திருப்பதிக்கே மொட்டையா? ஸ்ரீவாரி மெட்டு நடைபாதையில் செல்கிறீர்களா? செக் வைத்த தேவஸ்தானம்
திருப்பதி: ஸ்ரீவாரிமெட்டு நடைபாதையில் திவ்ய தரிசன டோக்கன்களை ஸ்கேன் செய்தால் மட்டுமே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முடியும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய ரூ 300 சிறப்பு தரிசனம், மலை பாதை, தர்ம தரிசனம் போன்ற வழிகளை பக்தர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இது மட்டுமல்லாமல் கல்யாண உற்சவம், தோமாலை சேவை, உள்ளிட்ட சேவைகளின் போதும் சுவாமியை வழிபட முடியும்.

திருப்பதிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள். அது போல் விழாக்காலம், விடுமுறை காலங்களில் லட்சக்கணக்கானோர் வந்து பெருமாளை சேவித்து வருகிறார்கள்.
நடைப்பாதை தரிசனம் என்றால் இரு வழிகளில் வரலாம். ஒன்று அலிபிரி, இன்னொன்று ஸ்ரீவாரி மெட்டு. இதில் ஸ்ரீவாரி மெட்டு வழியாகத்தான் கோவிந்தராஜ பெருமாள் நடந்து சென்றதாக ஐதீகம். இதன் படிக்கட்டுகளும் அலிபிரி மலைப் பாதையை விட குறைவு.
அலிபிரி நடைபாதை மொத்தம் 12 கி.மீ. தூரம் ஆகும். இங்கு 3550 படிகள் உள்ளன. இந்த வழி திருமலை யாத்திரை தொடங்கும் முன் சாலை வழியாக செல்லும் பக்தர்கள் பாதாள மண்டபத்திற்கு வந்து அங்கிருந்து செல்வார்கள். இது 2ஆவது மலை சாலையில் உள்ளது.
இங்கு 4 கோபுரங்கள் உள்ளன. முழுவதும் கூரைகள் வேயப்பட்டு மழை, வெயில், கடுங்குளிரில் இருந்து பக்தர்களை பாதுகாக்கிறது. இங்குள்ள காளி கோபுரம் வரை சென்றால் முக்கால்வாசி மலையை அடைந்துவிட்டதாக அர்த்தம். எனவே இந்த இடத்தில்தான் திவ்ய தரிசனம் எனப்படும் நடைபாதை தரிசன டிக்கெட்டுகள் கொடுக்கப்படும்.
முன் கூட்டியே கொடுத்தால் டிக்கெட்டை வாங்கி கொண்டு வாகனங்களில் சென்றுவிடுவர் என்பதால் இது போன்றதொரு ஏற்பாடு. காளி கோபுரத்தில் இருந்து மீண்டும் கீழே இறங்கி வாகனங்களில் செல்வதற்கு பதிலாக இன்னும் கொஞ்சம் தூரம் நடந்தாலே மேல் திருப்பதியை அடைந்துவிடலாம்.
ஸ்ரீவாரி மெட்டு பகுதி கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் புதுப்பிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இங்கு 2388 படிகட்டுகள் மட்டுமே கொண்ட குறுகிய பாதையாகும். சீனிவாச மங்காபுரத்திலிருந்து இந்த ஸ்ரீவாரி மெட்டுக்கு செல்ல வேண்டும். இந்த பாதையை கடக்க 2 மணி நேரம் முதல் 3 மணி நேரம் வரை ஆகும்.
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை வழியாக தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள். அவர்களுக்கு அடிவாரத்திலேயே திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. அந்த டோக்கன்களை பெற்று பக்தர்கள் நடந்து சென்று ஏழுமலையானை தரிசிக்க வேண்டும் என்பது நியதி.
ஆனால் ஒரு சில பக்தர்கள் அடிவாரத்தில் திவ்ய தரிசன டோக்கன்களை பெற்றுக் கொண்டு மாற்று வழியில் திருமலையை அடைந்து சாமி தரிசனம் செய்வதாக திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. அதன் பேரில் திருமலை- திருப்பதி தேவஸ்தான் திவ்ய தரிசன டோக்கன்களை ஸ்கேன் செய்யும் முறையை மீண்டும் தொடங்கியுள்ளது. இதற்கான சோதனை 20 ஆம் தேதி முதல் நடந்தது.
இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஸ்ரீவாரி மெட்டுவில் திவ்ய தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தர்கள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் 1200 ஆவது படியில் ஸ்கேன் செய்ய வேண்டும்.
அப்படி ஸ்கேன் செய்யும் பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்யலாம். திவ்ய தரிசனம் டோக்கன்களை ஸ்கேன் செய்யாத பக்தர்கள், திருமலையை அடைந்ததும், தரிசன வரிசையில் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே பக்தர்கள் இந்த நடைமுறையை கவனித்து அதன்படி சுவாமி தரிசனத்திற்கு வர வேண்டும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications