ஐபோனில் அழைப்பு வரும்போது சில சமயம் 'Slide To Answer' வருவது ஏன் தெரியுமா?
சென்னை: ஐபோன் பயன்படுத்தும் பலருக்கு ஒரு பொதுவான சந்தேகம் இருக்கும். போன் லாக் செய்யப்பட்டிருக்கும் போது அழைப்பு வந்தால் 'Slide to Answer' (ஸ்லைடு செய்யும் வசதி) வருகிறது. ஆனால், போனை நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் போது (அன்லாக் செய்யப்படிருக்கும் போது) 'Accept' மற்றும் 'Decline' செய்ய இரண்டு பட்டன்கள் வருகின்றன. ஆப்பிள் நிறுவனம் ஏன் இந்த இரண்டு வித்தியாசமான முறைகளைப் பயன்படுத்துகிறது என்பதை மிக எளிமையாக இங்கு பார்ப்போம்.

தற்செயலான அழைப்புகளைத் தடுக்க
உங்கள் ஐபோன் பாக்கெட்டிலோ, பையிலோ அல்லது கையிலோ லாக் செய்யப்பட்ட நிலையில் இருக்கும்போது திரையில் தற்செயலாகத் தொடுதல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
இந்த நேரத்தில் சாதாரண 'Accept' பட்டன்கள் இருந்தால், பாக்கெட்டில் உரசும்போதே தெரியாமல் அழைப்பு ஏற்கப்படலாம் அல்லது நிராகரிக்கப்படலாம். இதனால் உங்களுக்குத் தேவையில்லாத அழைப்புகள் கூடத் தானாகப் பேசப்படலாம்.
இதற்குத் தீர்வாகவே ஆப்பிள் 'Slide to Answer' என்ற வசதியை வைத்துள்ளது. நாம் விரலால் திரையை இழுத்தால் மட்டுமே போன் அட்டெண்ட் ஆகும். பாக்கெட்டில் சும்மா உரசினால் போன் கனெக்ட் ஆகாது. இது தற்செயலாக நடக்கும் தவறுகளைத் தடுக்கிறது.
செய்யும் வேலை தடையின்றி தொடர
நீங்கள் போனில் டைப் செய்து கொண்டிருக்கலாம், கேம் விளையாடிக் கொண்டிருக்கலாம் அல்லது வீடியோ பார்த்துக் கொண்டிருக்கலாம். அந்த நேரத்தில் போன் ஏற்கனவே அன்லாக் செய்யப்பட்டு பயன்பாட்டில் இருக்கும்.
இந்த நேரத்தில் முழு திரையையும் மறைக்கும்படி பெரிய அளவில் அழைப்பு வந்தால், நீங்கள் செய்து கொண்டிருக்கும் வேலை பாதியிலேயே நின்றுவிடும். உதாரணமாக, கேம் விளையாடும் போது அது தானாக நின்றுவிடும்.
அதற்காகவே, ஆப்பிள் நிறுவனம் திரையின் மேல் பகுதியில் ஒரு சிறிய பேனர் (Banner) வடிவில் மட்டுமே அழைப்பைக் காட்டுகிறது. அதில் பச்சை மற்றும் சிவப்பு நிறத்தில் எளிதாகத் தொடும் வகையில் இரண்டு பட்டன்கள் இருக்கும்.
உங்கள் கைகள் ஏற்கனவே போன் திரையில் இருப்பதால், அந்தச் சிறிய பட்டனைத் தொட்டு உடனடியாக அழைப்பை ஏற்கவோ அல்லது நிராகரிக்கவோ முடியும். இதன் மூலம் நீங்கள் செய்து கொண்டிருக்கும் வேலை எந்த விதத்திலும் பாதிக்கப்படாது.
ஆப்பிளின் இந்த டிசைன் எதைக் காட்டுகிறது?
பயனர்கள் எந்தச் சூழ்நிலையில் போனைப் பயன்படுத்துகிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டு ஆப்பிள் நிறுவனம் இந்த எளிய டிசைனை வடிவமைத்துள்ளது. அடுத்த முறை உங்களுக்கு ஐபோனில் அழைப்பு வரும் போது, இந்த புத்திசாலித்தனமான மாற்றத்தை கவனித்துப் பாருங்கள்.












Click it and Unblock the Notifications