உஷார்.. ஒரே மாதத்தில் இவ்வளவு வாட்ஸ்அப் அக்கவுண்ட்ஸ் காலி.. என்ன காரணம்? இப்படி மட்டும் செய்யாதீங்க!
சென்னை : வாட்ஸ் அப் நிறுவனம், ஒரே மாதத்தில் இந்தியாவில் மட்டும் 74 லட்சம் அக்கவுண்ட்களை முடக்கியுள்ளது. ஒரே மெசேஜை ஏராளமானோருக்கு ஃபார்வர்டு செய்வது, பாலியல் தொல்லை கொடுப்பது உள்ளிட்ட காரணங்களுக்காக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இன்று உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான மொபைல் போன் யூசர்கள் பயன்படுத்தும் இன்ஸ்டண்ட் மெசேஜிங் பிளாட்ஃபார்ம் வாட்ஸ்அப். இது மிக முக்கியமான தகவல் தொடர்பு தளம் என்பதால் சாமானியர்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவருமே வாட்ஸ் அப் செயலியை உபயோகிக்கின்றனர்.
வாட்ஸ் அப் : புதிதாக போன் வாங்கியதுமே பலரும் இன்ஸ்டால் செய்யும் முதல் செயலியே வாட்ஸ் அப் ஆகத்தான் இருக்கும். அந்த அளவு முக்கியத்துவம் பெற்றிருக்கிறது வாட்ஸ்அப் செயலி. உலகம் முழுவதும் பல கோடி வாடிக்கையாளர்களை கொண்டிருக்கும் வாட்ஸ்அப், பயனாளர்களின் பாதுகாப்புக்காக அடிக்கடி பல்வேறு சிறப்பம்சங்களை அப்டேட் செய்து வருகிறது.
மெட்டா நிறுவனத்திற்கு கீழ் இயங்கும் வாட்ஸ்அப் நிறுவனம், தங்களின் கொள்கைகளுக்கு மாறாகப் பயன்படுத்தப்பட்ட கணக்குகளை முடக்கி வருகிறது. அந்த வகையில் ஏப்ரல் மாதத்தில் மட்டும், அதுவும் இந்தியாவில் மட்டும் 74 லட்சத்துக்கும் அதிகமான யூசர் அக்கவுண்ட்களை முடக்கியுள்ளது.
யூசர்களின் பாதுகாப்புக்காக வாட்ஸ்அப் பல தொழில்நுட்பங்களைக் கொண்டுள்ளது. அதே சமயம், சைபர் மோசடிகளும் அதிகரித்து வருவதால், பாதுகாப்பு அம்சங்களும் அவ்வப்போது பலப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், வாட்ஸ்அப் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மட்டும், சுமார் 74 லட்சத்துக்கும் அதிகமான கணக்குகளை தடை செய்துள்ளது.
ஒரே மாதத்தில் : அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகளின் படி, 500 மில்லியன் பயனாளர்களை கொண்ட டிஜிட்டல் மற்றும் சமூக வலைதள நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் மேற்கொண்ட நடவடிக்கைகளை அறிக்கையாக வெளியிட வேண்டும். அதன்படி, மாதந்தோறும் வாட்ஸ் அப் இந்தியா நிறுவனம் விதிமுறைகளை மீறிச் செயல்படும் கணக்குகளை முடக்கி அதன் புள்ளி விவரங்களை வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில், ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை, வாட்ஸ்அப் கணக்குகளின் மூலம் கொள்கை விதிமீறல்களில் ஈடுபட்ட 74 லட்சத்து 52 ஆயிரத்து 500 கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக வாட்ஸ் அப் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட காரணங்கள்:
1. சொற்ப இடைவெளியில் செய்திகளை மொத்தமாக ஃபார்வர்டு செய்வது
2. வாட்ஸ் அப் குரூப்பில் சம்பந்தப்பட்ட நபர்களின் அனுமதியின்றி அவர்களின் காண்டாக்ட்களை சேர்ப்பது
3. தவறான நடத்தையில் ஈடுபடுவதாக புகார் அளிக்கப்பட்டால்.
4. மறைமுகமான செய்திகளை அனுப்புவது அல்லது சட்டவிரோத குழுவின் ஒரு பகுதியாக இருப்பது
5. தவறான, பொய்யான செய்திகளை மொத்தமாக அனுப்புதல்
6. அதிகாரப்பூர்வமான வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தாமல் போலியான ஆப்பை பயன்படுத்துவது
7. தெரியாத எண்களுக்கு அதிகமாக விளம்பர செய்திகளை அனுப்புவது
8. சாதி, மத, இன மோதல்கள், வன்முறைச் சம்பவங்கள் ஏற்படுத்துபவையாக இருக்கும் கணக்குகள்
9. பாலியல் ரீதியான தொல்லைகள் கொடுக்கும் கணக்குகள்
உள்ளிட்ட காரணங்களுக்காக வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்படுகின்றன.
ஏற்கனவே வாட்ஸ்அப் என்கிரிப்ட் செய்யப்பட்ட பாதுகாப்பு அம்சங்களை வழங்கி வருகிறது. தனிப்பட்ட செய்திகளை ஸ்கேமர்கள் மற்றும் மோசடி செய்பவர்களிடமிருந்து பாதுகாக்க, எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. போலி, ஸ்பேம், உள்ளிட்டவற்றை கண்காணித்து முடக்கும் நடவடிக்கையும் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது.
எப்படி புகார் செய்வது? : உங்களுக்கும் யாராவது வாட்ஸ்-அப்பில் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தால், உங்கள் விருப்பத்தை மீறி தொடர்ச்சியாக விளம்பரங்களை அனுப்புவது, தொல்லை கொடுப்பது என இருந்தால் வாட்ஸ்அப் மூலம் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யலாம்.

அதாவது, வாட்ஸ் அப் செயலில் இருக்கும் ஹெல்ப் செண்டர் மூலம், உங்களது பிரச்சனைகளுக்கான தீர்வுகளைக் காணலாம். அல்லது [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு புகார்களை அனுப்பலாம்.
நீங்கள் ஒரு வாட்ஸ்அப் கணக்கையோ அல்லது குழுவை பற்றியோ புகார் அளித்தால், அந்த கணக்கு அல்லது குழுவில் இருந்து புகார் அளித்த யூசரின் கணக்குக்கு அனுப்பப்பட்ட கடைசி ஐந்து செய்திகளை வாட்ஸ்அப் நிறுவனம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
தனிப்பட்ட கணக்கு மீது புகாராக இல்லாமல், வாட்ஸ்அப்பில் அனுப்பப்படும் ஒவ்வொரு செய்தி, புகைப்படங்கள், வீடியோக்களையும் 'Report' என்ற ஆப்ஷன் மூலம் புகார் செய்யலாம்.












Click it and Unblock the Notifications