சாட்ஜிபிடி போச்சு.. இப்போ டீப்சீக் தான் உலகம் முழுக்க பேச்சு! அசால்ட்டாய் சம்பவம் செய்தது ஒரு பெண்!
பீஜிங்: தற்போது உலகம் முழுக்க பேச்சாக இருப்பது சீனா வெளியிட்டு இருந்த டீப்சீக் ஏஐ (Deepseek AI) பற்றி தான். மெட்டாவின் லாமா, ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி ஆகியவற்றை பின்னுக்கு தள்ளிவிட்டு தற்போது உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது டீப்சீக். இதற்கு பின்னணியில் இருப்பது லூவோ ஃபுலி என்ற பெண் தான் என்கின்றனர் டெக் வல்லுநர்கள்.
உலகம் முழுக்க சாட் ஜிபிடி, google-ன் ஜெமினி,சாம்சங் ஏஐ, மெட்டாவின் லாமா உள்ளிட்ட பல ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் மென்பொருள்கள் ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் நிலையில் தற்போது டெக் உலகில் புதிய புயலை கிளப்பியுள்ளது டீப்சீக் ஏஐ.

ஏற்கனவே அமெரிக்காவின் பல நிறுவனங்களை கலங்க வைத்த சீனா தான் இந்த புயலை ஏற்படுத்தியிருக்கிறது. டீப்சீக் வரவால் பல அமெரிக்க நிறுவனங்களின் பங்குகள் கடுமையான சரிவைச் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே டெக் உலகில் குறிப்பாக ஆர்டிஃபிசியல் இண்டெலிஜன்ஸ் துறையில் அமெரிக்க நிறுவனங்களே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், தற்போது சீனா களத்தில் குதித்துள்ளதோடு, எடுத்த எடுப்பிலேயே கடும் போட்டியையும் ஏற்படுத்தியுள்ளது. டெக் வர்த்தகத் துறையில் மிகப்பெரிய ஜாம்பவானாக வலம் வரும் கூகுள், மெட்டா போன்றவையே இதனால் கடும் சரிவைச் சந்தித்துள்ளன. காரணம் ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட் ஜிபிடி, google நிறுவனத்தின் ஜெமினி ஆகியவை பிரீமியம் முறையில் மட்டுமே கூடுதல் நவீன வசதிகளை தருகின்றன.
ஆனால் டீப்சீக் ஆர்1 அனைத்து விதமான நவீன வசதிகளையும் முற்றிலும் இலவசமாக வழங்குகிறது. அதே நேரத்தில் சாட்ஜிபிடி, ஜெமினியை விட டீப் சீக் அதிக செயல் திறனை கொண்டு இருக்கிறது. சாட்ஜிபிடியை உருவாக்க ஓபன் ஏஐ 100 மில்லியன் டாலரை செலவிட்டது. ஆனால் டீப்டீக் வெறும் 6 மில்லியன் டாலரை மட்டுமே கொண்டு அதனை உருவாக்கி இருக்கிறது. சாட்ஜிபிடியை தாண்டி ஆப்பிள் யூஎஸ் ஸ்டோர்களிலும் அதிகமாக டவுன்லோட் செய்யப்பட்டு வருகிறது.
இதனால் அமெரிக்க பங்குச்சந்தை கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் இதற்குப் பின்னணியில் இருப்பது ஒரு பெண் என்ற தகவல் வெளியாகி உள்ளது. டீப்சீக் சாட்பாட்டை உருவாக்கிய குழுவுக்கு தனித்துவமான ஆதரவை வழங்கியவர் லூவோ ஃபுலி. 29 வயதான இவர் ஏஐ தொழில்நுட்பத்தில் மிகச்சிறந்த மேதையாக சீனாவில் விளங்கி இருக்கிறார்.
டீப்சீக் வி-2 உருவாக்கத்தில் இவரது இயற்கை மொழி செயலாக்கம் முக்கிய பங்கு வகித்திருக்கிறது. நார்மல் பல்கலைக்கழகத்தில் பயின்ற அவர் கணினி அறிவியல் படித்திருக்கிறார். தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு ஏசிஎல் மாநாட்டில் எட்டு கட்டுரைகளை வெளியிட்டு பீக்கிங் பல்கலையில் கணக்கிட்டு மொழி இன்ஸ்டியூட்டில் இடம் பிடித்திருக்கிறார்.
ஏஐ தொழில்நுட்பத்தில் அசாத்திய திறமை கொண்ட லூவே ஃபுலியின் செயல்பாடுகளை கவனித்த அலிபாபா மற்றும் ஷொவ்மீயும் பணிக்கு அழைத்தது. தொடர்ந்து 2022 இல் டீப்சீக் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்த அவர் டீப்சீக் வீ-2 வடிவகத்தில் இயற்கை மொழி செயலாக்க நிபுணராக பங்கு வகித்திருக்கிறார், தற்போது உலகம் முழுவதும் டீப் சீக் பேசு பொருளாக மாறியதற்கு லூவோவின் செயல்பாடும் ஒரு முக்கிய காரணம் என்கின்றனர்.












Click it and Unblock the Notifications