்டியலில் செலுத்துகின்றனர். அதே நேரத்தில் ஏழை நடுத்தர மக்கள் தங்களால் இயன்ற பணத்தை காணிக்கையாக செலுத்துகின்றனர். தலைமுடியை காணிக்கையாக செலுத்துகின்றனர். காணிக்கையாக கிடைத்த தலைமுடியை ஏலம் விடுவதன் மூலம் பல கோடி ரூபாய் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வருமானம் கிடைக்கிறது.

ஏழுமலையானுக்கு காணிக்கை: 1950ஆம் ஆண்டு வரை ஏழுமலையானுக்கு கிடைத்த உண்டியல் வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்கு குறைவாகவே இருந்தது, ஆனால் 1958ஆம் ஆண்டு முதன்முறையாக ஒரு லட்சத்தை தாண்டியது. 1990 ஆண்டு முதல் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான உண்டியல் வருவாய் வரத் தொடங்கியது. அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.
கோடிக்கணக்கில் வருமானம்: கடந்த 2010 ஆண்டு அக்டோபர் 23 தேதி ஒரே நாளில் ரூ.3.6 கோடியாகவும், 2011 ஆண்டு நவம்பர் 1 தேதி ரூ.3.8 கோடியாகவும், 2012 ஜனவரி 1ஆம் தேதி ரூ.4.23 கோடியாகவும் இருந்தது. 2012 ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி அன்று அதிகபட்சமாக ரூ.5.73 கோடி வருமானம் கிடைத்தது. இந்த ஆண்டு ஜூலை 4ம் தேதி ரூ.6 கோடியைத் தாண்டியது. 2015-16ஆம் உண்டியல் ஆண்டு வருமானம் ரூ..1,000 கோடியைத் தாண்டியது. 2019-20- நிதி ஆண்டில் ரூ.1,313 கோடியை எட்டியது.
கொரோனா காலத்தில் கட்டுப்பாடு: கொரோனா பாதிப்பால் பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இதனால் கோவில் உண்டியல் வருமானம் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக வெகுவாகக் குறைந்தது. 2020-21ல் நிதி ஆண்டில் ரூ.731 கோடியும், 2021-22ல் ரூ.933 கோடி மட்டுமே வருமானம் கிடைத்தது. நடப்பு நிதியாண்டில் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து கட்டுக்கடங்காத கூட்டம் திருப்பதிக்கு வருகிறது.
ரூ.1500 கோடி வருமானம்: கடந்த ஆண்டு அதிக பட்சமாக ஜூலை மாதத்தில் மட்டும் ரூ.139.35 கோடி வருவாய் கிடைத்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ரூ.140.34 கோடி ரூபாய் பக்தர்கள் உண்டியல் காணிக்கை செலுத்தினர். ஒவ்வொரு மாதமும் ரூ.100 கோடிக்கு மேல் காணிக்கை செலுத்தி வருகின்றனர். கொரோனாவுக்கு முன், உண்டியல் வருமானம் ஆண்டுக்கு ரூ.1,200 கோடியாக இருந்தது. தற்போது உண்டியல் வருமானம் ரூ.1,500 கோடி வரை உயர்ந்துள்ளது.
7 மாதத்தில் எத்தனை கோடி: இந்த ஆண்டு கடந்த ஜனவரி மாதம் 123 கோடி ரூபாயும், பிப்ரவரி மாதம் 114 கோடி ரூபாயும் உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியுள்ளனர். மார்ச் மாதம் 120 கோடி ரூபாயும், ஏப்ரல் மாதம் 114 கோடி ரூபாயும், மே மாதம் 109 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கை கிடைத்துள்ளது. ஜூன் மாதம் 116 கோடி ரூபாயும், ஜூலை மாதம் 120 கோடி ரூபாயும் காணிக்கையாக கிடைத்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் இரண்டாம் தேதி மட்டும் ஒரே நாளில் 7 கோடி 68 லட்சம் ரூபாய் காணிக்கையாக கிடைத்தது. இந்தத் தொகை தேவஸ்தான வரலாற்றில் ஒரே நாளில் ஏழுமலையானுக்கு கிடைத்த மிகப்பெரிய காணிக்கை தொகை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜூலை மாதம் சுமார் 23 லட்சம் பக்தர்கள் ஏழுமலையானை வழிபட்டுள்ளனர்.
பிரம்மோற்சவ திருவிழா: ஏழுமலையான் கோயிலில் தொடர்ந்து உண்டியல் காணிக்கை ஆண்டுக்கு 1000 கோடி கிடைப்பதால் தேவஸ்தானத்தின் நிலையான வைப்புத்தொகை மற்றும் தங்கம் கையிருப்பு அதிகரித்துள்ளது. பக்தர்களின் வருகையை கருத்தில் கொண்டு திருமலையில் தங்கும் வசதி, அன்னதானம் போன்ற வசதிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பிரம்மோற்சவ திருவிழா நடைபெற உள்ளதால் உண்டியல் வருமானம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications