போன் நம்பரை மறைத்து வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பலாம்.. வருகிறது புதிய பாதுகாப்பு வசதி! யூசர் நேம் போதும்!
சென்னை: ஏதாவது தகவலை பகிர வேண்டும் என்பதற்காக பழக்கம் இல்லாத நபர்களுடன் வாட்ஸ் அப்பில் உரையாட வேண்டி இருக்கும். அதன் மூலம் அவர்களுக்கு நமது மொபைல் நம்பர் தெரிந்து விடுவது நமது பிரைவசியை பாதிக்கிறது. இதனை தவிர்க்க யூசர் நேம் முறையை அறிமுகப்படுத்துகிறது வாட்ஸ் அப்.
வாட்ஸ்அப் செயலி தொடங்கப்பட்டது முதல் அவ்வப்போது பல்வேறு அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. முதலில் மெசேஜிங் தளமாக மட்டும் இருந்த வாட்ஸ் அப், குரூப் சாட், வாய்ஸ் கால், வீடியோ கால், யுபிஐ பேமெண்ட் வசதி என அடுத்தடுத்த டெக் அப்டேட்களால் பயனர்களை ஈர்த்து, இன்றைக்கு உலகின் முன்னணி மெசஞ்சர் தளமாக உள்ளது. வாட்ஸ்அப் மெசஞ்சரை உலகம் முழுவதும் சுமார் 200 கோடி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

வாட்ஸ் அப் பயனர்களால் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட பிரைவசியை மேம்படுத்தும் வசதி தற்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மொபைல் எண்ணைப் பயன்படுத்தாமல், யூசர் நேம் மட்டும் பயன்படுத்தி மெசேஜ் அனுப்ப முடியும் என்ற வசதியை அறிமுகப்படுத்துகிறது வாட்ஸ் அப்.
நம்மில் பலரும் முன்பின் அறிமுகமில்லாத நபர்களிடம் நமது தொலைபேசி எண்ணை அவ்வளவு எளிதில் கொடுப்பதில்லை. தொலைபேசி எண்ணைக் கொடுத்தால், அதன் மூலம் எதிர்காலத்தில் சிக்கலைச் சந்திக்க வேண்டி வரும் என்ற அச்சம் இருக்கிறது. ஆனால், தற்போது வாட்ஸ்ஆப் அறிமுகம் செய்ய உள்ள 'யூசர் நேம்' வசதியால் இதுபோன்ற பிரச்சனைகள் வராது.
அதாவது, புதிதாக அறிமுகமாகும் நபர்களுடன் தொடர்பு கொள்ள விரும்பும் நபர்கள், தங்களது தொலைபேசி எண்ணுக்குப் பதிலாக யூசர் நேமை மட்டும் வழங்கினால் போதுமானது. அதேநேரம், ஒருவருக்கு யூசர் நேம் தெரிந்தால் மட்டும் மெசேஜ் அனுப்ப முடியாது. அறிமுகமில்லாத நபருடன் முதல்முறையாக பேச, யூசர் நேமுடன் அவர்கள் உருவாக்கி வைத்துள்ள பின் நம்பரையும் எண்டர் செய்ய வேண்டும்.
யூசர் நேமுடன் நான்கு இலக்க பின் நம்பரையும் உருவாக்க வேண்டும். அதேசமயம், ஏற்கனவே தொடர்பு கொண்டுள்ள ஒருவருடன் தனித்தனியாக பின் நம்பரை உள்ளிட வேண்டிய அவசியமில்லை. இருப்பினும் இந்த அம்சம் பயனர்களின் ஆப்ஷன் அடிப்படையில் இயங்கும் என தெரிகிறது.

இதன் மூலம் ரேண்டமாக நமக்கு யாரோ மற்றவர்கள் மெசேஜ் அனுப்புவது தடுக்கப்படும். பயனர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு முன்பின் அறிமுகமில்லாத நபர்களிடம் இருந்து வரும் செய்திகளைக் கட்டுப்படுத்த வாட்ஸ்ஆப் இந்த வசதியைக் கொண்டு வந்துள்ளது.
தற்போது இந்த அப்டேட், பரிசோதனையில் இருப்பதாகவும், விரைவில் பீட்டா பயனர்களுக்கு கிடைக்கும் என்றும், இந்த ஆண்டு இறுதியில் இந்த அம்சம் அனைத்து பயனர்களுக்கும் அறிமுகமாக வாய்ப்பு இருப்பதாகவும் வாட்ஸ் அப் பீட்டா இன்ஃபோ வலைப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
