3 நாள் செல்போனை யூஸ் செய்யாமல் இருந்தாலே.. மூளையில் ஏற்படும் திடீர் மாற்றம்! புதிய ஆய்வில் பகீர்
மியூனிக்: இப்போது செல்போன் என்பது கிட்டதட்ட நமக்கு 11ஆவது விரலைப் போலவே ஆகிவிட்டது. செல்போன் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது என்ற நிலையே இருக்கிறது. இதற்கிடையே செல்போனுக்கு நாம் எந்தளவுக்கு அடிமையாகிவிட்டோம்.. அது போதை பழக்கத்திற்கு இணையாக என்ன மாதிரியான தாக்கங்களை நமது உடலில் ஏற்படுத்துகிறது என்பதை விளக்கும் வகையிலான ஆய்வு முடிவு இப்போது வெளியாகியுள்ளது.
இந்த காலத்தில் நம்மில் பலரும் செல்போனுக்கு அடிமையாகிவிட்டோம் என்றே சொல்லலாம். பாத்ரூம் சென்றாலும் கூட பலரும் செல்போன் உடனேயே செல்கிறார்கள். அந்தளவுக்கு நாம் செல்போனுக்கு அடிமையாகிவிட்டோம்.

இதற்கிடையே செல்போன் பயன்பாடு குறித்த சமீபத்திய ஆய்வில் அதிர்ச்சி தரும் பல விஷயங்கள் தெரிய வந்துள்ளது. அதாவது வெறும் மூன்று நாட்கள் மட்டும் ஸ்மார்ட்போனை பயன்படுத்தாமல் இருந்தாலே அது நமது மூளையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
புதிய ஆய்வு
ஜெர்மனியில் உள்ள ஹைடெல்பெர்க் பல்கலைக்கழகம் மற்றும் கொலோன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இணைந்து இந்த ஆய்வை நடத்தியுள்ளனர். 18 முதல் 30 வயதுடைய மொத்தம் 25 இளைஞர்கள் ஆய்வில் பங்கேற்றனர். அவர்களிடம் 72 மணி நேரம் செல்போனை பயன்படுத்த வேண்டாம் என ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அத்தியாவசியமாகத் தொடர்பு கொள்ள மட்டுமே செல்போன் வழங்கப்பட்டுள்ளது. மற்றபடி செல்போன் இல்லாமலேயே அவர்கள் தங்கள் தினசரி பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
இதில் பங்கேற்ற இளைஞர்களின் தலையில் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் பரிசோதனையில் பங்கேற்கும் முன்பும் பிறகும் ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது. மேலும், உளவியல் சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. செல்போனை பயன்படுத்தாமல் இருப்பது அவர்கள் உடல்நிலையில் என்ன மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை இதன் மூலம் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
போதைக்கு இணையான மாற்றம்
செல்போனை யூஸ் செய்யாமல் இருக்கும்போது போதை பழக்கம் தொடர்பான நரம்பு அமைப்புகளுடன் தொடர்புடைய மூளை செயல்பாட்டில் மாற்றம் ஏற்படுவதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், "ஸ்மார்ட்போன் பயன்பாட்டைக் குறைத்தால் என்ன நடக்கிறது என்பதைக் கண்டறிய இந்த ஆய்வை மேற்கொண்டோம். போதை பழக்கம் தொடர்பான நரம்பு அமைப்புகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது தெளிவாகத் தெரிகிறது" என்றார்.
மூளை செயல்பாடு
ஸ்கேன் செய்யும் போது ஸ்மார்ட்போன், படகுகள் மற்றும் பூக்கள் என பல்வேறு போட்டோக்களை காட்டியுள்ளனர். அப்போது மூளைகளின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதைக் கவனித்துள்ளனர். இந்த பரிசோதனைக்கு முன்பும் பின்பும் என இரண்டு முறையும் இந்த சோதனை நடத்தியுள்ளனர். அதில்தான் குறுகிய காலம் செல்போனை யூஸ் செய்யாமல் இருந்தாலே அது மூளைக்கு நன்மை தருவதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
ஆய்வு சொல்வது என்ன
நாம் செல்போனுக்கு எந்தளவுக்கு அடிமையாகவிட்டோம் என்பதையே இது காட்டுவதாக உள்ளது. இப்போது எங்குப் போனாலும் நாம் செல்போனும் கையுமாகவே இருக்கும் சூழலில், அது கிட்டதட்ட ஒரு போதை பழக்கம் போலவே ஆகிவிட்டது. இதன் காரணமாகவே தான் செல்போனை சில நாட்கள் மட்டும் பயன்படுத்தாமல் இருந்தாலே அதன் தாக்கம் மூளை வரை எதிரொலிக்கிறது.
ஸ்மார்ட்போன்களால் நமது வாழ்க்கை எளிமையாகிறது, பல வழிகளில் நமக்கு உதவுகிறது. அதேநேரம் அதை நாம் ஓவராக யூஸ் செய்தால் அதுவே நமக்கு எதிராகவும் கூட மாறுகிறது. கடந்த பல காலமாகவே வல்லுநர்கள் இதையே சொல்லி வருகிறார்கள். இதை நிரூபிக்கும் வகையிலேயே இந்த ஆய்வு அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications
