கியரை மாற்றிய விஜய்.. அஜித்துக்கு திருப்புமுனை! காலத்தை வென்ற பாடல்கள்! 1999ம் ஆண்டு தமிழ் சினிமா

Subscribe to Oneindia Tamil

சென்னை: 90-களின் காலகட்டம் என்பது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு பொற்காலம். ஸ்மார்ட்போன்கள், ஓடிடி (OTT) தளங்கள், சமூக வலைத்தள விமர்சனங்கள் என எதுவும் இல்லாத அந்த காலகட்டத்தில், தியேட்டருக்குச் சென்று படம் பார்ப்பது என்பது ஒரு குடும்ப திருவிழா. ஆடியோ கேசட்டுகளை வாங்கி Walkman மூலமாக பாடல்களைக் கேட்பது, சுவரொட்டிகளைப் (Posters) பார்த்து படத்தின் கதையை யூகிப்பது, தியேட்டரில் முதல் நாள் முதல் காட்சிக்கு முண்டியடித்து டிக்கெட் வாங்குவது என ஒவ்வொரு அனுபவமும் ஒரு தனி சுகம்.

அந்த வகையில், தமிழ் சினிமா வரலாற்றில் 1999-ஆம் ஆண்டு மிக முக்கியமான ஒரு மைல்கல். "மில்லினியத்தின்" விளிம்பில் நின்ற அந்த வருடம், வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பல காவியங்களை நமக்கு பரிசளித்தது. ரஜினியின் மாஸ், கமலின் விலகல் (அந்த ஆண்டு கமல் படம் வெளியாகவில்லை என்றாலும் அடுத்த ஆண்டுக்கான எதிர்பார்ப்பு), அஜித் - விஜய் என்ற இரு துருவங்களின் அசுர வளர்ச்சி, ஷங்கரின் பிரம்மாண்டம், ஏ.ஆர்.ரஹ்மானின் இசை ராஜ்ஜியம், விக்ரமின் மறுபிறவி என 1999-ல் நடந்த மேஜிக்குகள் கொஞ்சநஞ்சமல்ல.

அந்த வசந்த காலத்துக்குள் மீண்டும் ஒருமுறை பின்னோக்கிப் பயணிப்போம்!

movie tamil cinema 90s kids 90


சூறாவளியாக வந்த 'படையப்பா'

ஒரு மசாலா திரைப்படம் எப்படி இருக்க வேண்டும், வணிக ரீதியான மசாலா படம் என்றால் என்ன என்பதற்கான 'டெம்ப்ளேட்' படையப்பா. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த இப்படம் தமிழ் புத்தாண்டு வெளியீடாக வந்து திரையரங்குகளை துவம்சம் செய்தது.

சிவாஜி கணேசனின் கம்பீரம், ரஜினியின் ஸ்டைல், ரம்யா கிருஷ்ணனின் அசுரத்தனமான நடிப்பு என அனைத்தும் இந்த படத்திற்குப் பெரிய பலம். "வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் உன்னை விட்டுப் போகல" என்ற படையப்பாவின் வசனம் இன்றும் மீம்ஸ்களிலும், நிஜ வாழ்க்கையிலும் பயன்படுத்தப்படும் ஒரு தாரக மந்திரம்.

நீலாம்பரி - தமிழ் சினிமாவின் தலைசிறந்த வில்லி: படையப்பா படத்தின் மாபெரும் வெற்றிக்கு ரஜினிகாந்த் எவ்வளவு காரணமோ, அதே அளவு காரணம் 'நீலாம்பரி' ரம்யா கிருஷ்ணன். ரஜினிக்கு இணையாக ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தை வடிவமைத்து, அதை மக்கள் மனதில் பதிய வைத்தது கே.எஸ்.ரவிக்குமாரின் மாஸ்டர் ஸ்ட்ரோக். "மின்சார கண்ணா" பாடலில் நீலாம்பரியின் நடனமும், கிளைமாக்ஸில் அவர் வெளிப்படுத்தும் கோபமும் தமிழ் சினிமா உள்ளவரை பேசப்படும். உலகெங்கிலும் 210 பிரிண்டுகளுடன் வெளியாகி, அதுவரை இருந்த வசூல் சாதனைகளை எல்லாம் சுக்குநூறாக்கியது படையப்பா. அதேநேரம், மன்னன், அருணாச்சலம் உட்பட.. எப்போதுமே ஒரு பெண்ணுக்கு எதிராகத்தான் ரஜினி போட்டி போடுவது போல கதை எழுதுவீர்களா என்ற முணுமுணுப்பும் படத்தோடு சேர்ந்தே ஒலித்ததை மறுக்க முடியாது.

movie tamil cinema 90s kids 90


ஒருநாள் முதலமைச்சர் 'முதல்வன்'

அரசியல் களத்தை மையமாக வைத்து, கமர்ஷியல் கலவையோடு ஒரு படத்தை எப்படி எடுக்கலாம் என்பதற்கு முதல்வன் ஒரு சிறந்த உதாரணம். இதன்பிறகு இப்படி ஒரு அரசியல் படம் இதுவரை வரவில்லை என்பது படத்தின் உச்சத்திற்கு ஒரு சான்று. 'ஒரு நாள் முதலமைச்சர்' என்ற ஷங்கரின் ஒன்-லைன் ஐடியா, ஒட்டுமொத்த தமிழகத்தையும் கட்டிப்போட்டது. ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், மனிஷா கொய்ராலா நடித்த இப்படத்தில் ரகுவரனின் 'அரங்கநாதர்' கதாபாத்திரம் அச்சுறுத்தும் அரசியல்வாதியின் மறுஉருவம்.

சுஜாதாவின் வசனங்கள்: டிவி நிருபர் புகழேந்திக்கும், முதலமைச்சர் அரங்கநாதருக்கும் இடையிலான அந்த 'நேர்காணல்' (Interview) காட்சி இன்று வரை எந்தவொரு அரசியல் படமும் தொட முடியாத ஒரு பெஞ்ச்மார்க். நிருபர் தனது பதற்றத்தை குறைப்பதற்கு வாழைப்பழம் சாப்பிடுவது வரை இயல்புக்கு நெருக்கமாக எடுக்கப்பட்ட காட்சி அது.

இசை: ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் "முதல்வனே", "குறுக்கு சிறுத்தவளே", "ஷக்கலக்கா பேபி" என அத்தனை பாடல்களும் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தன. ஷக்கலக்கா பேபி எல்லாம் இப்போது கேட்டாலும் 2026ல் ரிலீசான பாட்டு என நினைக்க வைக்கும் பர்ஷ்னஸ்சோடு வந்தது. லஞ்சம், ஊழல் என்ற சாமானியனின் கோபத்தை திரையில் முதல்வன் தீர்த்து வைத்ததால், இப்படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஆனது.

movie tamil cinema 90s kids 90


அஜித் எனும் ஆளுமையின் அசுர வளர்ச்சி

1999-ஆம் ஆண்டு நடிகர் அஜித்குமாரின் திரைப்பயணத்தில் ஒரு மிக முக்கியமான திருப்புமுனை. காதல் நாயகனாகவே அறியப்பட்ட அவரை, ஒரு சிறந்த நடிகராகவும், மாஸ் ஹீரோவாகவும் உயர்த்தியது இந்த வருடம் தான்.

எஸ்.ஜே.சூர்யா என்ற அறிமுக இயக்குனரின் வருகை, தமிழ் சினிமாவிற்கு ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கி வைத்தது. அவர் இயக்கிய, வாலி திரைப்படத்தில், அஜித்தின் இரட்டை வேடம் (அதில் ஒன்று காது கேளாத, வாய் பேச முடியாத வில்லன்), சிம்ரனின் எதார்த்தமான நடிப்பு, ஜோதிகாவின் அறிமுகம் என ரசிகர்களுக்கு ஒரு புதுமையான திரில்லர் அனுபவத்தைக் கொடுத்தது. தேவாவின் பிஜிஎம் (BGM) திரையரங்குகளை அதிர வைத்தது. அஜித்திற்கு சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதையும் பெற்றுத் தந்தது.

movie tamil cinema 90s kids 90


நிஜமாக மாறிய காதல்: 'அமர்க்களம்'

சரண் இயக்கத்தில் அஜித், ஷாலினி நடித்த 'அமர்க்களம்', அஜித்தை ஒரு முழுமையான ஆக்‌ஷன் ஹீரோவாக நிலைநிறுத்திய படம். கோபக்கார இளைஞன் என்ற கதாப்பாத்திரத்திற்கு அச்சு எடுத்து வார்த்ததை போல இருந்தார் அஜித்.

'வாசு' என்ற ரௌடி கதாபாத்திரத்தில் அஜித்தின் முரட்டுத்தனமான நடிப்பும், பரத்வாஜின் இசையில் அமைந்த "சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்", "மேகங்கள் என்னைத் தொட்டு" போன்ற பாடல்களும் இளைஞர்களின் தேசிய கீதமாக மாறின. எல்லாவற்றிற்கும் மேலாக, அஜித்தும் ஷாலினியும் இந்த படத்தின் படப்பிடிப்பின் போதுதான் காதலிக்கத் தொடங்கினர் என்பது ரசிகர்களுக்கு கூடுதல் இனிப்பு.

இதே வருடத்தில் வெளியான உன்னை தேடி, மற்றும் ஒரு சிறிய கெஸ்ட் ரோலில் அஜித் வந்து மனதை திருடிய, நீ வருவாய் என ஆகிய படங்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன.

மில்லினியம் வருடத்தை நெருங்கிய அந்த காலகட்டத்தில் சாஃப்ட் ரொமான்ஸ் ஹீரோக்கள் மதிப்பிழக்க தொடங்கி, ஆக்ஷன் ஹீரோக்கள் மதிப்பு பெறத் தொடங்கியிருந்தனர். அதை அஜித் சரியாக பயன்படுத்திக்கொண்டார். பிரசாந்த் தவறவிட்டது இந்த பஸ்சைதான். அவர் கோபக்கார இளைஞராக ஹரி இயக்கத்தில், "தமிழ்" திரைப்படத்தில்தான் தோன்றினார், அதற்குள்ளாக ரசிகர்களின் பஸ், விஜய், அஜித் ஆகியோரை ஏற்றி கிளம்பியிருந்தது.

movie tamil cinema 90s kids 90

இளைய தளபதியின் எமோஷனல் பயணம்

விஜய் என்றதுமே 'ஆக்‌ஷன்' என்று தற்போதைய தலைமுறை நினைத்தாலும், 90-களின் இறுதியில் அவர் ஒரு மிகச்சிறந்த 'Family & Romantic' ஹீரோ. எழில் இயக்கத்தில் விஜய், சிம்ரன் நடித்த இப்படம் காதலின் வலியை, தியாகத்தை மிக அழகாகச் சொன்னது. 'குட்டி' என்ற கதாபாத்திரத்தில் விஜய் காட்டிய முதிர்ச்சியும், கண்பார்வையற்ற பெண்ணாக 'ருக்மணி' கதாபாத்திரத்தில் சிம்ரனின் அபார நடிப்பும் ரசிகர்களை கண்ணீரில் ஆழ்த்தின.

எஸ்.ஏ.ராஜ்குமாரின் இசையில் "இன்னிசை பாடிவரும்", "மேகமாய் வந்து" ஆகிய பாடல்கள் இன்றும் பலரின் இரவு நேரத் தாலாட்டுகள். இப்படம் கேரளாவிலும் 100 நாட்களுக்கு மேல் ஓடி விஜய்க்கு அங்கு ஒரு பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொடுத்தது.

இதே ஆண்டில் விஜய்யின் மின்சார கண்ணா, நெஞ்சினிலே ஆகிய படங்களும் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றன. நெஞ்சினிலே படத்தில் ஆக்ஷன் கதாப்பாத்திரம் விஜய்க்கு. ஒருபக்கம் சாப்ட்டான படங்களை நடித்தபடியே ஆக்ஷனுக்கு அஜித்தை போலவே ஷிப்ட் ஆகிவிட்டார் விஜய்.

movie tamil cinema 90s kids 90


ஒரு 'சியான்' பிறந்தான்

ஒரு நடிகன் தனது வாழ்நாளின் ஒரு பகுதியையே ஒரு படத்திற்காக அர்ப்பணித்து, அதன் மூலம் ஒட்டுமொத்த திரையுலகையும் திரும்பிப் பார்க்க வைத்த சரித்திரம் சேது.

பாலா என்ற அறிமுக இயக்குனரின் முரட்டுத்தனமான படைப்பு. 10 வருடங்களாக ஒரு பிரேக்கிற்காக காத்திருந்த விக்ரமிற்கு, 'சியான்' என்ற அடையாளத்தை பெற்றுத் தந்த படம். கல்லூரி ரௌடியாக முதல் பாதியிலும், மனநலம் பாதிக்கப்பட்ட ஆசிரமவாசியாக இரண்டாம் பாதியிலும் விக்ரம் காட்டிய நடிப்பு அசுரத்தனம்.

இளையராஜாவின் பின்னணி இசை படத்திற்கு ஒரு ஆன்மாவைக் கொடுத்தது. எந்த ஒரு கமர்ஷியல் சமரசமும் இல்லாமல், ஒரு சோகமான கிளைமாக்ஸைக் கொண்டு வந்தாலும், மக்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று தேசிய விருதையும் வென்றது சேது. இந்த படத்திற்கு பிறகு விக்ரம் கேரியர் உச்சத்திற்கு போனது. வெற்றி மேல் வெற்றி குவிந்தது.

movie tamil cinema 90s kids 90


ஏ.ஆர்.ரஹ்மானின் இசை மழை

1999-ஆம் ஆண்டை ஏ.ஆர்.ரஹ்மானின் வருடம் என்று சொன்னால் அது மிகையாகாது. படையப்பா, முதல்வன் தவிர்த்து இன்னும் பல இசைக்காவியங்களை அவர் இந்த ஆண்டில் வழங்கினார்.

காதலர் தினம்: இன்றைக்கும் பொருந்தும், இன்டர்நெட் காதல் என்ற கான்செப்டை முதன்முதலில் பேசிய தமிழ்ப் படம் இதுதான். குணால், சோனாலி பிந்த்ரே நடித்த இப்படத்தில் "ரோஜா ரோஜா", "காதலெனும் தேர்வெழுதி", "என்ன விலை அழகே" என ஒவ்வொரு பாடலும் ஒரு செதுக்கப்பட்ட சிற்பம். புல்லாங்குழலில் தேனை ஊற்றி காதுக்கு அருகில் ஊற்றியது போல புலன்களை கொள்ளை கொள்ளச் செய்த பாடல்கள்.

சங்கமம்: கர்நாடக இசைக்கும், நாட்டுப்புற கலைக்கும் இடையிலான போராட்டத்தை மையமாக வைத்து சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய படம். ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தேசிய விருதைப் பெற்றுத் தந்த "மழைத் துளி மழைத் துளி", "மார்கழி திங்கள்" பாடல்கள் காலத்தை வென்றவை. விந்தியா மற்றும் ரகுமான் நடித்த இப்படம், டீசன்ட் ஹிட் அடித்தது.

ஜோடி: பிரஷாந்த், சிம்ரன் ஜோடியாக நடித்த ஃபீல் குட் மூவி. ரஹ்மானின் ஹிந்திப் படமான 'டோலி சஜா கே ரக்னா'வின் பாடல்களைத் தழுவி தமிழுக்கு கொண்டு வந்தார்கள். "ஒரு பொய்யாவது சொல் கண்ணே" பாடல் இன்றளவும் காதலர்களின் பேவரிட்.

என் சுவாசக் காற்றே / தாஜ்மஹால்: அரவிந்த் சாமி, இஷா கோபிகர் நடித்த என் சுவாசக் காற்றே படத்தில் "தீண்டாய் மெய் தீண்டாய்", பாரதிராஜா இயக்கிய தாஜ்மஹால் படத்தில் "ஈச்சி எலுமிச்சி" என ரஹ்மானின் இசை ராஜ்ஜியம் 1999-ல் கொடிகட்டிப் பறந்தது.


இதமான காதல்களும், சிரிப்பலைகளும்

மாஸ் படங்கள், சீரியஸான படங்கள் ஒருபுறம் இருக்க, மனதை லேசாக்கும் பல ஃபீல் குட் காதல் மற்றும் காமெடி படங்களும் 1999-ல் வெளிவந்தன.


பூவெல்லாம் கேட்டுப்பார்

சூர்யா - ஜோதிகா ஜோடி முதன்முதலில் இணைந்த படம். வசந்த் இயக்கிய இப்படத்தில், யுவன் ஷங்கர் ராஜாவின் இசை ஒரு புதிய ட்ரெண்டை உருவாக்கியது. "சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே" பாடல் இளைஞர்களை கட்டிப்போட்டது.

movie tamil cinema 90s kids 90


நீ வருவாய் என

பார்த்திபன், தேவயானி, அஜித் நடித்த இப்படம், காதலின் மற்றொரு பரிமாணத்தை காட்டியது. எதிர்பாராத கிளைமாக்ஸ், பார்த்திபனின் எதார்த்தமான நடிப்பு, ரமேஷ் கன்னாவின் காமெடி என ஒரு கச்சிதமான பேக்கேஜ்.


விரலுக்கேத்த வீக்கம்

வி.சேகர் இயக்கத்தில் லிவிங்ஸ்டன், வடிவேலு, விவேக் நடித்த நடுத்தர வர்க்கக் குடும்பங்களின் வாழ்வியலை பிரதிபலித்த முழுநீள நகைச்சுவைப் படம். "ஒரு ஆம்பளையா எவ்ளோ அவமானத்த தாங்குறான்" போன்ற வசனங்கள் இன்றும் நிஜ வாழ்வில் பொருந்திப் போகக்கூடியவை.

இதுதவிர, பிரஷாந்தின் பூமகள் ஊர்வலம், சரத்குமாரின் ஒருவன், விஜயகாந்தின் கள்ளழகர், சத்யராஜின் சுயம்வரம் (கின்னஸ் சாதனைக்காக 24 மணிநேரத்தில் எடுக்கப்பட்ட படம்) என பல படங்கள் 1999-ஐ ஒரு வண்ணமயமான ஆண்டாக மாற்றின.


ஒரு சகாப்தத்தின் நினைவுகள்

இன்று தமிழ் சினிமா தொழில்நுட்ப ரீதியாக பன்மடங்கு வளர்ந்துவிட்டது. பான்-இந்தியா (Pan-India) ரிலீஸ், 1000 கோடி கிளப் வசூல் என பிரம்மாண்டங்கள் சாதாரணமாகிவிட்டன. ஆனால், 1999-ஆம் ஆண்டு தியேட்டர்களில் நாம் அனுபவித்த அந்த 'மேஜிக்' மீண்டும் கிடைக்குமா என்பது சந்தேகமே.

டிக்கெட் கவுண்டரில் முண்டியடித்து சட்டை கிழிந்து படம் பார்த்த அந்த நாட்கள், இடைவேளையில் விற்ற முட்டை போண்டா வாசனை, படத்தின் கிளைமாக்ஸ் முடிந்தவுடன் எழுந்து நின்று கைதட்டிய கூட்டத்தின் சத்தம் - இவை அனைத்தும் 90s கிட்ஸ்களின் மனதில் என்றுமே அழியாத கல்வெட்டுகள்.

படையப்பாவின் கம்பீரத்தையும், வாலியின் விறுவிறுப்பையும், முதல்வனின் பிரம்மாண்டத்தையும், துள்ளாத மனமும் துள்ளும் படத்தின் கண்ணீரையும், சேதுவின் வலியையும் 25 ஆண்டுகள் கடந்த பின்னும் நாம் சிலாகித்துப் பேசுகிறோம் என்றால், அதுதான் அந்தப் படைப்புகளின் உண்மையான வெற்றி! 1999 வெறும் ஒரு வருடமல்ல... அது தமிழ் சினிமாவின் ஒரு அழிக்க முடியாத காவியம்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+