90களின் சினிமா: ஒரு பொன்னான காலம்! நோ ஃபேக் வசூல்! நோ ரசிகர்கள் சண்டை
90'ஸ் கால கட்டம்... தமிழ் சினிமாவும் ரசிகர்களின் மனநிலையும் ஆரோக்கியமான முறையில் இருந்த ஒவ்வொரு பொன்னான நாளும் இன்றைக்கு கனவாய் மாறியிருக்கிறது. பொங்கல், தீபாவளி, தமிழ் புத்தாண்டு- என்றெல்லாம் பண்டிகை வந்தால், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, சரத்குமார், கார்த்திக், அர்ஜுன் என அனைவரின் படங்களும் ஒரே நேரத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய காலம் அது.
வசூல் என்பது போட்டியாக இல்லை; எல்லா படங்களுக்கும் மக்கள் ஆதரவு அளித்து, திரையரங்குகளும் நல்ல வருவாய் ஈட்டிய சூழல் அது.

வசூல் சண்டைகள் இல்லை. பொய்யான வசூல் நிலவரங்கள் இல்லை. "என் நடிகன்தான் சிறந்தவர்" என்ற அடிப்படையிலான சண்டைகள் இல்லை. அந்த காலம் ஒவ்வொரு ரசிகரின் மனதில் சினிமா என்ற கலைக்கும் மற்றவர்களுக்குமான மரியாதைக்கும் இடம் இருந்ததைக் காட்டுகிறது.
இன்று சமூக வலைதளங்கள் வளர்ந்த பிறகு, ரசிகர்கள் உணர்வுகளை, சினிமா தரத்தை விட சண்டை சார்ந்த ஒரு பிராண்ட் போராட்டமாக மாற்றிவிட்டார்கள். வசூல் என்பது ஒரு போலி பிம்பமாக மாறிவிட்டது. ஒரு நடிகரின் படம் வெளிவந்தால், மற்ற நடிகரின் ரசிகர்கள் திட்டமிட்டு எதிர்மறை விமர்சனம் செய்கிறார்கள்.
பாராட்டு என்பது கிடையாது. விமர்சனம் மூலம் பழிவாங்கும் கலை என்பதே வளர்ந்து வருகிறது. இன்று திரை அரங்குகள் மற்ற நடிகர் படங்களுக்கு கிடைப்பதில்லை. சமூகவலைதளம் மூலம் பொய்யான வசூல் பிம்பம் கட்டமைத்து தங்கள் நடிகர் தான் கெத்து என்றும், என் நடிகன் படம் வரும் போது போட்டிக்கு எந்த படம் வந்தாலும் அந்த படத்திற்கு எதிர்மறை விமர்சனம் செய்து அந்த படத்தின் உண்மை தன்மையை குறைப்பது போன்ற அவலங்கள் நடந்து வருகிறது.
சினிமா ஒரு கலை; அது ஒரு மனிதனை மகிழ்விக்கிறது. ஆனால் இன்று அது ஒரு மகத்தான வெறுப்பு மேடையாக களமிறங்கியுள்ளது.
ஒற்றுமையே வளர்ச்சி!
ஒரே ஒரு நடிகரின் படம் பண்டிகை நாட்களில் எல்லா திரையரங்குகளையும் ஆக்கிரமிக்கிறது என்றால், அது திரையரங்கு உரிமையாளர்களுக்கும், மக்களுக்கும் உண்மையான நன்மை தரக்கூடியது அல்ல. ஒரு பண்டிகையின் போது பல தரப்பட்ட திரைப்படங்கள் திரைக்கு வருவது வழக்கம்தான். அதில் தான் ரசிகர்களுக்கு தேர்வும் கிடைக்கும், திரையரங்குகளுக்கு வருவாயும் கிடைக்கும்.
ஒரு நடிகரின் படம் மட்டுமே ஓட, மற்ற ரசிகர்கள் திரையரங்குக்கு வரமாட்டார்கள்; இது வர்த்தக ரீதியிலும், கலாசார ரீதியிலும் பாதிப்பை ஏற்படுத்தும். இதில் திரையரங்கு உரிமையாளர்கள், மற்ற நடிகர்களின் ரசிகர்கள்-இவர்கள் ஒத்துழைக்க வேண்டியது மிக அவசியம்.
ஒவ்வொரு நடிகருக்கும் தங்களுக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த மனப்பான்மையுடன் ஒற்றுமையாக இருந்தால், திரையுலகும் வளர்ச்சி பாதையில் நடக்க முடியும். அன்று ஆரோக்கிய போட்டிகள் இருந்தன, வசூல் நிலவரம் வெளிப்படையாக செய்திதாளில் வெளிவந்தன.
ஆனால், இன்று விரோத மனப்பான்மை, "மற்ற நடிகரின் படம் ஓடக்கூடாது" என்ற எண்ணம், திட்டமிட்டு விமர்சனம் செய்வது, தமிழ் சினிமா வளர வேண்டும் என்ற நம்முடைய உண்மையான ஆசை இருந்தால், களத்தில் ஆட எல்லாருக்கும் வாய்ப்புகள் சமனாக கொடுத்து நகர்ந்தால் ஒவ்வொருவருக்கும் இடமுண்டு.
-குரு கிருஷ்ணன்












Click it and Unblock the Notifications