Visuvavasu: தமிழ்ப் புத்தாண்டு! பிறந்தது விசுவாவசு! தப்பித் தவறியும் இந்த விஷயங்களை செய்யவே கூடாது!
சென்னை: தமிழ்ப் புத்தாண்டு தினமான இன்று விசுவாவசு ஆண்டு பிறந்துள்ளது. இன்றைய தினம் எதை செய்யலாம், எதை செய்யக் கூடாது என்பதை பார்க்கலாம். நேற்றுடன் குரோதி வருடம் நிறைவுற்றது.
ஆங்கில புத்தாண்டை விட தமிழ் புத்தாண்டு உலகெங்கும் உள்ள தமிழ் சமூக மக்களால் கொண்டாடப்படுகிறது. இது தமிழ் நாட்காட்டி ஆண்டின் தொடக்கமாகும். இந்த நாளில் நல்ல விஷயங்களை தொடங்கினால் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும்.

இந்த தமிழ்ப் புத்தாண்டில்தான் பிரம்மதேவர் பிரபஞ்சத்தை படைத்தார் என சொல்லப்படுகிறது. அமைதியையும் செழிப்பையும் கொண்டு வர இந்திரனும் இந்த நாளில்தான் பூமிக்கு வந்தாராம். இப்படிப்பட்ட சித்திரை வருடபிறப்பில் வீடுகளைச் சுத்தம் செய்து மாகோலமிட்டு இறைவனை வழிபட வேண்டும்.
இந்த நாளில் தங்களிடம் இருந்தால் புத்தாடை அணியலாம். இல்லாவிட்டால் பிரச்சினை இல்லை. வீட்டில் பூஜை அறையை சுத்தம் செய்து காலையில் கனி காணுதல் நடைபெற்றது. அதாவது நகை, பணம், அரிசி, துவரம் பருப்பு, வெற்றிலை பாக்கு, மஞ்சள் குங்குமம் உள்ளிட்ட மங்களகரமான பொருட்களை கண்ணாடியில் பார்ப்பதுதான் கனி காணுதல்.
புத்தாண்டு தொடக்கத்தின் போது நல்ல செயல்களை செய்தால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும் என்கிறார்கள். இதற்காகத்தான் தூங்கி எழுந்ததும் மங்களகரமான பொருட்களில் கண் விழித்தல் நலம் என்கிறார்கள்.
இந்த நன்னாளில் செய்யக் கூடாதவை எவை என்பதை பார்க்கலாம். புத்தாண்டு தினத்தில் சுத்தம் செய்தல் அல்லது ஒட்டடை அடித்தலை தவிர்க்க வேண்டும். இது அதிர்ஷ்டத்தையும் சேர்த்தே துடைத்துவிடும் என்பார்கள்.
அது போல் புத்தாண்டு நாளில் குப்பைகளை வெளியே கொண்டு போய் கொட்டுவதையும் தவிர்க்க வேண்டும். எதுவாக இருந்தாலும் புத்தாண்டு முடிந்து நாளைய தினம் பார்த்துக் கொள்ளலாம். புத்தாண்டில் அதிகபடியான பணவிரயத்தை தவிர்த்தால் நல்லது. இல்லாவிட்டால் ஆண்டு முழுவதும் ஏதாவது ஒரு செலவை இழுத்துவிடும்.
தமிழ் புத்தாண்டு அன்று யாருடனும் சண்டையிடுதல் கூடாது. அபசகுணமான வார்த்தைகளையோ தகாத வார்த்தைகளையோ பயன்படுத்த கூடாது. இது எதிர்மறை சக்தியைக் கொண்டு வரும் என்கிறார்கள். அது போல் அசைவம் சாப்பிடுதல், போதை பொருட்களான மது, சிகரெட் உள்ளிட்டவைகளை பயன்படுத்தவே கூடாது.
புத்தாண்டு தினத்தில் யாருக்காவது தானம் செய்யலாம். கோயில்களுக்கு செல்லலாம். நல்லவற்றை காதில் கேட்கலாம். நல்லதை பார்க்கலாம். தேவையில்லாத விஷயங்களை தவிர்த்தல் நலம்.
தமிழ்ப் புத்தாண்டுக்கு வழிபட வேண்டிய நேரம் என பார்த்தால் காலை 9.10 மணி முதல் 10.20 மணி வரையும், பகல் 12.30 மணி முதல் 1.30 மணி வரையும் செய்யலாம். மாலையில் படைக்கும் வழக்கம் இருப்பவர்கள் மாலை 6 மணிக்கு மேல் செய்யலாம்.
தமிழ் ஆண்டுகள் 60 ஆண்டுகளை கொண்டது. பிரபவ ஆண்டில் தொடங்கி அட்சய ஆண்டில் முடிவடையும். மீண்டும் பிரபவ ஆண்டு தொடங்க 60 ஆண்டுகளாகும். தற்போது அந்த வரிசையில் 39ஆவது ஆண்டான விசுவாவசு பிறந்துள்ளது. இந்த ஆண்டு சூரிய பகவானின் ஆதிக்கம் பெற்ற ஆண்டாக விளங்குகிறது.












Click it and Unblock the Notifications