நவராத்திரி 2ஆம் நாள் இன்று! மகிஷாசுரனை வதம் செய்த ராஜராஜேஸ்வரி! பூஜை செய்வது எப்படி?
சென்னை: நவராத்திரி இரண்டாம் நாளான இன்று என்னவெல்லாம் செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம். இன்று ராஜராஜேஸ்வரிக்கு உகந்த நாள். அது போல் கவுமாரி என்ற பெயரிலும் அம்பிகையை வழிபடலாம். இந்த நாளில் என்னென்ன நைவேத்தியம் செய்து அம்பாளை வழிபடலாம் என்பதை பார்க்கலாம்.
நவராத்திரி நேற்று முதல் 9 நாட்கள் வரை கொண்டாடப்படுகிறது. இந்த நவராத்திரி அன்று வீட்டில் கொலு வைத்து 9நாட்களும் அம்பாளை போற்றி வழிபடுவது வழக்கம். நவராத்தியின் முதல் நாள் நேற்று தொடங்கியது. அதாவது மகாளய அமாவாசைக்கு அடுத்த நாள் தொடங்கியது.

பராசக்தியின் வெவ்வேறு அவதாரத்தை வழிபடுவதுதான் இந்த நவராத்திரியாகும். இது முழுக்க முழுக்க பெண்கள், பெண் குழந்தைகளுக்கானது.
இன்றைய தினம் நவராத்திரி 2ஆம் நாள் கொண்டாடப்படும் நிலையில் அம்மனுக்கு பச்சை நிறத்தில் அலங்கரிக்க வேண்டும். மஞ்சள் நிறம் செழிப்பு, வளர்ச்சி, மன அமைதியை குறிக்கும். வாழ்வின் புதிய தொடக்கங்களையும் பச்சை நிறம் குறிக்கும்.
மஞ்சள் நிற ஆடையில் ராஜராஜேஸ்வரி அம்பாளுக்கு பூஜை செய்தால் உங்கள் வாழ்வில் நிம்மதியும் செல்வமும் பெருகும். மாலை முதல் இரவு 9.30 மணி வரை இந்த வழிபாட்டை நடத்தி முடித்துவிட வேண்டும். இந்த வழிப்பாட்டிற்கு வேர்க்கடலை சுண்டல், புளி சாதம், லட்டு, மாம்பழம் போன்ற பொருட்களை நெய்வேத்தியமாக வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.
வயதுக்கு வராத சிறுமிகளை கவுமாரி வடிவமாக வணங்க வேண்டும். அவர்களுக்கு பாத பூஜை செய்து மங்கள பொருட்களை அவரவர் வசதிக்கேற்ப கொடுக்க வேண்டும். மகிஷாசுரனை வதம் செய்த நாள் இந்த இரண்டாவது நாள்! மகிஷாசுரனை தனது சூலத்தால் வதம் செய்தாள். இதனால் தேவர்களும் ரிஷிகளும் மகிஷாசுரமர்த்தினிக்கு நன்றி தெரிவித்தனர்.
இதுகுறித்து ஆத்ம ஞான மையம் என்ற யூடியூப் சேனலில் ஆன்மீக சொற்பொழிவாளர் மங்கையர்க்கரசி கூறியிருப்பதாவது: ராஜராஜேஸ்வரியை வழிபடுவதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்? இந்த ஜெகன்மாதாவை வழிபடும் போது எந்த விதமான மந்திர சித்திகளை நினைத்து வழிபடுகிறார்களோ அதை அவர்கள் பெறுவார்கள். அவர்களை இன்னொருவரால் மந்திரத்தில் வசியம் செய்ய முடியாது. ராஜ ராஜேஸ்வரியை வழிபடுவோரை பில்லி, சூனியம், ஏவலால் கட்டுப்படுத்தவே முடியாது.
ராஜ ராஜேஸ்வரியை வழிபட்டால் அஷ்ட லட்சுமிகளும் நம் வீட்டு வாசலில் வந்து அருள்புரிவார்கள். ராஜ ராஜேஸ்வரியை வழிபட்டால் தோல்வி என்பதே கிடையாது, அரச போக வாழ்க்கை கிடைக்கும். அரசர்களும் அவர்களுடைய பேச்சுக்கு தலையாட்டுவார்கள். அதனால்தான் அவள் அரசருக்கு எல்லாம் அரசி.
வாழ்க்கை மிகவும் போராட்டமாக இருந்தால் இந்த ராஜ ராஜேஸ்வரியை 48 நாட்கள் வழிபாடு செய்தால் போராட்டமான வாழ்க்கை பூந்தோட்டமாக மாறும். யுத்தத்திற்கு புறப்படும் ரூபமாக இந்த ரூபம் சொல்லப்படுகிறது. இந்த நாளில் முல்லை பூவை வைத்து வழிபட வேண்டும். இன்றைய தினம் பாட வேண்டிய ராகம்- கல்யாணி ராகம் ஆகும். இன்றைய தினம் மாவினால் கட்டம் வகையான கோலத்தை போட வேண்டும்.
கொலு வைத்திருப்போர் காலை, மாலை இரு வேளைகளும் பூஜை செய்ய வேண்டும். அதாவது காலை 9 மணிக்குள், மாலை 6 மணிக்கு மேல். அது போல் கொலு வைக்காதவர்கள், மாலை 6 மணிக்கு மேல், அல்லது காலை 9 மணிக்குள் பூஜை செய்ய வேண்டும். இதனால் நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் பெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications