விஸ்வகர்மா ஜெயந்தி.. உலகின் படைப்புக்கடவுள்.. தேவ சிற்பியை வணங்கினால் என்னென்ன நன்மைகள்
சென்னை: உலகத்தை உருவாக்கிய விஸ்வகர்மா ஜெயந்தி இன்று கொண்டாடப்படுகிறது. தேவர்களையும், முனிவர்களையும் படைத்தவர் விஸ்வகர்மா என்றும், அவரே உலகத்தைப் படைத்தவர் என்றும் உறுதியாக சொல்லப்படுகிறது. தெய்வங்களின் வசிப்பிடங்களையும், அவர்களது வாகனங்களையும், ஆயுதங்களையும், பறக்கும் இரதங்களையும் வடிவமைத்த பொறியாளர் ஆவார்.
மத்திய அரசு செப்டம்பர் 17 ஆம் தேதியை விஸ்வகர்மா ஜெயந்தியாக அறிவித்து கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு, விஸ்வகர்மா பூஜை இன்று செப்டம்பர் 17 சனிக்கிழமை கன்யா சங்கராந்தியின் போது கொண்டாடப்படுகிறது. பல பெரிய கட்டிடங்கள் கட்டப்படும் இடங்களில், விஸ்வகர்மா புகைப்படம் அல்லது சிலை வைத்து கும்பிடுவது வழக்கம். கட்டிடம் கட்ட தொடங்கும் போது விஸ்வகர்மாவுக்கு சிறப்பு பூஜை செய்யப்படுவது வழக்கமாக உள்ளது.

தமிழகத்தில் ஆவணி கடைசி தேதியில் விஸ்வகர்மா ஜெயந்தி தினம் கடைபிடிக்கப்படுகின்றது. அசாம், உத்தரப்பிரதேசம், கர்நாடகா, மேற்கு வங்கம், பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா, மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டுகின்றது. தமிழகத்திலும் பல இடங்களில் இந்த விஸ்வகர்மா ஜெயந்தி கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றது.
விஸ்வம் என்பதற்கு உலகம் எனவும், கர்மா என்பதற்குப் படைக்கிறவர் என்றும் பொருள்படுகிறது. 'விஸ்வகர்மா' என்பதற்கு 'உலகத்தைப் படைக்கிறவர்', என்றும் 'பிரபஞ்சச் சிற்பி' என்றும், உலகப் படைப்புகளுக்கு அடிப்படையானவர் என்றும் வேதநூல் கூறுகிறது. பிரம்மம், கடவுள் என்னும் தனிச் சொற்கள் பிரபஞ்சத்தைப் படைத்தருளிய பிரம்மத்தை விஸ்வகர்மாவைக் குறிக்கிறது.
ரிக் வேதத்தில் பல இடங்களில் விஸ்கர்மாவைப் பற்றிய குறிப் பு காணப்படுகிறது. உலகத்தின் பிரதான கட்டிடக் கலைஞரும் தெய்வீக தச்சருமான பிரம்மாவின் மகனான விஸ்வகர்மாவை மக்கள் வணங்குகிறார்கள். பக்தர்கள் தங்கள் தொழிற்சாலைகளில் இயந்திரங்களை வழிபடுகிறார்கள் மற்றும் விஸ்வகர்மாவின் சிலையை தங்கள் பணியிடங்கள் அல்லது வீடுகளில் வைத்திருக்கிறார்கள். சூரியன் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு இடம் பெயர்ந்த நாளான கன்யா சங்கராந்தி நாளன்று விஸ்வகர்மா ஜெயந்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இந்து புராணங்களின்படி, விஸ்வகர்மா பிரபஞ்சத்தின் தெய்வீக கட்டிடக் கலைஞர் என்று அழைக்கப்படுகிறார். கடவுள் விஸ்வகர்மா இந்து புராணங்களில் நான்கு கைகளுடன் அளவிடும் நாடா, ஒரு தராசு, ஒரு புத்தகம் மற்றும் ஒரு பானை ஆகியவற்றைப் பிடித்தபடி சித்தரிக்கப்படுகிறார். அவர் நான்கு யுகங்களிலும் கடவுள்களுக்காக பல அரண்மனைகளை உருவாக்கியுள்ளார், கடவுள்களுக்காக பல ஆயுதங்களை உருவாக்கி வடிவமைத்துள்ளார். சிவபெருமான் திரிசூலம், விஷ்ணுவின் சுதர்சன சக்கரம், லங்கா மன்னன் ராவணனின் புஷ்பக விமானம் மற்றும் இந்திரனின் வஜ்ரம், துவாரகா கிருஷ்ணரின் ராஜ்யம் மற்றும் பாண்டவர்களின் மாய சபையை உருவாக்கியுள்ளார்.
உடுப்பி கிருஷ்ணரை வடிவமைத்தவர் விஸ்வகர்மா என்று புராணங்கள் சொல்கின்றன. ருக்மணி தேவிக்கு கிருஷ்ண பகவான் சிறு வயதில் எப்படியிருப்பார் என்று பார்க்க விருப்பம் வந்தது. இதனை தேவ சிற்பி விஸ்வகர்மாவிடம் அழைத்து சொன்னபோது அவருடைய விருப்பத்தின் பெயரில் சாளக்கிராம கல்லில் வலது கையில் தயிர்மத்துடனும், இடது கையில் வெண்ணையும் இருப்பது போன்ற திருவுருவத்தை விஸ்வகர்மா படைத்தருளினார்.
இந்த திருவுருவச்சிலை ருக்மணி தேவியால் பூஜிக்கப்பட்டு வந்த நிலையில் துவாரகை கடலில் மூழ்கிய போது பல ஆயிரம் ஆண்டுகள் கழித்து இந்த சிலை மத்வருக்கு கிடைத்து, மத்வராலேயே இந்த திருவுருவம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
விஸ்வகர்மா பிராமணர்களின் தொழிலின் அடிப்படையில் ஐவராகப் பிரிக்கப்பட்டனர். இரும்பு, மரம், உலோகம், கல்சிற்பம், தங்கம் போன்ற மூலப்பொருள்களை வைத்து ஐந்தொழில்கள் உருவாயின. விஸ்வகர்மா குலத்தவர் ஐந்து முகங்களை உடைய விஸ்வகர்மா கடவுளையே, தங்களின் குலதெய்வமாக வழிபட்டு வந்தனர். காலப்போக்கில் அவரவருக்கு விருப்பமான தெய்வங்களைக் குலதெய்வமாக வழிபடுகின்றனர். விஸ்வகர்மா குலத்தவர்கள் 5 பிரிவினாராக இருக்கின்றனர். இரும்பு வேலை செய்பவர் மதுப்பிரம்மா எனவும், மரவேலை செய்பவர்கள் மயப்பிரம்மா என்றும் உலோக வேலை செய்பவர் துவஷ்டப்பிரம்மா என்றும் கல்சிற்ப வேலை செய்பவர் சில்பிபிரம்மா என்றும் பொன் வேலை செய்பவர் விஸ்வக்ஞயபிரம்மா என்றும் அழைக்கப்படுகின்றனர்.
ஒடிசா, திரிபுரா, மேற்கு வங்காளம், உத்தரப் பிரதேசம், கர்நாடகா, பீகார், ஜார்கண்ட் மற்றும் அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் விஸ்வகர்மா பூஜை வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டிலும் விஸ்வகர்மா குலத்தை சேர்ந்தவர்கள் விஸ்வகர்மா ஜெயந்தியை கொண்டாடுகின்றனர்.
ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் பெரிய கட்டிடங்கள் கட்டப்படும் இடங்களில், விஸ்வகர்மா புகைப்படம் அல்லது சிலை வைத்து கும்பிடுவது வழக்கம். கட்டிடம் கட்ட தொடங்கும் போது விஸ்வகர்மாவுக்கு சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.
கட்டிட கலைஞர்கள், பொறியியலாளர்கள், சிற்பிகள், தச்சர்கள், இயந்திர வல்லுநர்கள், கொல்லர்கள்,குயவர்கள், கைவினைக் கலைஞர்கள் தங்களின் இருப்பிடங்களில் நேர்மறை சக்தி அதிகரிக்க விஸ்வகர்மாவை வணங்குகின்றனர். தொழிற்சாலைகள், ஆலைகள், பட்டறைகளில் விஸ்வகர்மா சிலை அமைத்து சிறப்பு பூஜை நடத்துகின்றனர். தங்கள் வீடுகள் மற்றும் தொழில் வணிகம் சிறப்படைய விஸ்வகர்மாவை வணங்குகின்றனர்.












Click it and Unblock the Notifications