திருப்பதியில் அங்கப்பிரதட்சணம் செய்யும் பக்தர்களே.. உங்களுக்குத்தான் இந்த செய்தி.. மிஸ் பண்ணாதீங்க
திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை வரும் நவம்பர் மாதத்தில் பக்தர்கள் தரிசிக்க ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்வது குறித்து திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. நவம்பரில் அங்கப்பிரதட்சணம் செய்யும் பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட்டுகள் இன்று ஆன்லைனில் வெளியாகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். வார இறுதி நாட்களில் வழக்கமாக திருமலையில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பாத யாத்திரையாகவும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். செப்டம்பர் மாதத்தில் பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கருட பஞ்சமி விழாவை முன்னிட்டு கருட சேவை நடைபெற்றது. உற்சவர் மலையப்பசாமி தங்க, வைர நகைகளால் அலங்கரிக்கப்பட்டு தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது ஏராளமான பக்தர்கள் மாட வீதிகளில் காத்திருந்து கோவிந்தா முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.
பக்தர்களுக்காக 3 மாதங்களுக்கு முன்பிருந்தே ஆன்லைனில் டிக்கெட்டுகள் ரிலீஸ் செய்யப்படும். வரும் நவம்பர் மாதம் ஆர்ஜித சேவை தரிசனத்திற்காக குலுக்கல் முறையில் சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை மற்றும் அஷ்டதள பாத பத்மாராதனை சேவைகளுக்கான டிக்கெட்டுகளின் முன்பதிவு கடந்த 19ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கி 21ஆம் தேதி காலை 10 மணியுடன் நிறைவடைந்தது. இதில் 'டிப் சிஸ்டம்' எனப்படும் குலுக்கல் பிரிவில் பக்தர்கள் தங்களுக்கு தேவையான ஆர்ஜித சேவையை முன்பதிவு செய்து கொண்டால், அவர்கள் டிஜிட்டல் முறைப்படி குலுக்கலில் தேர்வு செய்யப்படுவர். அதன்படி தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அவர்கள் குறிப்பிட்ட செல்போன் எண்ணுக்கு தேவஸ்தானம் சார்பில் தகவல் அனுப்பி வைக்கப்படும். தகவல் கிடைத்த பக்தர்கள், இன்று மதியம் 12 மணிக்குள் ஆர்ஜித சேவை டிக்கெட்டுக்கான பணத்தை ஆன்லைனில் செலுத்தி டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலமாகவே பெற்றுக்கொள்ளலாம்.
அதே போல நவம்பர் மாதத்தில் அங்கபிரதட்சணம் செய்ய விரும்பும்பக்தர்கள் இன்று காலை 10 மணிக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். இன்று காலை 11 மணிக்கு ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கான டிக்கெட்டுகள் முன்பதிவு ஏற்றுக்கொள்ளப்படுகிறது. பிற்பகல் 3 மணிக்கு மூத்த குடிமகன்கள், மாற்றுத் திறனாளி பக்தர்களுக்கான ஆன்லைன் டோக்கன்கள் வெளியாக உள்ளது.
நவம்பர் மாதத்திற்கான ரூ.300 சிறப்பு சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் நாளை 24ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் மாதத்தில் திருமலையில் பக்தர்களுக்கான தங்கும் அறைக்கான முன்பதிவு நாளை மறுநாள் 25ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
இந்த சேவைகள் மற்றும் தங்கும் அறைகளுக்கான முன்பதிவுகளை https://tirupatibalaji.ap.gov.in என்கிற தேவஸ்தான இணையத்தில் மட்டுமே மேற்கொள்ள வேண்டும்என தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.
ஏழுமலையானை தரிசனம் செய்ய அலிபிரி மெட்டு மற்றும் ஸ்ரீவாரி மெட்டு மலைப் பாதைகள் வழியாக பாத யாத்திரையாக வந்து செல்கின்றனர் பக்தர்கள். மலைப்பாதைகள் வழியாக மட்டுமே நாள்தோறும் 12000 முதல் 20000 பக்தர்கள் பாத யாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

மலைப்பாதைகள் வழியாக பாத யாத்திரையாக செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அடியோடு குறைந்துள்ளது. கடந்த வாரம் அலிபிரி மலைப்பாதை வழியாக சென்ற 6 வயது சிறுமி லக்ஷிதா சிறுத்தை தாக்கி உயிரிழந்தார். அதன்பிறகு மலைப்பாதைகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு மலைப்பாதையில் வரும் பக்தர்களின் எண்ணிக்கை 3000 முதல் 4000 பக்தர்கள் மட்டுமே வந்து செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் பக்தர்கள் வாகனங்கள் மூலம் அதிகளவு வந்து செல்கின்றனர். நேற்று தான் மலைப்பாதையில் பழங்கள் மற்றும் காய்கறிகளை விற்பனை செய்ய தேவஸ்தானம் தடை விதித்தது. பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்பதற்காக வன விலங்குகள் மலைப்பாதைக்கு வருவதால் தேவஸ்தான நிர்வாகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவ விழாக்கள் நடைபெற உள்ளது. செப்டம்பர் 18ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை சலகட்லா பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. இதே போல் நவராத்திரி பிரம்மோற்சவம் வழக்கம் போல அக்டோபர் மாதம் 15ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பிரம்மோற்சவ விழாவை காண வரும் பக்தர்களுக்காக பல்வேறு ஏற்பாடுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் செய்து வருகிறது.












Click it and Unblock the Notifications