புரட்டாசி மாதத்தில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? சாஸ்திரங்கள் சொல்வதென்ன?
சென்னை: புண்ணியம் தரும் புரட்டாசி மாதம் தெய்வீக வழிபாட்டிற்கு உரியது. இந்த மாதத்தில் திருமணம் செய்யலாமா வேண்டாமா என்ற கேள்வி எழுகிறது. வீடு கிரகப்பிரவேசம் உள்ளிட்ட என்னென்ன சுபகாரியங்களை செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்று பார்க்கலாம்.
சுப காரியங்களை சில குறிப்பிட்ட மாதங்களில் மட்டுமே செய்ய வேண்டும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சித்திரை, வைகாசி, ஆவணி, தை, பங்குனி ஆகிய மாதங்களில் திருமணம் செய்யலாம். இந்த மாதத்தில் திருமணம் செய்தால் மணமக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள் குழந்தை பாக்கியம் நன்றாக அமையும்.

சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி ஆகிய மாதங்களில் வீடு கட்டும் வேலையைத் தொடங்கினால் தடையில்லாமல் விரைவாக முடியும். சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய மாதங்களில் கிணறு வெட்டினால் அது என்றும் வற்றாது. தமிழ் மாதங்களில் ஆனி, ஆடி, புரட்டாசி, மார்கழி, பங்குனி ஆகிய மாதங்களில் வீடு வாங்கவும் கூடாது. வீடு குடியேறவும் கூடாது என்று முன்னோர்கள் வகுத்துக் கொடுத்துள்ளனர்.
புரட்டாசி மாதம் மகாளய பட்சம் முன்னோர்களுக்காக அனுசரிக்கப்படுகிறது. அதே போல பெருமாளுக்கு விரதம் இருக்கும் மாதம், நவராத்திரி பண்டிகைகள் கொண்டாடப்படும் மாதம் என்பதால் இந்த மாதத்தில் திருமணம் உள்ளிட்ட பண்டிகைகளை கொண்டாடுவதை தவிர்த்து விட்டனர்.
இந்துக்கள் தவிர பிற மதத்தினர் திருமணம் செய்கின்றனர். ஆனால் தமிழ் இந்து குடும்பத்தினர் புரட்டாசியில் திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்கள் செய்வதில்லை. பொதுவாக எந்த சுபகாரியங்களையும் வைகாசி மற்றும் கார்த்திகை மாதத்தில் செய்யலாம். அது தடையின்றி மங்களகரமாக நடைபெறும். ஆடி, புரட்டாசி, மார்கழி ஆகிய மாதங்களில் சுபகாரியங்கள் செய்யக்கூடாது.
புரட்டாசியில் வீடு கட்ட வாஸ்து செய்யக்கூடாது. வாஸ்து பகவான் உறங்கிக்கொண்டிருப்பார். அவர் சில மாதங்கள் மட்டுமே விழித்திருப்பார். அந்த மாதத்தில் வாஸ்து பூஜை செய்தால் மட்டுமே தடைகள் இன்றி வீடு கட்ட முடியும். அதேபோல இந்த மாதத்தில் வீடு பால்காய்ச்சி குடி போகக்கூடாது. வாடகை வீடாக இருந்தாலும் வீடு குடிபோகக் கூடாது.
கர்ப்பிணி பெண்களுக்கு ஒற்றைப்படை மாதமாக புரட்டாசி வரும் பட்சத்தில் வளைகாப்பு நடத்தலாம். அது ஒருநாள் பண்டிகைதான் முடிந்து விடும். அதேபோல புரட்டாசி மாதம் பிறந்தவர்களுக்கு அறுபதாம் கல்யாணம், எண்பதாம் திருமணம் இதனால் பாதிப்பு எதுவும் வருவதில்லை. அவசியமானால் சில சுபகாரியங்களை மட்டும் செய்யலாம். இந்த மாதம் திருமணம், சாந்தி முகூர்த்தத்திற்கு நல்ல நாட்கள் இல்லை.
புரட்டாசி மாதத்தில் நவராத்திரி பண்டிகை நாளின் கடைசி நாளான விஜய தசமியன்று கல்வி கற்றுக்கொள்ளத் தொடங்கினால் நல்ல கல்வியறிவு கிடைக்கும். வாழ்க்கைக்கும் பயன்படும். அதேபோல விஜயதசமியன்று குழந்தைகளுக்கு புதிய விசயங்களை கற்றுக்கொடுக்கத் தொடங்கலாம். புதிய தொழில் தொடங்கலாம் மேன்மேலும் வளரும். குழந்தைகளுக்கு மொட்டை அடித்து காது குத்தலாம். புராட்டாசி மாதம் முன்னோர் கடன் செய்ய ஏற்ற மாதம் என்பதால் தில ஹோமம் செய்யலாம்.












Click it and Unblock the Notifications