40 ஆண்டுகால போராட்டம்... இலங்கை தமிழருக்கு இந்திய குடியுரிமை... ஈழத் தமிழர் நாளேடு வீரகேசரி பாராட்டு
சென்னை: ஈழத் தமிழர்கள் மேம்பாட்டுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள நலத் திட்ட அறிவிப்புகள் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது என இலங்கையில் இருந்து வெளியாகும் வீரகேசரி நாளேட்டின் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீரகேசரியின் தலையங்க விவரம்:
தமிழகத்தில் அகதிகளாக வாழும் இலங்கை தமிழர்களின் வாழ்வாதார நலன்களை மேம்படுத்துவதற்கு 317 கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டினை அறிவித்துள்ள தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு குடியுரிமை வழங்குவது குறித்து ஆராய்வதற்கு ஆலோசனை குழுவொன்றும் அமைக்கப்படும் என்றும் தெரிவித்திருக்கின்றார். தமிழக முதல்வரின் அறிவிப்புக்கள் இலங்கை தமிழ் அகதிகளின் வீடுகள், உட்கட்டமைப்பு வசதிகள், கல்வி, வேலைவாய்ப்பு, , வாழ்க்கைத் திறன் மேம்பாடு ஆகிய விடயங்களை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது.

கடந்த 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தமிழக சட்டசபையில் 110 ஆவது பிரிவின் கீழ் அறிவிப்புக்களை வெளியிட்ட மு.க. ஸ்டாலின் இந்த விடயங்களை தெரிவித்திருக்கின்றார் .
சட்டசபையில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் கடல் நீர் ஏன் உப்பாக இருக்கின்றது என்றால் கடல் கடந்து வாழும் தமிழர்களின் கண்ணீரால் என்று எழுதினார் பேரறிஞர் அண்ணா. அவருடைய வழிநடக்கக்கூடிய இந்த அரசின் சார்பில், கடல் கடந்து வந்த இலங்கை தமிழ் மக்களின் கண்ணீரை துடைக்கக்கூடிய வகையில் சில அறிவிப்புக்களை வெளியிட விரும்புகின்றேன். என்று கூறியே இலங்கை தமிழ் அகதிகளுக்கான நல வாழ்வுத் திட்டங்களை முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
இலங்கையில் நடைபெற்ற மூன்று தசாப்தகால யுத்தம் காரணமாக வடக்கு,, கிழக்கு தமிழ் மக்கள் தொடர்ந்தும் அகதிகளாக புலம்பெயரும் நிலைமை தொடர்கதையாக மாறியிருந்தது. இந்த நிலையில் தமிழகத்திற்கும் 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் அகதிகளாக சென்றிருந்தனர் . இவர்களில் 18 ஆயிரத்து 944 குடும்பங்களைச் சேர்ந்த 58 ஆயிரத்து 822 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். . இவர்கள் தமிழகத்தில் 29 மாவட்டங்களில் அமைந்துள்ள 2 சிறப்பு முகாம்கள் உட்பட 108 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் . இவர்களை விட 13 ஆயிரத்து 540 குடும்பங்களைச் சேர்ந்த 34 ஆயிரத்து 87 பேர் போலீஸ் நிலையங்களில் பதிவு செய்த பின்னர் வெளிப்பகுதிகளில் வசித்து வருகின்றனர்.
இவ்வாறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள அகதிகள் பல்வேறு பிரச்சினைகளுக்கும் குறைபாடுகளுக்கும் உட்பட்டே வசித்து வருகின்றனர். அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலேயே தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் இந்த அறிவிப்பானது வெளிவந்துள்ளது .
முகாம்களில் மிகவும் பழுதடைந்த நிலையில் 7 ஆயிரத்து 469 வீடுகள் உள்ளதாகவும் அவற்றை புதிதாக அமைப்பதற்கு 231 கோடியே 34 இலட்சம் ஒதுக்கப்படுவதாகவும் இதில் முதல் கட்டமாக 3510 புதிய வீடுகள் கட்டுவதற்கு இந்த ஆண்டு 108 கோடியே 81 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார் .
இதனைவிட மின்சார வசதி, மலசலகூட வசதி, குடிநீர் வசதி உள்ளிட்டவற்றை மேம்படுத்த 30 கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் ஆண்டுதோறும் இதுபோன்ற வசதிகளை மேற்கொள்ள 5 கோடி ரூபா ஒதுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேபோன்றே கல்வி, வேலைவாய்ப்பு,, முகாம்வாழ் இலங்கை தமிழர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு அதிகரிப்பு உட்பட பல திட்டங்களையும் அவர் அறிமுகப்படுத்தியிருக்கின்றார் .
முதலமைச்சரின் இந்த அறிவிப்பானது தமிழகம் வாழ் இலங்கைத் தமிழ் அகதிகளை பொறுத்தவரையில் ஒரு வரப்பிரசாதமாகவே காணப்படுகின்றது . அவர்களது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் வாழ்வாதார வசதிகளை முன்னேற்றவும் தி.மு.க. அரசாங்கம் எடுத்துள்ள இந்த நடவடிக்கை பாராட்டப்பட வேண்டிய விடயமாகும் .
தமிழக முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு இலங்கையைச் சேர்ந்த தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர் . ஈ.பி.டி.பி.யின் செயலாளரும். கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன் , தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவர் செந்தில் தொண்டமான் , தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்கினேஸ்வரன் உட்பட பலரும் தமிழக முதலமைச்சருக்கு தமது பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்திருந்தனர். .
''தான் ஆடாவிட்டாலும் தசையாடும்'' என்பது தமிழக முதலமைச்சரினால் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ள து. முதலமைச்சரின் அறிவிப்புக்கு இலங்கை தமிழ் மக்கள் சார்பில் நன்றிகளை தெரிவிப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார் .
இதேபோன்று கடல்கடந்து வாழும் தமிழர்கள் மீதும் கரிசனை கொண்ட அரசு என்ற முறையில் தமிழ்நாட்டில் 108 முகாம்களிலும் முகாம்களுக்கு வெளியே சுயமாகவும் வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய குடிபெயர்ந்த இலங்கை தமிழர்களுக்கு 300 கோடி ரூபாவிற்கும் மேல் நிவாரணங்களை தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளமை பாராட்டத்தக்கது என்று பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்திருக்கின்றார் .
இதேபோன்றே முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தமிழக முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துள்ளதுடன் இலங்கை தமிழ் மக்களின் அரசியல், சமூக , பொருளாதார அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கான ஆய்வுகள் உபாயங்கள் ஆகியவற்றை மேற்கொள்வதற்கு தமிழ் நாட்டின் புத்திஜீவிகள் , கல்விமான்கள் , செயற்பாட்டாளர்கள் ஆகியோரைக் கொண்ட கட்சிசாரா சிந்தனை மையமொன்றை அரசாங்கத்தின் ஒரு நிறுவனமாக தமிழக முதலமைச்சர் நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கின்றார். .
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவர் செந்தில் தொண்டமானும் இலங்கை தமிழர் விடயத்தில் அக்கறை செலுத்திய தமிழக முதலமைச்சருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நன்றிகளை தெரிவித்திருக்கின்றார் . இதனைவிட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் கடந்த புதன்கிழமை தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்து கலந்துரையாடியதுடன் இந்த விடயத்திற்கும் நன்றி தெரிவித்துள்ளார் .
இவ்வாறு முதலமைச்சரின் அறிவிப்புக்கு இலங்கை தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்து வருகின்றன. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. அரசாங்கம் தமிழகத்தில் பதவியேற்றதையடுத்து சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறைக்கென புதிதாக அமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார். . அந்ததுறை அமைச்சரான கே.எஸ். மஸ்தானை திருச்சி சிறப்பு முகாமிலுள்ள ஈழத்தமிழர்களின் உறவினர்கள் தமிழ் பேரரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் வ. கெளதமன் தலைமையில் சில தினங்களுக்கு முன்னர் சந்தித்து பேசியிருந்தனர் . இதன்போது சிறப்பு முகாம்களில் உள்ள அகதிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக அமைச்சர் கேட்டறிந்ததுடன் சந்திப்பில் பங்கேற்றவர்களுக்கு தனது வீட்டில் உணவளித்து கெளரவித்திருக்கின்றார் .
இவ்வாறு தமிழக முதலமைச்சர் மற்றும் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாட்டுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் ஆகியோரின் செயற்பாடுகள் தமிழகம் வாழ் இலங்கை தமிழ் அகதிகளுக்கு நம்பிக்கையூட்டும் செயற்பாடுகளாக அமைந்திருக்கின்றன. .
உண்மையிலேயே 40 வருட காலமாக அகதிகளாக இடம்பெயர்ந்து அல்லல்படும் இலங்கை தமிழ் மக்களுக்கு இனியாவது விடிவு ஏற்படவேண்டும் . அங்கு வாழும் ஈழத்தமிழர்கள் இந்திய பிரஜாவுரிமையை பெறவிரும்பினால் அவர்களுக்கு அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவேண்டும் . இதற்கென நியமிக்கப்படவுள்ள விசேட ஆலோசனைக்குழு இந்த விவகாரத்தில் அக்கறை காட்டவேண்டும் .
தமிழக முதலமைச்சரின் இலங்கை தமிழர்களின் நலன்சார் செயற்பாடுகள் மேலும் தொடரவேண்டும் என்று வலியுறுத்த விரும்புகின்றோம். . இவ்வாறு வீரகேசரி தலையங்கத்தில் எழுதப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications