28 நாட்கள் நரக வேதனை.. ஐடி செக்டரில் பேரிடி! கொத்தாக 8,000 பேரை வீட்டுக்கு அனுப்பும் டெக் ஜாம்பவான்!
நியூயார்க்: உலகின் முன்னணி சமூக வலைதளங்களான பேஸ்புக், வாட்ஸாப், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டா (Meta Platforms) நிறுவனம், தனது உலகளாவிய பணியாளர்களில் சுமார் 10 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, சுமார் 8,000 பணியாளர்களை மே 20ஆம் தேதி முதல் பணிநீக்கம் செய்யும் நடவடிக்கை தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் காரணமாக ஆயிரக்கணக்கான பணியாளர்கள் கடும் மனஅழுத்தத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. யார் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்ற தெளிவில்லாத நிலை காரணமாக, பலர் அச்சத்துடனும் பதட்டத்துடனும் நாட்களை கழித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த காத்திருப்பு காலத்தை சில பணியாளர்கள் "28 நாட்கள் நரக வேதனை" என்று கூறியுள்ளனர். இந்த பணிநீக்க நடவடிக்கை, செயற்கை நுண்ணறிவு துறையில் முன்னிலை பிடிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.

மெட்டா பணிநீக்கம்
குறிப்பாக, ஏஐ கட்டமைப்பு மேம்பாட்டிற்காக இந்த ஆண்டில் மட்டும் சுமார் 135 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்ய மெட்டா திட்டமிட்டுள்ளது. இதனுடன், புதிதாக நியமிக்க திட்டமிட்டிருந்த சுமார் 6,000 பணியாளர்களின் ஆட்சேர்ப்பும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் புதிய வேலை வாய்ப்புகளை எதிர்பார்த்தவர்களுக்கும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
8000 பேர்
பணிநீக்க அறிவிப்பு வெளியாகிய பின்னர், பணியாளர்களின் மனநிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. "அடுத்த ஒரு மாதம் எப்படிப் பணியில் கவனம் செலுத்துவது?" என்ற கேள்விக்கு, ஒரு பணியாளர் "நான் இப்போது ரெஸ்யூம் புதுப்பிப்பதிலேயே நேரத்தை செலவழிக்கிறேன்" என தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், "மே 20 வரை ஒவ்வொரு நொடியும் பயத்துடனே வாழ்கிறோம்" என மற்றொரு பணியாளர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலை, நிறுவனத்தின் பணியாளர்களுக்கு கடும் மன அழுத்தத்தை ஏற்படுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐடி துறை
2026ஆம் ஆண்டில் மட்டும் இது மெட்டா நிறுவனத்தின் மூன்றாவது பணிநீக்க நடவடிக்கையாகும். இதற்கு முன்பு ஜனவரி மாதத்தில், நிறுவனத்தின் Reality Labs பிரிவிலிருந்து சுமார் 1,500 பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து மார்ச் மாதத்தில் மேலும் 700 பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து நடைபெறும் இந்த பணிநீக்க நடவடிக்கைகள், நிறுவன பணியாளர்களிடையே அச்சத்தையும் நிச்சயமற்ற நிலையையும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏஐ முதலீடு
செயற்கை நுண்ணறிவு துறையில் வேகமான வளர்ச்சியை அடைவதற்காக, தனது வளங்களை முழுமையாக ஏஐ துறைக்குத் திருப்பும் முயற்சியில் மெட்டா தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாகவே பணிநீக்கமும், புதிய பணியாளர் ஆட்சேர்ப்பு ரத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர். மொத்தத்தில், ஏஐ வளர்ச்சியை முன்னிட்டு பெரிய அளவில் முதலீடு செய்யும் மெட்டாவின் முடிவு, உலகளாவிய தொழில்நுட்பத் துறையில் புதிய மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என்றும், அதே நேரத்தில் ஆயிரக்கணக்கான பணியாளர்களின் எதிர்காலம் குறித்து அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.














Click it and Unblock the Notifications